இறைவா ....
நீ
ஆதத்தை சந்தோஷப்படுத்த
ஹவ்வாவைப் படைத்து
சொர்க்கத்தைக் கொடுத்தாய்
அவரோ
ஹவ்வாவை
சந்தோஷப்படுத்த
கனியைப் புசித்து
பூமிக்கு வந்தார்
நீ
வேதங்களைத் தந்து
வழியைத் தந்தாய்
நாங்கள்
பேதங்களை வகுத்து
விழிகளை இழந்தோம்
நீ
அறிவைத் தந்து
உன்னை நினைக்கச் சொன்னாய்
நாங்கள்
உன்னை மறந்து
எங்களையே நினைக்கின்றோம்
நீ
ரட்சிப்பின் வாசலை
திறந்து வைத்திருக்கிறாய்
நாங்கள்
சாத்தானின் மாளிகையில்
மயங்கிக் கிடக்கிறோம்
நீ
மையவாடிகளை
பக்கத்தில் வைத்து
பயமுறுத்துகிறாய்
நாங்கள்
மடியில் மரணம் இருப்பதை
மறந்து திரிகின்றோம்
நீ
மன்னிப்பால் எங்களுக்கு
கருணை காட்டுகிறாய்
நாங்கள்
உன் கருணையை
பெறுவதற்காகவே
பாவிகளாகிறோம்
இறைவா ...
எங்களுக்கு
நீ
இரங்கவில்லையென்றால்
உன்
இரக்கமும்
கருணையும்
யாருக்காக ?
மறுமைக்கு மட்டுமல்ல
இறைவா
இம்மைக்கும் இரங்கு !
பர்மா முஸ்லிம்களுக்கு
உன்
உதவியை
இறக்கு !
Abu Haashima

No comments:
Post a Comment