உன் பெருங்கருணை
இல்லை என்றால்,
எமக்குக் கிடைத்திடுமா
இந்தப் பெரும்பேறு?
அண்ணல் நபியின்
அடியொற்றி நடைபயிலல்,
கண்ணொளிக்குக்
குர்-ஆன் என்னும்
கைவிளக்கு,
மார்க்கமெனும்
பென்னம் பெரிய
பெறற்கரிய திருவீடு...
எண்ணிப் பார்க்க
எப்போதும் மலைப்பாக்கும்
உன்னதங்கள் எல்லாம்
உன்னுதவி யேயன்றோ!
நானோ வெறும் மனிதன்.
நானுனக்கு
அடியான் எனும் சிறந்த
அன்பின் முடிசூட்டி
அருள்செய்த மூலமுதல்
அல்லாஹ்வே,நீயன்றோ?
அடியார்க்கு நல்லானாய்
நல்லடியார் நட்பினனாய்
படைத்த உன் படைப்புகட்குப்
பயன்பாடும் உள்ளவனாய்
படிப்படியாய் எமக்குப்
பக்குவங்கள் செய்பவன்நீ.
`திக்குத் தெரியா காட்டில்
திரியாதே,நீ எனக்கு
முக்கியம்’ என்று
முனாஜாத் செய்பவன் நீ!
(முனாஜாத்-ரகசியம்)
மன்னித்து,ரட்சித்து
மலைபோல அரண்செய்து
உன்னித்தென் தேவைகட்கு
உதவியெலாம் செய்து
அன்னையினும் சால
அரவணைப்போன்
நீயலவோ?
என்னைவிட நன்றாய்
எனைப்பற்றி அறிந்தவனே,
தன்னைப் பெரிதென்பார் முன்
தாழாது காப்பவனே...
உன் உணர்தல் அன்றோ
என்றன்
உயிரூட்டம்.
”நிச்சயமாக
என் தொழுகையும்
என் தியாகமும்
என் வாழ்வும்
என்மரணமும்-
எல்லா உலகுக்கும்
இரட்சகனே, அல்லாஹ்வே-
உனக்கே உரியன.”
நீயே எனக்கு நிறைகூலி ஆனதன்பின்
நாயேன் அடைய நற்பேறு வேறுளதோ?
எம் உறுதிச் சுற்றமும்
எம் இறுதிச் சுற்றமும்
நீயும் உன்
நெறிநபியும்
என்பவைதாம் எமக்கு
எப்போதும்
நீங்காதிருக்கும்
நிம்மதியும் பெருமிதமும்....
----------------------ஏம்பல் தஜம்முல் முகம்மது.
No comments:
Post a Comment