Tuesday, February 24, 2015

எண்ண அலைகள் !

-கவிஞர் சீர்காழி இறையன்பனார்

உருண்டை உலகின்

இருண்ட வாழ்வு

இடுக்கண் கொள்வதா?

சுரண்டல் இல்லா

சுகவாழ்வு

சோபிக்க வேண்டாமா?

இன்னல்கள் இடுக்கண்கள்

சூதுடன் வாதும் சேர்ந்தார்

சொன்னதைச் செய்திட

முனைந்திட வேண்டுமா?

கல்லறை சில்லரைக்

காசுக்குக் கண்விழித்தால்

வறுமையை மெய்ப்படுத்தும்

வழியாகும் அல்லவா?

நதியும் பரியும்

நட்பு கொண்டால்

வரியின் புலியும்

வெறிகொண்டால்

காடு என்னாகும்?

நாடு என்னாகும்?

மிஞ்சும் சஞ்சலம்

வஞ்சம் தஞ்சம் கொள்ளாது

அஞ்சும் சுகம் கெஞ்சும்

உலகம் நஞ்சாய் வெறுத்திடுமே!

கற்பூர ஒளி

உலகப் பிரகாசம்

பூத்து மகிழ்ந்திடுமே!

அற்புதம் ஆனந்தம்

அணிவகுத்து நிலவிடுமே!

நாடு முன்னேறச்

சுடரும் ஒளிதீபம்

புகழ் மேவத்

தேடும் நன்மை

கூடும் உயர் யாவும்

நாளும் போற்றிடுமே!

மனம் மெய்வாக்கு

மேன்மையின் போக்கு

தினம் உருவாகித்

தெளிவு தேடும்

கருவாகுமே!

தவநிலை கொண்டு

பவநிலை விரட்டும்

அவலநிலை அகற்றும்

அகத்தூய்மையாகுமே!



ஆலையில் பிழிந்த கரும்பு

ஆரமுதாய் சுவைத்தேனாய்

அழகு நிலாவாகுமே!

எண்ண அலைகள்

எட்டாத் தொலையாகும்!

எழுத்தின் எல்லை

ஏற்றத்தின் முல்லையாகும்!

பக்திக்கு முக்தி அமுதம்

பட்டினிக்குக் கூழ் அமுதம்!

புல்லுக்குப் பனியமுதம்

புத்திக்கு அறிவமுதம்!



கவலையைக் கருத்தில்கொண்டு

கண்ணீரைக் கைவசமாக்காதே!

சுமைகள் தாங்கும் சுமை தாங்கி

சுகம் தரும்

புன்னகை முகம் தரும்

பூத்திடச் சுகம் தரும்!

கனியும் கருணை

உணர்வு ஒன்றே

மனித குலத்தில் மலரட்டும்!

மனதில் என்றும் வளரட்டும்!

அழுது தொழுது

பழுதிலா நன்மை பெற்றிடவே

முழுமுதல் பொருளை

அருளைப் போற்றிடுவோமே!

நன்றி
இனிய திசைகள் /பிப்ரவரி 2015
by mail from:    Muduvai Hidayath
<muduvaihidayath@gmail.com>

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails