கடன் என்பது பாரதூரமான விஷயம்
தமது உள்ளத்தில் எழும் சகல இச்சைளையும் பின்பற்றும் இன்றைய உலகில், நமது வாழ்க்கையின் அடிப்படை நோக்கத்தை மறந்து, இஸ்லாம் தடுக்கும் சில விஷயங்களில் நாமும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறோம். கடன் வாங்குவது இப்படிப்பட்ட ஒரு பாரதூரமான விஷயமாகும். இங்கு குறிப்பிடப்படுவது, வட்டிக்கு எடுக்கும் கடனைப் பற்றி அல்ல. அது ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆகையால் இங்கு குறிப்பிடப்படுவது வட்டியில்லாது கைமாற்றலுக்கு எடுக்கும் கடனை பற்றியே. இந்தக் கடனில் வட்டி சம்பந்தப்படவில்லை. இப்படிப் பட்ட கொடுக்கல் வாங்கலுக்கு மார்க்கத்தில் அனுமதியுண்டு, ஆனால் விரும்பத் தக்கதல்ல. அநேக மக்கள், கடன் வாங்குவதையும், கடன் பணத்தில் வாழ்வதையும் பற்றி மிகவும் இலேசாக எடுத்துக் கொள்கின்றனர். இக்கடன்கள் மிகவும் அவசர தேவைக்காக எடுக்கப் பட்டவைகள் அல்ல. மாறாக இப்போதிருக்கும் வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக, சமூகத்தில் மற்றவர்களுடன் போட்டியிட, இவ்வுலகின் தற்காலிக சுக போகங்களை அனுபவிப்பதற்காக கடனில் இவர்கள் சிக்குகிறார்கள். கடன் வாங்குவதும், கடன்பட்ட வாழ்க்கை வாழ்வதும் மிகவும் பாரதூரமான விஷயமாகும். இது மிகவும் பாரதூரமான விஷயமென எச்சரிக்கை செய்யும் இஸ்லாம், கடனை விட்டும் முடிந்த அளவு விலகும்படி, அல்லது தடுத்துக் கொள்ளும்படி உபதேசிக்கிறது.
முஹம்மத் (ஸல்) அவர்கள் கடனை விட்டும் அதிகமாக பாதுகாப்புத் தேடி இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்.
“அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் மா தம் வல் மஃரம்.” (யா அல்லாஹ் கடன் பாரத்தை விட்டும் உன்னிடமே பாதுகாப்பு தேடுகிறேன்.) ஒரு முறை அன்னாரிடம் “ நீங்கள் கடன் பாரத்தை விட்டும் எத்தனை முறை பாதுகாவல் தேடுகிறீர்கள்?”என்று ஒருவர் வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரு மனிதன் கடனில் சிக்கினால், அவன் பொய் பேசுகிறான். அவன் வாக்குக் கொடுத்து அதனை மீறுகிறான்.” என்று பதில் கூறினார்கள். ஆதாரம் புஹாரி, முஸ்லிம்.)
கடன் பட்ட ஒருவன் கடனை திருப்பிக் கொடுக்கும் வரை சுவர்க்கத்தில் பிரவேசிக்க மாட்டான்.
முஹம்மத் இப்ன் ஜஹஷ் (ரழியல்லாஹு அன்ஹு) இவ்வாறு அறிவிக்கிறார்கள். “ஒரு நாள் ரஸூல் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருக்கையில், அன்னார் வானத்தை நோக்கி தலையை உயர்த்திக் கொண்டிருந்து, பின் தன் உள்ளங் கையை நெற்றியில் வைத்துக் கொண்டு, ‘ஸுப்ஹானல்லாஹ்! எவ்வளவு கடுமையான சட்டம் எனக்கு அறிவிக்கப் பட்டுள்ளது!.’ என்று கூறினார்கள். நாங்கள் பயத்தின் காரணமாக வாய் மூடி அமர்ந்திருந்தோம். அடுத்த நாள் காலையில் ‘அல்லாஹ்வின் ரசூல் (ஸல்) அவர்களே! நேற்று உங்களுக்கு அறிவிக்கப் பட்ட கடுமையான சட்டம் என்ன?’ என்று வினவினேன். அதற்கு நபியவர்கள், ‘யாருடைய கையில் எனது உயிர் இருக்கிறதே அவர் மீது ஆணையாக, ஒரு மனிதன் பத்ர் யுத்தத்தில் அல்லாஹ்வுக்காக கொல்லப் பட்டு, உயிர்கொடுத்து எழுப்பப் பட்டு, மீண்டும் அல்லாஹ்வுக்காக கொல்லப் பட்டு, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப் பட்டு, மீண்டும் அல்லாஹ்வுக்காக கொல்லப் பட்டாலும், அவனுக்கு கடன் இருப்பின், அந்தக் கடனை தீர்க்கும் வரை அவன் சுவர்க்கம் புக மாட்டான்.’ என்று கூறினார்கள்.” ஆதாரம் அந் நஸாயி.
அநாவசியமாக கடன் வாங்குவது அல்லாஹ்வின் பெரும் கோபத்துக்கும், தண்டனைக்கும் காரணமாகிறது.
ரஸூல் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “தனக்கு போதுமான அளவு இருக்கும் போது மக்களிடம் பணம் கேட்கும் ஒருவன், நரகத்தின் நெருப்புத் தனலைத் தான் அதிகமாக கேட்கிறான்.” அந்த சந்தர்ப்பத்தில் சஹாபாக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவன் மக்களிடம் கேட்காமல் இருப்பதற்கு அவனிடம் இருக்க வேண்டிய அளவு என்ன?” என்று வினவினார்கள்,
அதற்கு அன்னார், “பகல் உணவுக்கும், இரவு உணவுக்கும் தேவையான அளவு.” என்று பதில் கொடுத்தார்கள். அறிவிப்பவர் அபுதாவூத். ஸஹீஹ் ஹதீஸ்.
அன்னார் மேற் கொண்டும் இவ்வாறு கூறினார்கள். “தன்னிடம் போதுமான பணம் இருக்கும் போது எவரொருவர் மக்களிடம் பணம் கேட்கிறாரோ, அவர் விசாரணை நாளில் முகத்தில் புண்களுடனும் கீரல்களுடனும் வருவார்.” அறிவிப்பவர் அஹமத்.
கடனாளியின் ஜனாசா தொழுகையை நபி (ஸல்) அவர்கள் நடத்தவில்லை.
இரண்டு தீனார் கடனை தீர்க்காத ஒருவரின் ஜனாசா தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் பங்கு பற்றவில்லை. அபு கதாதா (ரழி) அந்தக் கடனை தீர்த்து வைக்க முன் வந்த பின் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் கலந்துக் கொண்டார்கள்.
அடுத்த நாள் நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபு கதாதா (ரழி), “அந்தக கடனை நான்செலுத்தி விட்டேன்.” என்று அறிவித்தார்கள். “இப்பொழுது அவருடைய தோல் சூடு ஆறிவிட்டது.” என்று அவருக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கடன் பட்ட ஒருவரின் பிராணன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். “ஒரு மூமினின் கடன் காரணமாக அவருடைய பிராணன் பிணையக் கைதியாக தடுத்து வைக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் திர்மிதி
இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறும் போது “அது (பிராணன்) அதன் உன்னத ஸ்தலத்தை அடைவதை விட்டும் தடுத்து வைக்கப் படும்.” என்று அல் ஸுயூத்தி என்ற அறிஞர் அறிவித்தார். “அந்த ஆத்மாவின் கடன் செலுத்தப்படுமா இல்லையா என்று முடிவெடுக்கும் வரை, அந்த ஆத்மா பாதுகாக்கப்படுமா, இல்லையா, என்ற தீர்ப்பு வழங்கப்பட் மாட்டாது.” என்று அல் இராக்கி என்ற விற்பன்னர் விளக்கம் கூறினார்.
கடன் பட்ட ஒரு மனிதர் சிறைக் கைதி ஆவார். “உமது நன்பர் அவருடைய கடன் காரணமாக சிறை வைக்கப்பட்டுள்ளார்.” என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்
ஆதாரம் அபுதாவூத்.
கடன் பற்றி சஹாபாக்களின் சில கூற்றுகள்; “கடனைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். காரணம், அது சஞ்சலத்துடன் ஆரம்பித்து யுத்தத்தில் முடிவடையும்.” என உமர் இப்ன் அல் ஹஃத்தாப் (ரழி) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
“ஓ ஹும்ரான்! அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள், கடன் பட்ட நிலையில் மரணம் அடையாதீர்கள். அதனை செலுத்த தீனார்களும் திர்ஹம்களும் இல்லாவிட்டால், உங்களுடைய நல் அமல்களில் இருந்து எடுக்கப்படும்.” என்று அப்துல்லாஹ் இப்னு உமர் எச்சரிக்கை செய்தார்கள்.
“திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்களுடைய செல்வத்தை (கடனாக) யார் பெற்றுக் கொள்கிறாரோ, அல்லாஹ் அவனுக்காக அதனை செலுத்துவான். (கடனாக வாங்கிய) செல்வத்தை நாசமாக்கும் நோக்கத்தில் ஒருவர் எடுத்தால், அல்லாஹ் அவனை நாசமாக்குவான்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் புஹாரி.
ஜாசிம் இப்ன் தஇயான்
islamhouse.com
http://www.readislam.
No comments:
Post a Comment