Thursday, February 19, 2015
சுவர்க்கத்தின் சாவி..!! -நிஷா மன்சூர்
சுவர்க்கத்தின் சாவி
எங்களிடம் உள்ளது என்றார்
மூத்த இயக்கத்தின் தானைத்தலைவர்
இல்லை சாவி எங்களிடம்தான் உள்ளதென்றார்
அதிலிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்டு களமாடிய
சொல்லின் செல்வர்
இளைஞர்களே ஒன்றுகூடுங்கள்,
சாவி என்னிடம்தானென்றார்
இளைஞர்களின் லட்சிய புருஷனாக
தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட
தூய்மைவாதப் பெருந்தலைவர்
தூய்மைவாதம் அசுத்தவாதமாகி விட்டதென்று
தனி இயக்கம் கண்ட பரிசுத்த தூய்மைவாதத் தலைவர்
இறுமாப்புடன் அறைகூவல் விடுத்தார் ,
"சாவி எங்களிடம்"
இன்னும் இளைஞர்களின் நாடித்துடிப்பு இயக்கமும்
முதியோர்களின் இதயத்துடிப்பு இயக்கமும்
நடுத்தர வயதுக்காரர்களின் நரம்பு முறுக்கு இயக்கமும்
ஏழைகளின் கனவுக்கார இயக்கமும்
கிலாஃபத் மறுமலர்ச்சியின் மீள்கனவு இயக்கமும்
புரட்சிப்புழுதி பறக்கடிக்கும்
சோஷலிச மார்க்கப் புத்துயிர்ப்பு இயக்கமும்
விஞ்ஞான ரீதியில் மார்க்கம் பேசும் விஞ்ஞான இயக்கமும்
அழைப்புப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட
அழைப்பு வீரர்களின் இயக்கமும்
ஆன்மீக தத்துவஞான சமாதான இயக்கமும்
சாவி தம்மிடம்தான் உள்ளதென கூக்குரல்கள் எழுப்ப
சுவர்க்கத்தைப் பூட்டிவைத்தது யாரென்று
நேர்வழியடைந்தோர் குழம்பிக் கொண்டிருக்க,
இவற்றைக் கிழித்துக்கொண்டு
சட்டென்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது,
அது
"இவ்விடம் கள்ளச்சாவிகள் தயார் செய்யப்படும்"
என்கிற சாத்தானின் குரல் ...!!
நிஷா மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment