Abu Haashima
@ படம் ... மூணாறு
சமீபத்தில் மூனாறு மலைக்கு சென்று வந்தோம்.செல்லுமிடமெல்லாம் பசுமை பாய் விரித்திருந்தது.
சொகுசுக் காரில் மலை உச்சிக்கு செல்வது சுகமாகவே இருந்தது.
உச்சியில் நின்று மலையின் கீழே எட்டிப் பார்த்தால்
ஊரையே மலை சூழ்ந்திருந்த அழகான காட்சியில் மனம் லயித்துப் போனது.
அல்லாஹ்வின் அற்புத படைப்பாற்றலுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம்.
அன்று ...
மக்காவின் வீதிகளில் மாண்புகளின் நிறை மனிதர் முஹம்மது ரஸூலுல்லாஹ்
நடந்து சென்றபோது மக்கத்து குறைஷிகள் கல்லால் சொல்லால் நோவினைசெய்தார்கள் .
மனம் வேதனித்த பெருமானார் மக்காவின் சற்று தொலைவிலுள்ள தாயிப் மலைக்கு சென்று
அங்குள்ள மக்களையாவது இஸ்லாத்தின் பக்கம் அழைக்கலாமென்று முடிவு செய்தார்கள்.
தனது வளர்ப்பு மகன் ஜெய்தை அழைத்துக் கொண்டு தாயிப் நகருக்கு நபிகளார் சென்றார்கள்.
தாயிப் நகரை
அப்துல் யஹ்லீல்
மஸ்வூது
ஹபீப்
ஆகிய மூன்று மூர்க்கமுள்ள சகோதரர்கள் ஆட்சி செய்து வந்தார்கள்.
நபிகளார் கொண்டு வந்த இஸ்லாமிய மார்க்கத்தை
அந்த மூர்க்கர்கர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
" மலைமீது ஏறி வருவதற்கு ஒரு கோவேறு கழுதை கூட இல்லாத உம்மையா இறைவன் நபியாக அனுப்பினான் ?"
என்று கேலி செய்தார்கள்.
அவமானப் படுத்தினார்கள்.
சிறுவர்களை ஏவி விட்டு கற்களால் தாக்கினார்கள்.
தாக்குதலின் வேகத்தை பொறுக்க முடியாமல் நபிகள் மலையைவிட்டு இறங்க ஆரம்பித்தார்கள்.
நபிகள் திரும்பிச் செல்ல ஆரம்பித்ததும்
தாயிப் வாசிகளின் மனித நெறி அகன்று
மிருக வெறி அவர்களை ஆட்கொண்டது.
பெருமான் நபியவர்களை ஓட ஓட விரட்டினார்கள்.
கற்களால் கொலைவெறியோடு தாக்கினார்கள்.
புண்ணிய நபிகளின் பூப்பாதங்கள் பட்ட இடம் பச்சையாகும்.
தாயிப் நகரில்தான் அது ரோஜாவாக வண்ணம் காட்டியது.
ஆமாம் ...
புனிதரின் போன்னுடம்பிலிருந்து புது ரத்தம் சிந்தியது.
அமரர்களுக்கே பொறுக்கவில்லை.
ஜிப்ரயீல் அவசரமாக இறங்கி வந்தார் .
" நாயகமே .. இறைத் தூதே ...
ஆணையிடுங்கள் . இந்த தாயிப் மலையை புரட்டிப் போட்டு விடுகிறேன் " என்றார்.
பொறுமையின் நாயகர் புன்னைகையோடு " வேண்டாம் " என்றார்கள்.
" தாயிப் மக்களை சபித்து விடுங்கள் நாயகமே " என்றார் வளர்ப்பு மகன் ஜைது.
" நான் இவர்களை அழிக்க வரவில்லை.
இஸ்லாத்திற்கு அழைக்க வந்தேன்.
இன்றில்லாவிட்டால் நாளை
இவர்கள் இஸ்லாத்திற்கு மாறுவது திண்ணம்."
என பதிலுரைத்தார்கள் இணையற்ற அருளாளனின்
அருள் தூதர் அண்ணல் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்.
காலம் ஓடியது ....
இஸ்லாத்தின் மகத்தான மக்கா வெற்றிக்குப் பிறகு
தாயிப் வாசிகள் தரையிறங்கி வந்தார்கள்.
அவர்களின் தலைகளை சீவித் தள்ளுவதற்கு நாயகத் தோழர்கள்
வாளெடுத்து வந்தார்கள்.
அண்ணல் அவர்களை அமைதிப் படுத்தினார்கள்.
தாயிப் வாசிகள் தங்கள் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டு
பெருமானார் கரம் பிடித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் ...
@ மூணாறு மலையின் மீது காரில் செல்லும்போது
மனதில் மின்னலடித்த வரலாறு இது.
No comments:
Post a Comment