நாயகம் அவர்களின் போதனை
கி.ஆ.பெ. விசுவநாதன்
வாழ்க்கைக்கு
சிக்கனமாய் இரு. ஆனால் கருமியாய் இராதே. இரக்கங்காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே. அன்பாய் இரு; ஆனால் அடிமையாய் இராதே. வீரனாய் இரு; ஆனால் போக்கிரியாய் இராதே. சுறுசுறுப்பாய் இரு; ஆனால் படபடப்பாய் இராதே என்பவை அவர்களுடைய போதனைகள். இவற்றின் வேற்றுமைகளை உள்ளத்தே எண்ணி, வாழ்க்கை நடத்துவது நல்லது.
பொதுத் தொண்டு
பொதுத்தொண்டு செய்கின்ற ஒவ்வொருவனும் முதலில் தன் வீட்டிலிருந்தே பொதுத் தொண்டைத் தொடங்கவேண்டும் என்பதே நாயகம் அவர்களின் கொள்கை. இதைப் பின்வரும் அவரது போதனை நமக்கு நன்கறிவிக்கிறது. அது பள்ளிவாசலில் விளக்கேற்றி வைக்கப் புறப்படுமுன் உங்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்துப் புறப்படுங்கள் என்பது. வீட்டை இருளடைந்து போகும்படி செய்கிறவன் பள்ளி வாசலில் விளக்கேற்றி வைக்கத் தகுதியுடையவன் அல்லன் என்பது நாயகம் அவர்களின் கருத்து. இது பொதுத் தொண்டு செய்கிறவர்களைச் சிந்திக்கச் செய்யுமென நம்புகிறேன்.
நட்பு
“அண்டை வீட்டுக்காரர்களோடு எப்பொழுதும் நட்பாய் இருங்கள்” என்பது அவர்களது போதனைகளிலிலொன்று அதற்கு வழியும் கூறியிருக்கிறார்கள். அது, உங்கள் வீட்டில் பலகாரங்கள் பண்ணும் போதெல்லாம் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் அனுப்பி அவர்களை மகிழ்வியுங்கள் என்பது, நீங்கள் எதைப் பின்பற்றவிட்டாலும் இப்போதனையை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பது, அண்டை வீட்டுக்காரர்களின் பகையால் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் கருத்து.
சர்க்கரை
ஒரு முறை அவர்கள் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கிழவி பையனைக் கொண்டு வந்து முன்னே நிறுத்தி இருந்தாள். என்ன என்றார்கள்? “இவன் சர்க்கரையை அதிகமாகச் சாப்பிடுகிறான். சாப்பிட வேண்டாமென்று புத்தி சொல்லுங்கள். நான் சொல்லி அவன் கேட்கவில்லை. அதற்காகத் தங்களிடம் அழைத்து வந்தேன்” என்றாள். “அப்படியா” என்று சற்று எண்ணி, இன்னும் மூன்று நாள் கழித்து வாருங்கள் என்றார், போய்விட்டார்கள். மூன்றாம் நாள் பல மைல்களுக்குப் பால் நாயகம் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை அறிந்து பையனை அழைத்துக் கொண்டு போய் பழையபடி நின்றாள். “நீங்கள் யாரம்மா என்றார்கள்?” “மூன்று நாளைக்கு முன்பே, இந்தப் பையன் சர்க்கரை சாப்பிடுகிறான். கொஞ்சம் புத்தி சொல்லுங்கள் என்று சொன்னேனே நான் தான் என்றாள். ஓ அவனா? தம்பீ! இனிமேல் நீ சர்க்கரை சாப்பிடாதே ! போ” என்றார்கள். அந்த அம்மாவுக்குச் சிறிது வருத்தம். இவ்வளவு தானா? இதைச் சொல்லவா மூன்று நாள்? அதை அன்றைக்கே சொல்லியிருக்கலாமே, என்று நினைத்தாள். உடனே “தாயே நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரிகிறது. உன் பேரன் மட்டும் சர்க்கரை சாப்பிடுகிறவன் அல்ல. நானும் அதிகமாகச் சர்க்கரை சாப்பிடுகிறவன். மூன்றாம் நாள் விட முயன்றேன். முடியவில்லை. நேற்று விடப் பார்த்தேன் பாதிதான் முடிந்தது. இன்றைக்குக் காலையிலிருந்து முயன்றேன், என்னால் விட முடிந்தது. சர்க்கரையே சாப்பிடவில்லை. அதனாலே நான் அறிந்தேன். சர்க்கரை சாப்பிடுகிறதை விட முடியும் என்று. அதன் பிறகுதான் பையனுக்கு என்னால் சொல்ல முடிந்தது” என்றார்கள் (கை தட்டல்) இது நம் உள்ளத்தைத் தொடுகிறது. தொட்டு என்ன பயன்? நம் நாட்டிலுள்ள பேச்சாளர்களின் உள்ளத்தைத் தொட வேண்டும் எண்ணங்களை நாம் கோடிக்கணக்கில் எண்ணுகிறோம். எழுத்துக்களை இலட்சக் கணக்கில் எழுதுகிறோம். பேச்சுக்களை ஆயிரக்கணக்கில் பேசுகிறோம். கொள்கைகளை நூற்றுக் கணக்கில் கொட்டுகிறோம். திட்டங்களைப் பத்துக்கணக்கில் வகுக்கிறோம். ஆனால் செயலில் ஒன்றையாவது உருவாகச் செய்கிற ஆற்றல் நமக்கு இல்லை. நாயகம் அவர்களிடத்தில் இருந்தது. எதை அவர்கள் சொல்லுகிறார்களோ அதையே அவர்கள் செய்வார்கள். செய்யக்கூடியதையே சொல்லுவார்கள். மக்களால் செய்ய முடியாததை எதையும் அவர்கள் ஒரு நாளும் போதித்ததில்லை. அதுதான் அவர்களிடமுள்ள ஒரு பெருஞ்சிறப்பு. அதனாலேயே அவர்களிடம் எனக்குப் பற்று அதிகம்.
வீரம்
எம்பெருமானார் அடிக்கடி அநீதியை எதிர்த்தும் போரிடுங்கள் எனக் கூறுவார்கள். போரிட்டுக் கொண்டே கூறுவார்கள்.
ஹஜ்ரத் அலி அவர்கள் கூறியிருக்கிறார்கள், பெரும் போர் நடக்கும் பொழுதெல்லாம் அண்ணலார் அவர்களின் முதுகுப் புறத்தில் தான் நாங்கள் நின்று போராடுவோம் என்று.
அகல் போர், பத்ருப்போர், உஹதுப்போர் முதலிய பல போர்கள் நடந்தன. அப்பொழுதெல்லாம் நாயகம் அவர்கள் முதல்வரிசையில் நின்று பகைவர்களை நெருங்கிப் போராடியிருக்கிறார்கள்.
திடீரென்று பகைவர்கள் வந்து தாக்கப் போகிறார்கள் என்ற அச்சம் வந்த போதெல்லாம் இரவு நேரங்களில் தனியாகக் குதிரை ஏறிப் பல மைல்கள் சென்று வேவு பார்த்து வருவார்கள். அநீதியைப் போரிட்டு அழிப்பதில் அண்ணலார் அவர்களைப் போன்ற ஒரு சமயத் தலைவரை உலகம் கண்டதில்லை. அவரது வீரம் அத்தகையது.
விக்கிரக வணக்கம்
நாயகம் அவர்களின் காலத்தில் அரேபியா நாட்டில் விக்கிரக வணக்கம் இருந்தது. மக்கா நகரிலுள்ள கஃபா பள்ளியில் கூட விக்கிரகங்கள் பல இருந்தன. விக்கிரக வணக்கம் ஆண்டவனுக்கு ஏற்றதல்ல என்று அறிவுரைகளைக் கூறி மக்களை ஒப்பும்படி செய்து, தாமே பல விக்கிரகங்களை உடைத்து அகற்றி, அப்பள்ளியைத் தூய்மை அடையச் செய்து பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
அபிசீனியா
பீதி அடைந்து துன்பப்பட்டுக் கொண்டிருந்த 7 பேர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்படி, அபிசீனியா நாட்டு மன்னருக்கு எம்பெருமானார் அவர்கள் ஒரு கடிதம் கொடுத்திருந்தார்கள். அபிசீனியமன்னன் நாயகம் அவர்களுக்குக் கட்டுப்பட்டவன் அல்ல, மாறுபட்டவன் என்று கூடச் சொல்லலாம். அப்படி இருந்தும் நாயகம் அவர்கள் தமக்குக் கடிதம் எழுதியதை மதித்து ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு அடைக்கலங் கொடுத்துக் காப்பாற்றினான். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் அம்மன்னன் அக்கடிதம் வந்த நாளை ஒரு திருநாளும் பெருநாளுமாகக் கருதி, ஆண்டுதோறும் அந்த நாளில், விழாக் கொண்டாடியதே. இதிலுள்ள வியப்பு என்னவென்றால் அம்மன்னன் இறந்த பல நூறு ஆண்டுகளாகியும், அந்நாட்டு மக்கள் இன்றும் அவ்விழாவைக் கொண்டாடிக் கொண்டிருப்பது தான்.
தன்னம்பிக்கை
நாயகம் அவர்கள் போதனைகளில் தலை சிறந்த ஒன்று “தன்னம்பிக்கையோடு இருங்கள்” என்று அடிக்கடி மக்களைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்ததே.
தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புவது; தன் வலிமையை நம்புவது; தன் அறிவை நம்புவது; பிறர் துணையின்றி தன்னைத்தானே காத்துக் கொள்வது என்றாகும்.
மனிதனிடத்தில் காண முடியாத இத்தன்னம்பிக்கையை சிங்கத்தினிடம் காணமுடிகிறது.
காட்டில் வாழ்கின்ற கரடி, புலி, சிறுத்தை, ஓநாய் முதலிய விலங்கினங்கள் மான், முயல், முதலியவைகளை அடித்துக் கொன்று, ஓரளவு தின்று மீதியை மறுநாளைக்கு வேண்டுமென எண்ணித் தான் தங்குமிடத்திற்கு இழுத்துச் சென்று வைத்திருக்கும். இதனால் அவற்றின் இருப்பிடங்கள் சகிக்க முடியாத நாற்றம் வீசிக் கொண்டிருக்கும்.
ஆனால் சிங்கத்தின் குகை மட்டும் மிகத் தூய்மையானதாகக் காணப்படும். அக்குகையில் எலும்பையோ, தோலையோ காண முடியாது. நன்றாகப் பசியெடுக்கும் வரை, அதிலும் பசியைப் பொறுக்கும் வரையில் சிங்கம் அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் இனிப் பசியைத் தாங்க முடியாது என்ற நிலை வந்ததும் மெதுவாக எழுந்து குகையில் நாலடிகள் நடந்து, குகைக்கு வெளியே சிறிது தலையை நீட்டி ஆ ! ஆ ! என்று கர்ஜித்துத் தன் பிடரி மயிரை ஆட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கர்ஜனையின் ஒலி எதிர்மனையில் தாக்கி அங்கிருந்து எதிரொலி திரும்பி வந்து காடு முழுவதையும் அலைக்கழிக்கும். ஆங்காங்குள்ள மான், முயல் முதலியன நடு நடுங்கி இதோ சிங்கம் ! அதோ சிங்கம் ! எனக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும். அப்படி ஓடுவனவற்றில், சிங்கம் தன் குகை வாயில் வழியே வருகிற ஒன்றை மெதுவாகத் தட்டி, கடித்துத் தின்று, மீதியை எறிந்துவிட்டு, மெதுவாக நடந்து அமைதியாகக் குகைக்குள் படுத்து உறங்கும்.
தனக்குப் பசி எடுத்தபோது உணவு வாயிலண்டை வரும் என்ற அவ்வளவு தன்னம்பிக்கை சிங்கத்திற்கு பகுத்தறிவற்ற விலங்கினிடத்தில் காணப்படுகின்ற இத்தன்னம்பிக்கை பகுத்தறிவுள்ள மக்களிடத்தில் காணமுடியவில்லையே என நாயகம் வருந்துவார்கள். நாம் இப்போதனையைப் பின்பற்றித் தன்னம்பிக்கையோடு வாழவேண்டாமா என அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற இந்த நாளிலாவது எண்ணிப் பார்ப்பது நல்லது.
( கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்களின் பேச்சு ’நபிகள் நாயகம்’ என்ற பெயரில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அந்த நூலிலிருந்து ஒரு பகுதி )
நூல் கிடைக்குமிடம்
திருவள்ளுவர் பதிப்பகம்
சா.இராமசாமி நகர்
திருமானூர் 621 715
அரியலூர் மாவட்டம்
from :Muduvai Hidayath
<muduvaihidayath@gmail.com>
No comments:
Post a Comment