Friday, June 17, 2011

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களால் அதிமுக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்: கருணாநிதி!

திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட புதிய மின் திட்டங்களால் மின்பற்றாக்குறையே வருங்காலத்தில் இருக்காது என்றும் தங்கள் திறமையால்தான் இது சாத்தியப்பட்டது என்று அதிமுக பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்றும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார். திமுக ஆட்சியில் மின்பற்றாக்குறை தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

திமுக ஆட்சியில் மின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.


எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் உற்பத்தி 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் உற்பத்தி 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கும்.

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 2007-ல் தொடங்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு மே மாதம் உற்பத்தியைத் தொடங்கி இருக்க வேண்டியது. செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே அனல் மின்நிலையத்தில் 2008 -ஆம் ஆண்டு மேலும் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் உற்பத்தி 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.

உடன்குடியில் பி.எச்.ஈ.எல். மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொன்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு திட்டங்கள் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த இரண்டு திட்டங்களின் உற்பத்தி 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மற்றும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து 183 மெகாவாட் இணை மின்சாரம் தயாரிக்கக்கூடிய திட்டம், 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் உற்பத்தி 2011 ஆம் ஆண்டு தொடங்கும்.

மொத்தம் 4,183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. இதன் மூலம் 2010-11-இல் 1400 மெகாவாட் மின்சாரமும், 2011-12-ல் 3316 மெகாவாட் மின்சாரமும், 2012-13-ல் 1222 மெகாவாட் மின்சாரமும், 2013-14-ல் 1860 மெகாவாட் மின்சாரமும் மொத்தம் 7798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டன.

இந்தப் புள்ளிவிவரங்கள் திமுக ஆட்சியில் புதிதாக மின்சாரத்தை உற்பத்திச் செய்யக்கூடிய திட்டங்கள் எதையும் தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு தேவையான திடமான விளக்கமாக அமையும்.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் உற்பத்தி நிலையை அடையும்போது அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது.

அதிகத் தொழிற்சாலைகள்: 2006 - ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்காமல் இருந்திருந்தால் மின் கட்டுப்பாட்டு முறை வந்திருக்காதுதான். அதற்காக தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காமல் ஒரு அரசு இருக்க முடியுமா?

அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தித் திட்டங்களை அதிகமாகத் தொடங்காத காரணத்தால் திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கியதன் பயன் நிச்சயமாக வருங்காலத்தில் மின் பற்றாக்குறையே தமிழகத்தில் இல்லாமல் செய்திடலாம் என்று உறுதியாக நம்பலாம்.

அதிமுக ஆட்சியினர் தங்கள் திறமையால்தான் தமிழகத்திலே மின் பற்றாக்குறை இல்லாத நிலையை ஏற்படுத்தியதாக தற்பெருமை கொள்ளலாம். எப்படியோ, மக்களுக்கு மின்சாரம் கிடைத்தால் போதும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Source : http://www.inneram.com/2011061817312/tn-will-be-no-power-cut-state-soon-karunanidhi

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails