ஃபாத்திமா, காரக் கொழம்பு அம்மாவுக்காவாது.. வேணாமே?” குழம்பு ஊற்றப் போன என் மனைவியைத் தடுத்தேன்.
சாப்பாடு கொண்டு வந்த சரவணபவன் கேரிபேக்கைத் தூக்கி எறிய, டஸ்ட் பின்னை தேடிப்பார்த்து கிடைக்காததால் அறையின் ஓரமாய் போட்டான் மகன் அபூ என்ற அப்துல்லாஹ்.
‘எத்தன நாளு லீவுத்தா..?’ என்ற அம்மாவின் கேள்வியில் ‘இன்னும் கொஞ்சநாளு எங்ககூட இருக்க மாட்டியா..’ என்ற ஏக்கமும் தொக்கி நின்றதை உணர்ந்தேன்.
“லீவு அதிகம் கெடைக்கலேம்மா..இன்னும் நாலு நாள்ல கெளம்பியாவணும்..” என் சுவர்க்கத்தைத் தன் காலடியில் வைத்திருக்கும் என் தாயைக் கண்களில் நீர் மறைக்க ஏறிட்டுப் பார்த்தேன்.
"என்னத்தா.. அப்டி பாக்குறே?.."
“பணத்தாச புடிச்சி வெளிநாட்டுக்குப் போகாம, இங்கேயே ஏதாச்சும் வேல தேடிக்கிட்டு ஒங்ககூடவே இருந்துருக்கலாமேன்னு நெனைக்கிறேம்மா..” மனைவியின் காதுகளில் விழாதவாறு விசும்பி அம்மாவின் மடியில் தலை சாய்த்தேன்.
‘நீ எங்க இருந்தாலும் எங்களோட துஆ பரக்கத் எப்பவுமே ஒனக்கு உண்டுத்தா..’ என்றார் என் தலை கோதியவாறு.
‘என்ன... அம்மாவுக்கும் மகனுக்கும் பாச ஸீன் ஓடிட்டிருக்குபோல..’ என்றவாறே கொண்டு வந்ததைச் சாப்பிட்டுவிட்டு கழுவிய கையை மேல்துண்டால் துடைத்தவாறு சிரித்த என் தந்தையை ஆச்சர்யமாகப் பார்த்தான் மகன் அபூ. வெளிநாட்டில் வசிப்பிடத்தில் அவன் கைகளில் ஒட்டிய மைக்ரோ தூசிக்குக்கூட ‘டாட், டிஷ்யூ ப்ளீஸ்..’ என்பான் born with silver spoon அபூ.
எழுந்து தந்தையின் அருகில் அமர்ந்தேன். நீண்ட நாட்கள் கழித்து மூன்றாம் மனிதரைப் போல், பார்க்கும் வலி மனதை என்னவோ செய்தது.
“அதெப்டித்தா, எல்லாத்தையும் இவ்ளோ ஈஸியா எடுத்துக்குறீங்க..?” அருகில் அமர்ந்து அவர் கால்களை என் மடிமீது எடுத்து வைத்து நீவி விட்டவாறு கேட்டேன்.
‘சின்ன வயசிலேயிருந்தே வலியையும் ஏமாற்றத்தையும் தாங்கிக்கப் பழகிட்டா முதுமையில எதுவுமே வலிக்காதுப்பா..’ என்றார் மெல்லிதாய் புன்னகைத்தவாறு.
அந்த வெண்மையான தாடிக்குள் எவ்வளவு வலி நிறைந்திருக்கும் என்பதைச் சத்தியமாய் என்னால் உணர முடியாதுதான்.
‘க்ராண்ட்பா, ஒங்க தாடில்லாம் ஏன் ஒயிட்டா இருக்கு.?’ என்று கேட்ட மகனை, ‘ அபூ, don't say grandpaa.. ராரான்னு சொல்லு..’ என்று சன்னமாய் அதட்டினாள் என் மனைவி.
"அதுவா ராஜா.. ஒங்க ராராவுக்கு வயசாகுனதுனால முடி எல்லாம் வெளுத்துப் போச்சி.." என் தாய்.
"ஆமா, எனக்கு மட்டுந்தான் வயசாயிட்டுது.. இவ இன்னும் சின்ன கொமரிதான்..’ என்றார் என் தந்தை சிரித்தவாறே.
‘க்ராண்ட்பா... ஸாரி... ராரி என்னை எதுக்கு ராஜான்னு கூப்டுறாங்க.. எம்பேரச் சொல்லி கூப்ட மாட்டாங்களா..?’ என்றான் அபூ.
"என்னோட பேருதான் ஒனக்கும் விட்ருக்குறதால ஒங்க ராரியால ஒன்ன அப்துல்லாஹ்னு பேரச்சொல்லி கூப்ட முடியல.." என்று அபூ-விடம் சொன்ன என் தந்தை, என் பக்கம் திரும்பி, ‘நேத்து நா வெளிய போயிருந்த சமயத்துல ஆதார் அட்டைக்காக வந்தவங்ககிட்ட ஒங்கம்மா என்னோட பேர சொல்றதுக்குள்ளே அவங்கள ஒருவழி பண்ணிட்டாளாம்..’ என்று சிரித்தார்கள். திரும்பிப் பார்த்தேன். என் தாயின் முகத்தில் அப்படி ஒரு நாணம்.
அவர்களுக்குள் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்த உள்ள நெருக்கத்தைக் காண இதமாக இருந்தது.
அட ஆண்டவா... எவ்வளவு அற்புதத் தருணங்களை இழந்திருக்கிறேன். வாழ்நாளில் பெரும் பகுதி பெற்ற தாய் தந்தையையும் பிரிந்துகாசை சம்பாதித்து இவர்களின் உண்மையான பாசத்தை இழந்து நான் வாழ்வதற்குப் பெயர் வாழ்க்கையா..?
“எவன் தன் தாய், தந்தையின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுகிறானோ அவனின் இவ்வுலக, மறுஉலகத் தேவைகளில் 70 தேவைகளை இறைவன் நிறைவேற்றி வைப்பான்..” என்ற நபிமொழிக்கு நான் தகுதியாவனவன்தானா என்று என்னை நானே கேட்டுப் பார்த்தேன்.
“சரிம்மா.. கெளம்புறோம்.. பயணம் கெளம்புறதுக்கு முன்னாடி இன்ஷா அல்லாஹ் ஒருதடவ வாறோம்.. கால் வலி மாத்திரல்லாம் ஒழுங்கா சாப்டுங்கம்மா..” என்றேன்.
என் தாய், வாரி எடுத்து முத்த மழை பொழிந்தது என்னவோ அபூவை தான். என் தாயின் எச்சில் ஈரத்தை என் கன்னங்களில் உணர்ந்தேன்.
முன்நெற்றி முடி விலக்கி வாஞ்சையாய் அவனுக்கு முத்தமொன்று கொடுத்து, என் தந்தை அவன் கைகளில் ரூபாய் நோட்டொன்றைத் திணித்தபோது, தன் தாயின் கண்ணசைவுக்காக அவள் பக்கம் திரும்பினான் அபூ. அரைடவுசர் பையனாய் என்னை உணர்ந்தேன் நான்.
இயந்திரத்தனத்துடன் ஸலாம் கூறி அறையை விட்டு வெளியில் வந்து கனத்த இதயத்துடன் வராந்தாவில் நடந்தேன். வரிசையாய் அறைகள். சிலவற்றில் பேச்சுக் குரல்கள், பலவற்றில் இருமல் சப்தங்கள். குறுக்கும் நெடுக்குமாய் யார் யாரோ நடந்து போனார்கள்.
‘அன்னை ஹாஜிரா முதியோர் காப்பகம்’ என்ற பெயர்ப் பலகையின் அருகேயுள்ள மரத்தின் கீழ் நிழலில் நிறுத்தியிருந்த காரின் அருகே வந்தோம்.
‘என்னத்தா, அழறீங்களா என்ன.?’ என்றான் அபூ.
“இல்லடா.. தூசி விழுந்துட்டுது கண்ணுல..” பொய்யாய் கூறியவாறு கார் கதவைத் திறந்தேன்.
‘ஒங்களுக்கு எப்போ முடி வெளுக்கும் டாடி..?’ என்றான் அபூ.
பதறவில்லை.. கோபப் படவில்லை.. ‘ஏன்..?’ என்று அவனிடம் கேட்கவுமில்லை.
தந்தைக்குக் கஞ்சி ஊற்றிய பழைய சட்டியைத் தன் மகன் ஒளித்து வைத்துக் கொண்டு காரணம் கூறிய கதை எனக்கு நினைவிருக்கிறது.
உப்பைத் தின்று கொண்டிருக்கிறேன்.. இனி நிச்சயம் தாகத்தால் கதறுவேன்..
தண்டனை என்னவென்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தும் தவறிழைத்துக் கொண்டிருக்கிறேன்.
வருங்கால தண்டனை, நிகழ்காலத்தில் கண்முன் தெரிவது கொஞ்சம் வலிப்பதுபோல் தெரிகிறது.
காரை மெதுவாய் நகர்த்தினேன்.
தாடையில் கைவைத்து தடவிப் பார்த்தேன். கொஞ்சம் சொரசொரப்பாய் உணர்ந்தேன்.
இனி கண்ணாடியில் முகம் பார்க்கும்போது கொஞ்சம் அச்சம் வரத்தான் செய்யும்... செய்துகொண்டிருக்கும் தவறைத் திருத்திக்கொள்ளும் வரை!
- ஹமீத் அலி
===============================
ஆசிரியர் குறிப்பு: நெல்லையைச் சேர்ந்த ஹமீத் அலி துபாயில் பணிபுரிந்து வருகிறார். தனது களிநயமிக்க எழுத்தால் கதைகள் கவிதைகள் என்று ஃபேஸ்புக்கில் வாசகர் வட்டத்தை ஈர்த்துவைத்துள்ள ஹமீத் அலியின் இந்தச் சிறுகதை முதியோர் இல்லம் என்கிற நம்வாழ்வின் துயர அடையாளம் ஒன்றை தனக்கேயுரிய வகையில் பதிவு செய்கிறது.
Hameed Ali
பெயர்: ஹமீத் அலி
பணியிடம்: துபாய்http://inneram.com/entertainment/
No comments:
Post a Comment