Wednesday, February 18, 2015

தலைத் துண்டு - அபு ஹாஷிமா

காலையில் பஜ்ர் தொழுகை முடிந்து தொழுகையாளிகளெல்லாம் பள்ளியை விட்டுப் போனபிறகு அவசர அவசரமாக கிளம்பினார் பிலால் ஹசன் சாஹிப் .

" இப்பவே நேரம் வெளுத்துப்போச்சே" என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டவர் புஹாரி டீக் கடையில் வழக்கம்போல் ஒரு சாயா வாங்கிக் அவசர அவசரமாகக் குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

அவரது நடையில் இன்றைக்கு கொஞ்சம் தளர்ச்சி.
நேத்து சாயங்காலம் மையத்தை கசப் இறக்கி குளிப்பாட்டி கபன் பொதிந்து அடக்கம் செய்வது வரை கூடவே நின்றதில் உடம்பெல்லாம் பயங்கர அசதி.

அது என்னவோ ஒவ்வொருமுறை மைய்யத்துக்கான காரியங்களை செய்து முடிக்கும்போதும் உடம்பெல்லாம் அப்படி ஒரு தளர்ச்சி வந்து ஒட்டிக் கொள்வது பிலால் சாஹிபுக்கு இன்றுவரை புரியாத ஆச்சரியமாகவே இருக்கிறது.
மனதுக்குள் எதையெதையோ அசை போட்டபடி பிஸ்மி ஹோட்டலுக்கு வநது சேர்ந்தார் ஹசன் மோதியார்.
முதலாளி இப்ராஹிம் இவருக்காகவே காத்திருந்ததுபோல் ...
" மோதியாரே... சீக்கிரமா அறுங்க.
நெரம் ஆயிப்போச்சு " என்று அவசரப்படுத்தினார்.
" சரி...சரி ..." என்று கூறிக்கொண்டே ஹோட்டலின் உள்ளே வேகமாக நடந்து ஒதுக்குப்புறமான ஹோட்டலின் வெளியிடத்திற்கு வந்தார் . அங்கே கட்டப்பட்டிருந்த இரண்டு கிடாய்களை ஹோட்டல் பணியாள் உதுமான் பிடித்துக் கொள்ள பிலால் சாஹிப் அவற்றின் கழுத்தில் கத்தியை வைத்து " பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்" என்று சொல்லி அறுத்தார்.

அவரது வேலை முடிந்தது.
மற்ற காரியங்களை உதுமான் பார்த்துக் கொள்வான்.
ஏன் ? கிடாயையும் உதுமான் அறுக்கமாட்டானா ?
அறுப்பான். ஆனால் மோதினார் வந்து கிடா அறுப்பது ஹோட்டலுக்கு நல்ல பெயரைத் தரும் என்பதால் இந்த ஏற்பாடு.
முதலாளி கொடுக்கும் நூறு ரூபாயை சாயங்காலம் அசருக்குப் பிறகு வந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

இங்கே முடித்து விட்டு மதினா ஹோட்டலுக்கு போக வேண்டும.
அங்கே ஒரு ஆடு அறுத்தால் போதும். அம்பது ரூபாய் கிடைக்கும்.
பிலால் நடக்க ஆரம்பித்தார்.

பிலால் சாஹிபுககு வயசு ஐம்பது ஆகிறது.
நல்ல கட்டுமஸ்தான தேகம்.
யாருக்கும் எதற்கும் பயப்படமாட்டார்.
வர்மக் கலையும் கொஞ்சம் தெரியும்.
வாப்பா பிலாலாக இருந்து மரித்துப் போனார்.
ஹசனும் அதிகம் படிக்கவில்லை. ஊருக்கு பிலால் வேண்டும். ஜமாத் தலைவர் நைசாகப் பேசி ஹசனை மோதியார் ஆக்கி விட்டார்.
25 வயசு வாட்டசாட்டமான ஹசன் மைய்யத்துகளை லாகவமாக குளிப்பாட்டி கபன் செய்வது உயிரோடுள்ள எல்லோருக்குமே பிடித்துப் போய் விட்டது.
என்றாலும்
எல்லா பிலாலையும்போல ஹசன் பிலாலுக்கும் வறுமையான வாழ்க்கைதான்.

ஜமாத்தில் கொடுக்கும் சம்பளத்தைக் கொண்டு குடும்பம் நடத்துவது கஷ்டம்.
இப்படி மைய்யத்து , ஃபாத்தியா வீடு , கிடா அறுப்பது ,கோழி அறுப்பது போன்றவற்றில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் குடும்ப செலவை சமாளிக்க வேண்டும.

சில சமயங்களில் கல்யாண ஆர்டர் எடுக்கும் கசாப்புக்கடை சலீம்பாய் பிலால் சாஹிபை உதவிக்குக் கூப்பிடுவார்.
அன்றைக்கு மட்டும் சுளையாக ஆயிரம் ருபாய் கிடைக்கும். மற்றபடி வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் கசாப்புக் கடையில் கூட்டம் அலைமோதும். அன்றும் மதியம்வரை ஹசன் மோதியார் கசாப்புக் கடையில் வேலை செய்வார். அங்கே எல்லா ஜாதி மக்களும் கறி வாங்க வருவார்கள்.

அப்படித்தான் ஒருநாள் தொடர்ந்து ஏழெட்டு கிடாய்களை அவர் அறுத்துக் கொண்டிருக்கும்போது வாடிக்கையாளர் கணேசன் அவரையே ஆச்சரியத்தோடு பார்த்தார். பிறகு... கணேசன் அந்த கேள்வியை ஹசனிடம் கேட்டார்.
" ஏன் பாய்... தலையில இப்படி ஒரு சிவப்பு துண்டை கட்டிகிட்டு இநத ஆட்டைஎல்லாம் அறுக்கியே. உன் மனசுலே இரக்கமே கிடையாதா ? இந்த ரத்தத்தைப் பார்த்தா எனக்கே ஒருமாதிரி மயக்கம் வருது. உன்னால எப்படிபாய் இந்த வேலையை கூச்சமில்லாம செய்ய முடியுது.? "
ஹசனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.ஆனாலும் தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்.

" சார் ... இநத மாமிசம் சாப்பிடுறது எங்களுக்கு ஹலால். அத அறுக்காம சாப்பிட முடியாது.
இரக்கம் பார்த்தா அறுக்க முடியாது. நீங்ககூட கறி சாப்பிட முடியாது " என்று சொன்னார்.
" அறுக்கிறது வேறே ... சாப்பிடுவது வேறே ... "
என்று கணேசன் சொல்ல ...
" இவ்வளவு இரக்கப்படுற ஆளு எதுக்கு சார் கறி சாப்புடுறே..." என்ற ஹசனின் கோபமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போன கணேசனின் மனதில் ஹசன் மோதியார் ஒரு கொடூர மனிதனாகிப் போனார்.

அதன் பிறகு கணேசனுக்கு இவரைக் கண்டால் ஆகாது. இரக்கமே இல்லாத ஆள் என்று முடிவே பண்ணிவிட்டதால் அவரை வெறுப்போடுதான் பார்ப்பார். பேசவும் மாட்டார்.

பிலால் ஹசன்..." இன்றைக்கு சீக்கிரம் வீட்டுக்கு சென்று உறங்க வேண்டும் " என்று எண்ணிக் கொண்டு சோர்வுடன் மதீனா ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்.

வழக்கம்போல் அங்கேயும் ஒரு ஆட்டை அறுத்துவிட்டு ஹோட்டலில் கொடுத்த டீயை குடித்துக் கொண்டிருக்கும்போதுதான் டமார் என்ற அநத சத்தம் கேட்டது.

திடுக்கிட்டு எல்லோரும் வெளியே ஓடி வந்து பார்த்தால் பைக்கில் வேகமாக வநத ஒரு பையனின் மீது ஒரு டெம்போ மோதி
பைக் அலங்கோலமாக சிதைந்து கிடந்தது.

அநத பையன் கீழே விழுந்து கிடந்தான் . அவன்
தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
காலை ஏழுமணி என்பதால் ரோட்டில் அவ்வளவு கூட்டமில்லை.
பையன் தலயில் வழிந்த ரத்தத்தை நிறுத்தி கட்டுப்போட அங்கே யாரிடமும் துணியில்லை.
யாரும் அதற்காக முயற்சிக்கவுமில்லை.
ஆளுக்கு ஆள் அபிப்பிராயம் மட்டும் சொல்லிக் பொண்டிருந்தார்கள்.

அப்போது சாயா கிளாசை போட்டுவிட்டு ஓடிவந்த பிலால் ...
" யா அல்லாவே .. யார் பெத்த பிள்ளையோ...இப்படி ரத்தம் வழியிதே .."
என்று சொல்லிக்கொண்டே தன்னிச்சையாக தன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அநத பையனின் தலையில் தலைப்பாகை போல் இறுக்கமாக ஒரு கட்டு கட்டினார் . இத்தம் வருவது நின்றது.
பையன் மயக்கமாகி இருந்தான்.

டேம்போகாரன் ஓடிவிட்டான்.
உதவிககு வர ஆட்கள் தயங்கி விலகினார்கள்.
பிலால் சாஹிப் தனக்குத் தெரிந்த ஒரு ஆட்டோவை கூப்பிட்டு அநத பையனை ஆட்டோவில் ஏற்றி பக்கத்திலிருந்த ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்த்தார்.

பையன் யார் எவர் என்று தெரியாததால் தன் பெயரையும் முகவரியையும் கொடுத்தார்.
வேறு யாரும் இல்லாததால் பிலால் சாஹிப் பையனின் பக்கத்திலேயே காத்திருந்தார்.
லுஹருக்கு பாங்கு சொல்லக்கூட அவரால் பள்ளிக்குப் போகமுடியவில்லை.
ஆஸ்பத்திரியிலேயே தொழுதார்.

மதியம் இரண்டு மணிக்குமேல்தான் விஷயமறிந்து பையனின் குடும்பம் ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்தது.
அதன்பிறகு அவர்களிடம் சொல்லிவிட்டு பிலால் சாஹிப் வீட்டுக்குக் கிளம்பினார்.

அடுத்தவாரம் ஜாயிற்றுக் கிழமை.
சலீம்பாயின் கசாப்புக் கடையில் மும்முரமாக ஆடு அறுத்துக் கொண்டிருந்தார் பிலால்.
அங்கே கறி எடுக்க வந்த கணேசன்
வழக்கத்துக்கு மாறாக பிலாலைப் பார்த்து சிநேகத்துடன் புன்னைகைத்தார்.
பின்னர் மெதுவாக பக்கத்தில் வநது பிலாலின் கையைப் பற்றிக் குலுக்கினார்.
பிறகு சொன்னார்...
" பாய்... உங்களை தப்பா பேசியிருந்தா ...
மனவருத்தப்படுத்தி இருந்தா தயவு செய்து என்னை மன்னிச்சுருங்க.
அன்னைக்கு நீங்க செய்த உதவி பெருசு.
ஒரு உயிரை காப்பாத்தின உதவி.
உங்களுக்கு இரக்கமே இருக்காதோன்னு நான் நெனச்சேன். அது தப்புன்னு தெரிஞ்சுகிட்டேன்.
ஆனால் இவங்கல்லாம் இரக்கம் உள்ளவங்க அப்படின்னு நான் நெனச்சவங்க யாரும் இரக்கம் உள்ளவங்க இல்லே..."
ஹசனுக்கு ஒன்றும் புரியவில்லை.
" என்ன சொல்றீங்க சார் ? " அப்படின்னு புரியாமல் கேட்டாரு.

" போன வாரம் டெம்போ மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு பையனை ஆஸ்பத்திரியில் சேர்த்தீங்களே....அந்த ஆஸ்பத்திரி டாக்டர் நான்தான்."

" இதுவரை இரக்கமில்லாத ஆளுன்னு உங்களை நெனச்சென். ஆனா நீங்கதான் இரக்கத்தோட அந்த பையனை காப்பத்தினீங்க.
உங்க தலைத் துண்டைப் பார்த்து உங்களை மத வெறியர்னு நெனச்சேன்.
ஆனால்...நீங்க அநத துண்டையே எடுத்து போட்ட கட்டுனாலதான் ரத்தம் வெளியே போகாமல் அந்த பையன் உயிர் பொழச்சிருக்கான்.
நீங்கதான் உண்மையிலேயே பெரிய மனுஷன்.
அன்னைக்கு நான் டாக்டரா சிகிச்சை கொடுத்தாலும் என்னோட ஆஸ்பத்திரிக்கு அநத பையனை கொண்டுவந்து சேர்த்து காப்பாத்தினது நீங்கதான் பாய்.
இதெல்லாம் அந்த பையனின் அப்பா மூர்த்தி சொல்லித்தான் எனக்குத் தெரியும். "

டாக்டர் கணேசன் பேசிக்கொண்டே போக
பிலால் சாஹிபுக்கு என்ன பதில் சொல்வது என்று ஒன்றும் புரியவில்லை.

சுருக்கமா ...
" அல்ஹம்துலில்லாஹ் " என்றார்.
*************

Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails