Wednesday, February 4, 2015

இனிய அணுகுமுறைதான் இன்றைய தேவை!

பேரா. ஜவாஹிருல்லாஹ் நடந்து கொண்ட விதம்!

சென்னை புத்தகத் திருவிழா! மாலை நேரம். கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐ எஃப் டி அரங்கில் அமர்ந்திருந்தேன்.

ஒருவர் என்னருகில் வந்து, “சார், நான் மணிவண்ணன், _____ நிறுவனத்தில் சீனியர் அதிகாரியாக இருக்கின்றேன்! ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ இங்கு எங்காவது இருப்பார்களா?” என்றார்.

எனது முகக்குறிப்பைப் பார்த்து விட்டு அவரே தொடர்ந்தார்:

“சார், அவர் ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்ட போதும் அவரது முகத்தில் அந்தப் புன்சிரிப்பு மாறவே இல்லை. அவர் விமர்சனங்களை எதிர்கொண்ட விதம், பின்னர் அவர் ஆற்றிய உரை, மத்திய பி.ஜே.பி அரசை அவர் விமர்சனம் செய்த பாங்கு அனைத்துமே எங்களைக் கவர்ந்து விட்டது சார்! எனக்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பிடிக்காது. ஆனால் அந்த நிகழ்சியில் திரு.ஜவாஹிருல்லாஹ் நடந்து கொண்ட விதம், பலகாலமாக நான் முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த அபிப்ராயங்கள் அனைத்தும் தவிடுபொடியாக்கி விட்டது!”

கேட்டுக் கொண்டிருந்த நான், “உங்கள் அலைபேசி எண்ணைக் கொடுங்கள்! அவர்களை உங்களோடு பேசச் சொல்கிறேன்” என்றதும் தனது அலைபேசி எண்ணைத் தந்தார். சகோ. ஜவாஹிருல்லாஹ்-வின் எண்ணைத் தொடர்பு கொண்டபோது பதில் இல்லாமல் இருந்தது.  சிறிது நேரம் கழித்து அவரே தொடர்பு கொண்டார்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின் திரு.மணிவண்ணன் குறித்துச் சொல்லிவிட்டு “அவரது அலைபேசி எண் தருகிறேன். அவரோடு பேச முடியுமா?" என்றேன். "அதைவிட வேறு என்ன வேலை அண்ணா?” என்றபடி தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு போனை வைத்து விட்டார்.

-oOo-

மறுநாள் காலை, திரு.மணிவண்ணன் என்னை அலைபேசியில் அழைத்துப் பேசினார்.

“செயல் வீரர் சார் நீங்கள். சும்மா தான் எனது அலைபேசி எண்ணைக் கேட்கின்றீர்களோ என எண்ணினேன். திரு.ஜவாஹிருல்லாஹ் என்னோடு பேசினார். மே மாதம் எங்கள் நிறுவனதில் நடைபெறும் விழாவுக்கு அவரை அழைக்கலாம் என முடிவு செய்துள்ளோம்.

துக்ளக் 45 ஆவது ஆண்டுவிழாவில் பேரா. ஜவாஹிருல்லாஹ் உரை

அன்று “துக்ளக்” விழாவில் நாங்கள் 200 பேர்கள் அவரைச் சந்தித்து பேசக் காத்திருந்தோம். ஆனால் அவர் நிகழ்ச்சி முடிந்ததும் புறபட்டுச் சென்று விட்டார். துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்களும் திரு.ஜவாஹிருல்லாஹ் குறித்து மிகவும் சிலாகித்துப் பேசினார்! அன்று நான் அவரைச் சந்தித்தது தெய்வ சங்கல்பம் என்றே சொல்ல வேண்டும். ஒரு தனி மனிதரின் நடத்தை, ஒரு சில மணித்துளிகளில் ஒரு ஒட்டு மொத்த சமூகத்தின் எனது கணிப்புகளை மாற்றி விட்டது என்றால் அந்தச் சந்திப்பு தெய்வ சங்கல்பம் தானே சார்” என்று முடித்தார் மணிவண்ணன்.

என் இனிய நண்பர்களே, இந்த இனிய அணுகு முறைதான் இன்றைய தேவை!

- சேயன் ஹமீது
நன்றி : Source : http://www.satyamargam.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails