Monday, July 13, 2015

அரேபியாவின் இஸ்லாமிய வசந்த வரலாற்றில் ஒருநாள் !

அரேபியாவின் இஸ்லாமிய வசந்த வரலாற்றில் ஒருநாள் !

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிப் போர் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
கூடவே அலீ ( ரலி ) அவர்களும் அண்ணலோடு அணிவகுத்து வந்து கொண்டிருந்தார்கள்.

அன்புக்குரிய மருமகனும் கண்மணி மகள் பாத்திமாவின் அருமைக் கணவருமான அலீ ( ரலி ) அவர்களை தனியே அழைத்துச் சென்ற பெருமானார் ஆன்மீக ரகசியங்கள் பலவற்றை அலீ அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

அதைக் கண்ட உமர் ( ரலி ) அவர்கள் ...
" யா ரசூலல்லாஹ் ! தாங்கள் அலீ ( ரலி ) அவர்களுக்கு மட்டும் ரகசியமாக ஏதாவது போதிக்கிறீர்களா ?" என்று கேட்டார்கள்.
" நான் ஒன்றும் போதிக்கவில்லை.
அல்லாஹ்தான் போதித்தான் " என்று பதிலுரைத்தார்கள் நபிகள் ( ஸல் ) அவர்கள்.
அதாவது ....
நானாக எதுவும் சொல்லவில்லை. அல்லாஹ்வின் நாட்டம் அலீ அவர்களுக்கு சில ஆன்மீக ரகசியங்களை சொல்ல வேண்டுமேன்பது. அவன் நாட்டப்படியே அது நிகழ்ந்தது என்பது அதன் விளக்கம்.

இப்படி அண்ணலாரிடமிருந்து ஆன்மீக ரகசியங்களை எல்லோரும் பெற்று விடவில்லை. அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே அது கிடைத்தது. அதனால்தான் ...
" நான் ஞானத்தின் பட்டணம். அலி அதன் தலைவாசல் " என்றார்கள் அண்ணல் நபிகளார் .

ஞானத்தின் வரிசை அலீ அவர்களிடமிருந்துதான் ஆரம்பமாகிறது.
அதனால்தான் அலீ அவர்கள் இம்மை வாழ்க்கையில் பற்றில்லாமல் வாழ்ந்தார்கள். எல்லோருக்கும் புரியாத பல மறை ஞானங்களை அறிந்திருந்த காரணத்தால் அபூபக்கர் ( ரலி ) அவர்களுக்கும் உமர் ( ரலி ) அவர்களுக்கும் ஆலோசனைக் கூறும் இடத்தில் அலீ இருந்தார்கள்.

ஒருமுறை ஹஜ்ஜை முடித்த கலீபா உமர் அவர்கள் , ஹஸ்ரத் அஸ்வத் கல்லை முத்தமிட்டார். முத்தமிட்ட பிறகு , " ஏ கல்லே ! நீ ஒரு சாதாரணக் கல்தான் . நபிகள் ( ஸல் ) அவர்கள் உன்னை முத்தமிட்டதால்தான் நானும் உன்னை முத்தமிடுகிறேன் " என்று சொன்னார்கள் .

பக்கத்தில் நின்று கொண்டிருந்த அலீ ( ரலி ) அவர்கள் , " உமர் அவர்களே... சற்று நிதானியுங்கள். இதை முத்தமிடுவதால் நன்மையையும் முத்தமிடாததால் இழப்பையும் ஒருவருக்கு வழங்குகிறது " என்று சுட்டிக் காட்டினார்கள்.
அலீ அவர்கள் சொன்னதைக் கேட்டுத் திகைத்த உமர் , "கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் " என்றார்.

" ஆன்ம உலகில் அல்லாஹ்விடம் நாம் செய்த சத்தியப் பிரமாணம் இந்தக் கல்லின் வாயினுள் வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தான் நாம் முத்தமிடுகிறோம். கல்லையல்ல " என்று என்று அலீ அவர்கள் விளக்கம் சொன்னார்கள் .
அதைக்கேட்டு தனது தவறுக்கு மனம் வருந்திய உமர் அவர்கள் , " அலீ இல்லாதிருந்தால் உமர் அழிந்திருப்பான் " என்று சொன்னார்கள்.

நபிகள் ( ஸல் ) அவர்கள் காலத்திலேயே வாழ்ந்த ஒரு முக்கியமான இறைநேசச் செல்வர் உவைசுல் கர்னி அவர்கள்.
கர்னி என்ற இடத்தைச் சேர்ந்த இவர்கள் மிகவும் ஏழை.
ஒட்டகங்களை மேய்த்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தனது தாயாரையும் பராமரித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

மதீனாவிலிருந்து வேகுதூரத்தில் இருந்தது கர்னி.
நபிகளாரை சந்திப்பதற்காக தங்கள் தாயாரிடம் அனுமதி பெற்று உவைஸ் மதீனா வந்தார்கள்.
இவர்கள் வந்த நேரத்தில் நபிகளார் வெளியே போயிருந்ததால் அவர்களை சந்திக்க முடியவில்லை .
வீட்டிலிருந்தவர்கள் தாங்கள் யாரென்று கேட்ட பொது
" நான் உவைஸ். கர்னியிலிருந்து வந்திருக்கிறேன். பெருமானார் வந்ததும் சொல்லி விடுங்கள் " என்று கூறிவிட்டு உடனேயே ஊருக்கு போய் விட்டார்கள்.

நபிகளார் வீட்டுக்கு வந்தவுடன் உவைசுல் கர்னி அவர்கள் தங்களை சந்திக்க வந்த செய்தியை அறிந்தார்கள்.
நபித்தோழர்கள் ," அவர் யார்?" என்று கேட்டபோது ...

" உவைஸ் ஒரு இறை நேசர். அவரை இந்த உலகத்தில் நான் பார்க்காததுபோல் மறுமையிலும் நான் பார்க்க மாட்டேன். "
என்றார்கள்.
" நான் பார்ப்பேனா " என்று கேட்டார் அபூபக்கர்.
" உங்களாலும் பார்க்க முடியாது . ஆனால் அவரை உமரும் அலீயும் பார்ப்பார்கள்." என்றார்கள்.
" அப்போது நாங்கள் அவரிடம் என்ன கேட்க வேண்டும் " என்று கேட்டார் உமர்.
" முஸ்லிம்களுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்கச் சொல்லுங்கள் . அவருடைய துஆவை ஏற்று அல்லாஹ்...
ராபியா , முளரு ஆகிய இரு கூட்டத்தாரின் ஆடுகளின் உரோமத்தின் எண்ணிக்கை அளவுள்ள முஸ்லிம்களின் பாவங்களை மன்னிப்பான் " என்று பெருமானார் முன்னறிவிப்பு செய்தார்கள்.

உவைசை சந்திக்கும்போது தங்களுடைய ஸலாத்தினை அவருக்கு தெரிவிக்கும்படி கூறி அவரிடம் கொடுப்பதற்கு தங்களின் மேலாடை ஒன்றையும் வழங்கினார்கள். உவைசின் உடல் அடையாளங்களையும் கூறினார்கள்.

காலங்கள் கடந்தது.
பெருமானாரின் வபாத்திற்கு பிறகு அபூபக்கர் கலீபாவானார்.
அபூபக்கர் அவர்கள் மரணித்த பிறகு உமர் அவர்கள் கலீபாவானார்கள்.
உவைசுல் கர்னியை சந்திக்கும் ஆசை உமருக்கும் அலீக்கும் ஏற்பட்டது.

ஒரு நாள் இருவரும் உவைசுல் கர்னியை சந்திப்பதற்காக கர்னிக்கு புறப்பட்டார்கள். வெகுதூரம் பயணித்து கர்னியை வந்து சேர்ந்தார்கள். பலரிடம் விசாரித்தபோதும் அப்படி ஒருவரைப்பற்றி தெரியவில்லை.

கடைசியில் ஒருவர் சொன்னார் ..." உவைஸ் என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார். அவர் என் பெரிய தந்தை அமரின் மகன்தான். நீங்கள் தேடி வந்து பார்க்கும் அளவுக்கு அவரொன்றும் பெரிய ஆளில்லை. அவர் மிகவும் ஏழை. ஒட்டகம் மேய்ப்பவர். தன் தாயை பராமரிக்கிறார். இரவில் ஒரு வேளை மட்டும் காய்ந்த ரொட்டித் துண்டுகளை உண்ணுகிறார். யாருடனும் பேசுவதில்லை. மக்கள் சிரித்தால் அவர் அழுவார். அவர்கள் அழுதால் இவர் சிரிப்பார் " என்றார்.

தாங்கள் தேடி வந்த உவைஸ் அவர்தான் என்பதை உமர் அவர்களும் அலீ அவர்களும் புரிந்து கொண்டு அவர் இருக்கும் இடத்தைத் தேடி புறப்பட்டார்கள்.

ஊருக்கு வெகு தொலைவில் ஒருவர் ஒட்டகங்களை மேய விட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
அவரின் அருகில் சென்று சலாம் சொல்லி தங்களை அறிமுகம் செய்து கொண்டபின் அவரின் பெயரைக் கேட்டார்கள்.
அவர் உவைஸ் என்றார். அவரது உடல் அடையாளங்கள் பெருமானார் சொன்னதுபோல் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு அப்படியே அவரை ஆரத்தழுவிக் கொண்ட உமர் அவர்கள் ,
" நபிகள் பெருமான் தங்களுக்கு சலாம் சொன்னார்கள்.
அவர்களின் இந்த மேலாடையை உங்களுக்குத் தரச் சொன்னார்கள். மேலும் ... முஸ்லிம்களுக்காக அல்லாஹ்விடம் தாங்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் சொன்னார்கள் " என்றார்கள்.

அதைக் கேட்டு மகிழ்ந்த உவைசுல் கர்னி அவர்கள் சற்று தொலைவுக்குச் சென்று இறைவனை பணிந்து முஸ்லிம்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள்.
மீண்டும் மீண்டும் பணிவதும் அழுவதும் துஆ செய்வதுமாக இருந்தார்கள்.

வெகுநேரம் ஆன பின்பும் சுஜூது நிலையிலேயே கிடந்த உவைசுல் கர்னிக்கு என்ன ஆயிற்றோ என்று பயந்து போன உமர் அவர்கள் அவரது அருகில் சென்று அவரை உசுப்பினார்கள்.

தலையை உயர்த்திய உவைஸ் அவர்கள், " அமீருல் மூமினீன் ... அவசரப்பட்டு விட்டீர்களே ... இன்னும் சற்று பொறுத்திருந்தால் உலக முடிவுநாள் வரை உலகில் தோன்றும் முஸ்லிம்களின் பாவங்களை எல்லாம் அல்லாஹ் மன்னித்திருப்பானே " என்று வருத்தப்பட்டார்கள்.

" இப்போது எவ்வளவு முஸ்லிம்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தான் ?" என்று அலீயும் உமரும் கேட்க ...

" ராபியா , முளரு ஆகிய இரு கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கை அளவுள்ள முஸ்லிம்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தான் " என்றார்கள் உவைஸ் .

அதைக் கேட்டதும் உமரும் அலீயும் அப்படியே மெய் சிலிர்த்து விட்டார்கள்.
ரசூலுல்லாஹ் சொன்ன அதே எண்ணிக்கையளவுள்ள முஸ்லிம்கள்.

தாங்கள் சந்தித்தது ஒரு சாதாரண மனிதரையல்ல என்று உணர்ந்த உமர் அவர்கள் தங்களுக்காக துஆ செய்யும்படி மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதின் பேரில் அவர்களுக்காகவும் உவைஸ் துஆ செய்தார்.

கலீபா உமர் அவர்கள் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகக் கூறியும் எதையும் ஏற்க மறுத்து விட்டார் உவைசுல் கர்னி.

பிறகு உமர் கேட்ட சில கேள்விகளுக்கு ஞான விளக்கங்கள் வழங்கி விட்டு " உங்கள் வழியே நீங்கள் செல்லுங்கள் என் வழியே நான் செல்கிறேன் " என்று கூறி விட்டு சென்று விட்டார் உவைஸ்.

கலீபா உமரும் அலீ அவர்களும் உவைசை சந்தித்த செய்தி ஊருக்குள் பரவ அவரின் அந்தஸ்து ஒரே நொடியில் உயர்ந்தது. அவரை சந்திக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதையறிந்து ஒட்டகங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கிவிட்டு கண்காணாத இடத்திற்கு சென்று விட்டார் உவைஸ்.
அற்புதங்கள் நிறைந்த இவர்களின் வாழ்க்கை ...
உமர் அவர்களுக்காக அஜர்பைஜானில் நடந்த போரில் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்ததோடு முற்றுப் பெறுகிறது. அவர்களின் உடலை அடக்கம் செய்துவிட்டு பிறகு வந்து பார்க்கும் போது அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் காண முடியவில்லை.

இது ஒரு உண்மை வரலாறு.
இங்கே சொல்லப்பட்டது உவைசுல் கர்னி அவர்களின் வாழ்க்கை என்றாலும் அதன் உள்ளே புதைந்து கிடக்கும் ஞான ரகசியங்கள் ஏராளம்.

" ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா " என்று திருவை அப்துர் ரஹ்மான் எழுதி நாகூர் ஹனிபா அண்ணன் பாடியது போல் ...
ஞானத்தின் பட்டணம் நாயகம் அவர்கள்தான்.
அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஞானத்தின் தலைவாசல் அலீ அவர்கள்.
இறைநேசச் செல்வர் உவைசுல் கர்னி அவர்கள் .

சரி... இந்த கட்டுரைக்கும் இந்த சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம் ?
... இருக்கிறது. முக்கியமான சம்பந்தம் இருக்கிறது.

முதலில் ... பெரும்பாலானவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை உமர் அவர்கள் முத்தமிட்ட சம்பவத்தின் போது அவர்கள் , " ஏ கல்லே ! நீ ஒரு சாதாரணக் கல்தான் . நபிகள் ( ஸல் ) அவர்கள் உன்னை முத்தமிட்டதால்தான் நானும் உன்னை முத்தமிடுகிறேன் " என்று சொன்னதை மட்டும்தான் சொல்வார்கள் .
அதற்கு அலீ ( ரலி ) அவர்கள் சொன்ன விளக்கத்தை சொல்ல மாட்டார்கள். உமருக்குத் தெரியாத அந்த ஞான ரகசியம் அலீ ( ரலி ) அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பது ஒரு முக்கியமான விஷயம். உமர் ( ரலி ) அவர்கள் கலீபாவாக இருந்தாலும் ஆன்மீக படித்தரத்தில் அலீ அவர்களே முதன்மையாக இருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல...
" அலீ இல்லைஎன்றால் உமர் அழிந்திருப்பான் " என்று உமர் அவர்கள் சொன்னது சாதாரண விஷயமல்ல.
ஆக்கவும் அழிக்கவும் ஆற்றலுள்ளவன் அல்லாஹ் எனும்போது அலீ அவர்களால் உமரை அழிவிலிருந்து எப்படிக் காப்பாற்ற முடியும் ?
எல்லாம் அல்லாஹ்வின் செயல் என்பது நம்மை விட உயர்ந்த ஈமானின் அந்தஸ்திலிருந்த உமருக்குத் தெரியாதா ?
தெரிந்திருந்தும் அவர் அப்படிச் சொல்வாரா ?
அப்படிச் சொன்னாரென்றால் ....
" அலீயைக் கொண்டு அல்லாஹ் தன்னைக் காப்பாற்றினான் " என்று அதற்கு அர்த்தம்.

உவைசுல் கர்னி அவர்களைப் பற்றி நபிகளார் முன்னறிவுப்பு செய்து அவரிடம் துஆ செய்யும்படியும் சொன்னார்கள்.
நபிகளாரைவிட உவைசுல் கர்னி உயர்ந்த அந்தஸ்துள்ளவரா ?

பெருமானார் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்.
அல்லாஹ்வின் ஹபீப். தோழர்.
பெருமானார் துஆ செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டானா ?
உவைசுல் கர்னி துஆ செய்ய வேண்டுமா ?
அதுவும் அவரிடம் துஆ செய்யும்படி நபிகளாரே சிபாரிசு செய்ய வேண்டுமா ?
இதெல்லாம் நமக்கு ஆச்சரியமாக இல்லையா ?

இதில்தான் ஆன்மீக ஞானம் ஒளிந்திருக்கிறது.
நபிகளின் காலத்திலேயே அல்லாஹ் இறைநேசர்களின் சிறப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்
உவைசுல் கர்னி அவர்களைப் பற்றி நபிகளைக் கொண்டே அறிவிக்கச் செய்தான்.
பெருமானார் சொன்னதுபோலவே ராபியா , முளரு கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கை அளவுள்ள
முஸ்லிம்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று உவைசுல் கர்னி அவர்கள் சொன்னார்கள்.
அது எப்படி சாத்தியம் ?
அல்லாஹ் மன்னித்த விஷயம் உவைசுக்கு எப்படித் தெரியும் ?
அல்லாஹ் வஹி அறிவித்தானா ?
வஹி அறிவிக்கவில்லை. வஹி அறிவிப்பது நபிகளின் காலத்தோடு முடிந்து போய் விட்டது.
அசரீரி வந்ததா ?
அதுவும் இல்லை.
பிறகு எப்படி அல்லாஹ் மன்னித்தான் என்று உவைசுல் கர்னியால் சொல்ல முடிந்தது ?
அதுவும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலீபாவிடமும் அண்ணலாரின் மருமகனிடமும் !
உவைசுல் கர்னி சொன்னதை எந்த சந்தேகமும் இல்லாமல் அப்படியே நம்பினார்களே உமரும் அலீ அவர்களும் . எப்படி ?
அதுதான் நபிகள் கற்றுக் கொடுத்த பாடம்.

இல்ஹாம் எனும் உதிப்பை உள்ளத்தில் ஏற்படுத்துவதன் மூலம் தான் நாடிய இறைநேசர்களுக்கு அல்லாஹ் சில விஷயங்களை அறியச் செய்கிறான்.
ஒரு இறைநேசர் இறைவனிடம் துஆ கேட்டால் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வான்.
அவர் கேட்கும் உதவியைக் கொடுப்பான்.
அவருக்கு மட்டுமல்ல... அவர் யாருக்கெல்லாம் கேட்கிறாரோ அவர்களுக்கெல்லாம் கொடுப்பான்
அப்படிக் கொடுப்பதை அந்த இறை நேசர்களுக்கு அவன் அறிவித்துக் கொடுக்கவும் செய்வான்.
என்பதையே உவைசுல் கர்னி அவர்களின் வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது.

வலிமார்கள் உண்டு என்பதையும்
அல்லாஹ் அந்த வலிமார்களுக்கு உதவி செய்கிறான் என்பதையும்
அந்த வலிமார்கள் யாருக்கெல்லாம் உதவி கேட்கிறார்களோ அவர்களுக்கெல்லாம்
அல்லாஹ் நாடினால் உதவி செய்வான் என்பதையும்
இந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இன்ஷா அல்லாஹ் ....
அடுத்த அத்தியாயத்தில் இன்னும் சொல்கிறேன்.
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails