அழகிய ஐம்பெருங் குணங்கள் !
மவ்லவீ ஹாஃபிழ் அ. சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ
“இவர்கள் பொறுமையாளர்களாகவும், வாய்மையாளர்களாகவும், அடிபணிந்தவர்களாகவும், (நல்வழியில்) செலவழிப்பவர்களாகவும், பின்னிரவு நேரங்களில் (தொழுது) பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருக்கின்றனர்” -அல்குர்ஆன் (3:17)
இறைவனை அஞ்சி நடந்து கொள்ளும் நல்லடியார்களுக்குரிய அளப்பெரும் ஐம்பெருங்குணங்களை மேற்கூறப்பட்ட வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான். அவை
1.பொறுமை
2. வாய்மை
3. பயபக்தி
4. தர்மம்
5. பின்னிரவில் இறைவனை இறைஞ்சுதல்
இவை ஒவ்வொன்றும் மகத்தானவை; ஒவ்வொரு முஸ்லிமிடமும் கட்டாயம் இடம்பெற வேண்டியவை.
1.பொறுமை
மேற்கூறப்பட்ட உயர்பண்புகளில் பொறுமைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மற்ற பண்புகளை கடைப்பிடிக்க பொறுமை மிகவும் அவசியம். பொறுமையில்லாமல் எதையும் சாதிக்க இயலாது. பெருமையை காக்கவும் பொறுமை அவசியம். வறுமையை தாங்கவும் பொறுமை அவசியம்; வலியை அடக்கவும் பொறுமை அவசியம்.
பொறுமையின்றி அமையாது வாழ்வு
பொறுமையை இழந்தவர்கள் வாழ்க்கையில் சிறுமை அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
சரி ! பொறுமையை பெறுவது எப்படி? ஆம் ! வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது, பதற்றப்படாமல், நிதானம் தவறாமல் மன உறுதியுடன் எதையும் தாங்கும் இதயம் பெற்று, எதிர்கொள்வதே பொறுமை !
பொறுமையை கடைப்பிடிக்குமாறு நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் திருக்குர்ஆனில் இருபதுக்கும் அதிகமான இடங்களில் உத்தரவு பிறப்பித்துள்ளான். பொறுமை நலம் பயக்கும் புனிதச்செயல் ஆகும்.
“நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது”
-அல்குர்ஆன் (4:25)
“நம்பிக்கை கொண்டோரே ! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயம் இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்”
-அல்குர்ஆன் (2:153)
மறுமை நாளில் இறைவன் அனைவரையும் ஒன்று திரட்டியதும், “பொறுமைசாலிகள் எங்கே? அவர்கள் யாவரும் கேள்வி கணக்கில்லாமல் சுவனம் புகட்டும்” என ஒரு அழைப்பாளர் கூவுவார். அவர்கள் அனைவரும் எழுந்து சுவனம் செல்லும் வழியில் “நீங்கள் யார்? எங்கே செல்கிறீர்கள்?” என வானவர்கள் கேட்கும்போது, “நாங்கள் பொறுமைசாலிகள்” என்பார்கள். மீண்டும் வானவர்கள் எவ்வாறு பொறுமை காத்தீர்கள்?” என கேட்கும்போது “நாங்கள் இறுதிவரை இறைவனுக்கு அடிபணிவதிலும், இறைவனுக்கு மாறு செய்வதை விட்டும் பொறுமை காத்தோம்” எனக்கூறுவர். பொறுமையாளர்களுக்கு இறைவன் வழங்கும் நற்கூலிகளில் சிறந்தது சுவனமேயன்றி வேறில்லை.
“பொறுமையாளர்கள் தங்கள் கூலியை நிச்சயமாக கணக்கின்றிப் பெறுவார்கள்” -அல்குர்ஆன் (39:10)
2. வாய்மை
‘வாய்மையே வெல்லும்’ என்பது எழுத்தில் மட்டுமல்ல. அது எண்ணத்திலும் எழுதப்பட வேண்டும். இறையடியார்கள் எப்பொழுதும் உண்மையையே பேசுவார்கள். எனவேதான் அவர்கள் வாய்மையாளர்களுடன் இருக்கும்படி இறைவன் பின்வருமாறு வசனிக்கிறான்.
“நம்பிக்கை கொண்டோரே ! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்”
-அல்குர்ஆன் (9:119)
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதும், சொல்லியபடி நடப்பதும் வாய்மையின் அடையாளமே ! இன்று வாய்மை, வாய் அளவில் மட்டுமே உள்ளது; செயல்வடிவில் கிடையாது.
“ஆறு பண்புகளுக்கு நீங்கள் உறுதி தாருங்கள். நான் உங்களுக்கு சுவர்க்கத்திற்கு உத்திரவாதம் தருகிறேன்.
1. நீங்கள் பேசினால் வாய்மையே பேச வேண்டும்.
2. வாக்களித்தால் நிறைவேற்ற வேண்டும்.
3. நம்பி கொடுக்கப்பட்டால், அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
4. உங்கள் கற்பை காக்க வேண்டும்.
5. உங்கள் பார்வையைத் தாழ்த்த வேண்டும்.
6. உங்கள் கரங்களை (தீமையிலிருந்து) விலக்கிக் கொள்ள வேண்டும்”
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”
அறிவிப்பாளர் : ஹள்ரத் உபாதா பின் ஸாமித் (ரளி) அவர்கள் (நூல்:அஹ்மது)
“வாயுள்ள மனிதன் பிழைத்துக் கொள்வான்” (பழமொழி)
“தவளை தன் நாவால் கெடும்” (பழமொழி)
ஒருவாய், ஒரு நாவு அது ஒருவனை வாழவும் வைக்கிறது, வாழவிடாமலும் செய்து விடுகிறது.
மனிதன் தமது வாயை வைத்து பிழைத்துக் கொள்கிறான். அதிலிருந்து வெளியேறும் வார்த்தைகள் வாய்மையாக இருந்தால், அது அவனை வாழவைக்கிறது. அது பொய்யாக இருந்தால், அது அவனை சமூகத்திலே பொய்யன் எனும் அடையாளப்படுத்தி, அவனை அசிங்கப்படுத்தி, ஒதுக்கித் தள்ளிவிடுகிறது.
3. பயபக்தி
இது இறை நல்லடியார்களின் அழகிய பண்பு. பயபக்தியின் அடையாளம் இறைவனுக்கு அடிபணிதல், முற்றிலும் வழிபடுதல், நின்று வணங்குதல், மவுனம் காத்தல், பிரார்த்தனை புரிதல் ஆகும். இன்று பயபக்தி பேச்சோடு நின்றுவிட்டது, அது மூச்சோடு கலக்காமல்…!
சொல்லில் வருகிறது செயலில் நின்றுவிடுகிறது ! வெளித்தோற்றத்தில் ஆரவாரம் செய்கிறது. அந்தரங்கத்தில் அமைதியாக தூங்கிவிடுகிறது. உள்ளத்தில் வரும் பயம் அது முக்தி அடைந்து செயலில் வெளிப்படுவதே பக்தி. உள் ஒன்றும் செயல் ஒன்றும் இருப்பதல்ல பயபக்தி.
“இறைவன் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்”
-அல்குர்ஆன் (2:238)
4 . தர்மம்
இறை நல்லடியார்களின் நான்காவது அழகிய பண்பு தர்மம் செய்தல்… தர்மம் என்பது இஸ்லாம் கூறும் பொருள் வணக்கமாகும். உடல் வணக்கம் செய்யும் முஸ்லிம்கள் பொருள் வணக்கம் செய்யத் தவறினால், அவர்கள் இறைவனை விட்டும் வெகுதூரத்தில் இருக்கிறார்கள்.
“தர்ம சிந்தனை உள்ளவர் இறைவனுக்கும், சுவர்க்கத்திற்கும், மக்களுக்கும் நெருக்கமானவர்; நரகத்தை விட்டும் தூரமானவர். கருமியோ இறைவனிடமிருந்தும், சுவர்க்கத்தை விட்டும், மக்களைவிட்டும் தூரமானவன்; நரகத்திற்கு நெருக்கமானவன். அதிகம் வணக்கம் செய்யக் கூடிய ஒரு கருமியைவிட, கடமையான வழிபாடுகளை மட்டும் நிறைவேற்றக்கூடிய கொடை வள்ளல் இறைவனின் அன்புக்கு மிகவும் உரியவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் (திர்மிதீ)
“எந்தப் பொருளை செலவு செய்த போதிலும், இறைவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்” -அல்குர்ஆன் (34:39)
“தர்மத்தால் பொருள் குறைந்து விடாது” (நபிமொழி)
“கருமித்தனத்தை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். உங்களது முன்னோர்கள் அழிக்கப்பட்டதெல்லாம் கருமித்தனத்தால் தான்” (நபிமொழி)
“கருமித்தனத்திலிருந்து காக்கப்படுபவரே வெற்றியாளர்கள்”
-அல்குர்ஆன் (64:16)
5. பின்னிரவில் இறைஞ்சுதல்
நடுநிசியில் வணக்கம் புரிவது இறை நல்லடியார்களின் பண்பாக உள்ளது. மக்கள் உறக்கத்தில் ஈடுபடும் நேரம் அவர்கள் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
“மக்கள் துயில் கொள்ளும் இரவு நேரத்தில் இறைவனை வணங்குங்கள்; நீங்கள் நிம்மதியான முறையில் சுவனம் புகுவீர்கள்”
அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூயூசுப் அப்துல்லாஹ்பின் ஸலாம் (ரளி) அவர்கள் (திர்மிதீ)
இரவும்-பகலும் ஓயாமல் தூங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் பகல் முழுவதும் உழைத்து, இரவில் கொஞ்சம் தூங்கிவிட்டு, பின்னிரவில் இறைவனுக்கு ஒதுக்கி, அவனிடம் இறைஞ்சும் நல்லடியார்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவர்கள் கேட்பதையெல்லாம் அள்ளி வழங்குகிறான்.
“ஒவ்வொரு நாள் இரவின் நடுநிசியிலும் இறைவன் முதல் வானத்திற்கு வந்து, தமது அடியாரை நோக்கி, “கேட்பவர் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன்; அழைப்பவர் உண்டா? அவருக்கு நான் பதிலளிக்கிறேன்; பாவமன்னிப்புக் கோருபவர் உண்டா? அவரின் பாவத்தை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான்”
-நபிமொழி (நூல்-புகாரி)
இந்த ஐம்பெருங் குணங்களையும் முழுமையாகப் பெற்றவர் இறைநேசராக மாறிவிடுகிறார். இறைநேசராக மாற இதை விட எளியவழி வேறு ஏதும் இல்லை.
“மனசுவைத்தால்
மார்க்கம் உண்டு
மனசேமுயற்சிசெய்!”
( குர்ஆனின் குரல் – மார்ச் 2015 )
from: Muduvai Hidayath
<muduvaihidayath@gmail.com>
1 comment:
arumaniyana pathivo
Post a Comment