'வரலாறும், இலக்கியமும் இரு கண்கள்...' என இன்றைய தலைமுறையினர் கருத வேண்டும். அப்போதுதான் தங்களது சொந்த வரலாறு அறிந்து, தங்களுக்கே உரிய பாரம்பரியம், கலாச்சாரத்தைப் பேணி வாழ ஏதுவாக இருக்கும். காலம் கடந்து நிற்கும் சிறப்பு இலக்கியங்களுக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு சமூகமும் தங்களது தனித்த அடையாளத்தை, பாரம்பரியச் சிறப்பை, வாழ்வியலை இலக்கியமாக வடித்து எதிர்காலத் தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டியது வரலாற்றுக் கடமையாகும். இக்கடமையை முந்தைய தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் செம்மையாகச் செய்து வந்தனர். படைப்பிலக்கியங்களில் பெரும் பங்களிப்புச் செய்து தமிழ்மொழிக்கும் அழகு சேர்த்தனர்.
கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம்நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புறக்கணித்தபோது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும், இலக்கிய வடிவிலும் பெரும் பங்களிப்புச் செய்தது தமிழ் முஸ்லிம்புலவர்களே ஆவர். பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய இலக்கியம்என்றாலே சீறாப்புராணம் மட்டுமே நினைவுக்கு வரும்.
ஆனால்தமிழ் முஸ்லிம்கள் அந்தாதி, அம்மானை, கலம்பகம், கும்மி,கோவை, காவியம், குறவஞ்சி, சதகம், சிந்து, ஞானப்பாடல்,திருப்புகழ், பதம், பள்ளு, படைப்போர், மஞ்சரி, பிள்ளைத் தமிழ்,பாடல் திரட்டு, புராணம், பதிகம், நாமா, நாயகம், மஸாலா,மாலைகள், வண்ணம், வாழ்த்து, அலங்காரம், முனாஜாத், ஏசல்,
கிஸ்ஸா, லாவணி, தாலாட்டு, தூது என அனைத்து இலக்கிய வடிவத்திலும் ஏராளமான இலக்கியங்களை வடித்துள்ளனர்.
ஆனால் இன்றைய தமிழ் முஸ்லிம்கள் இலக்கியம் குறித்த விழிப்புணர்வு அறவே இல்லாமல் தங்களது சொந்த அடையாளத்தைத் தொலைத்து நிற்கின்றனர். இன்றைய இஸ்லாமிய இளம்தலைமுறையினருக்கு இலக்கியம் என்றாலே வேப்பங்காயாய்கசக்கிறது. உலகம் காட்சி ஊடகம், இணைய ஊடகம் என்பதையெல்லாம் தாண்டி வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது நாம் இன்னும் இலக்கியங்கள் குறித்த அடிப்படை ஞானம் கூட இல்லாமல் வாழ்வது எந்த வகையில் நமது இருப்பைச் சிறப்பிக்கும்?
நான் எழுதிய நாம் எங்கே நிற்கிறோம்? நூலிலிருந்து சில வரிகள்...
ராபியா குமாரன்
No comments:
Post a Comment