சில மணி நேரங்கள் விழுந்த மழைத்துளிகளால் எத்தனை மாற்றங்கள் இந்த மண்ணில்..!!!
செம்மறியை ஒத்த சாரீரத்தில் குரல் எழுப்பி துணை தேடும் தவளைகள்! எங்கள் ராகதேவன் இளையாராஜாவுக்கு இசை சொல்லி இவைகள் தந்ததோ என எண்ணும் வகையில் வகை வகையாய் ரீங்காரமிடும் கிரிட்டிப்பூச்சிகள்! ஏழு சுவரங்களை தாண்டிய வகையில் எத்தனை அழகான இசைக்கச்சேரி! ஜதி சேர்ந்ததா அல்லது சுதி கூடியதா தெரியவில்லை! அந்த சாரீரம் இந்த சரீரத்தையும் அசைத்துப்பார்க்கிறது!
விண்மீன்கள் தெரியா வானம்! அதில் கார்மேகம் தனை மறைத்தும் மறையாமல் மறக்காமல் இருக்கிறேன் என்பதுபோல் பகுதியாய் நம்மை எட்டிப்பார்க்கும் வெண்ணிலாவின் வெள்ளை முகம்! கருமேகம் புரண்டும் வெள்ளை மழை பொழிந்தும் நாணம் கொண்ட வான மகளின் வெட்கம் இன்னும் குறையவில்லை! அவளின் நாணம் கூடியதை கூடுவதை எண்ணி வியந்து நானும் பார்க்கிறேன் இத்தனை நேரம்!
மரங்களிலும் செடிகளிலும் சில மின்மினிகள் மின்ன! அத்தனையும் ஆங்கே ஒளிப்பூவாய் மிளிர்கிறது! எறும்புகளுக்கு சிறகு முளைக்க அவைகள் இப்போதும் உழைத்து சேர்க்கின்றன தன் இறை கொடுத்த இரையை! இத்தனை பூச்சிகளும் இங்கே உண்டா என எண்ணிக்கை கொள்ளாமல் எண்ணம் கொள்ளும் சிறு வேளையிலும் அவ்வளவையும் மிகைத்து கூடிப்போய் கூடி பறக்கின்றன அத்தனை வண்ணங்களில்!
ஒற்றை மழை பொழிவதற்குள் இத்தனையும் எப்படி இங்கே...? வியக்கிறேன் என் இறைவா....! உன் மகிமையை! 💕
மழை விழுந்த இடமெல்லாம் உயிர் முளைத்ததாய் உணர்கிறேன்!
அல்ஹம்துலில்லாஹ்..💕
Samsul Hameed Saleem Mohamed
No comments:
Post a Comment