Monday, June 13, 2011

தற்செயலாய் வீடு உருவாகுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

ஏ, பி என்று இருவர் ஒரு காட்டிற்குள் சென்றனர். அங்கே ஒரு வீட்டை கண்டனர். ஏ உடனே ஒரு நோட்டை எடுத்து குறிப்பெடுக்க ஆரம்பித்தார்.

பி: (ஆச்சர்யத்துடன்)  என்ன செய்கின்றீர்கள்?

ஏ: இவ்வளவு அழகான வீடு நிச்சயமாக இயற்கையால் பல லட்ச ஆண்டுகளாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்......அது சம்பந்தமாகத்தான் குறிப்பெடுத்து கொண்டிருக்கின்றேன்.....

பி: இது அறிவுக்கு ஒத்து வரவில்லை. இதை யாராவது கட்டியிருக்க வேண்டும்...

ஏ: எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகின்றீர்கள்? இயற்கையால் இந்த வீடு உருவாகியிருக்க வாய்ப்பில்லையா?

பி: ஆம். உள்ளே வாருங்கள்....(உள்ளே செல்கின்றனர்). இங்கே பாருங்கள், அறைகள் எல்லாம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருகின்றன. இயற்கை தற்செயலாக ஏதாவது ஒரு உருவத்தை உருவாக்கலாம், ஆனால் நேர்த்தியான ஒரு அமைப்பை பலவித கணக்குகளோடு உருவாக்க முடியுமா?   

ஏ: ஏன் முடியாது? 

பி: அந்த அறைக்குள் செல்வோம் வாருங்கள்...(ஒரு அறைக்குள் செல்கின்றனர், அங்கே உள்ள ஒரு split A/C யை சுட்டி காண்பித்து)...இதோ பாருங்கள், இந்த குளிர் சாதன இயந்திரத்தை....இது உங்கள் கணக்குப்படி தானாகவே உருவாகி, பின்னர் சுவரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னை அமர்த்தி கொண்டு, அதற்கு பக்கத்தில் இருக்கும் power supply யுடன் தானாகவே இணைந்து ஒரு முழுமையான வேலை செய்யும் இயந்திரமாக வந்திருக்க வேண்டும். இது லாஜிக் என்கின்றீர்களா? இது அறிவியலா? 

இயற்கை இந்த அளவு ஒரு நேர்த்தியான working சிஸ்டத்தை உருவாக்கும் என்பது உங்களுக்கு சரியென படுகின்றதா?            

இது போலவே இந்த வீட்டிற்கு அடிப்படை போடுவதிலிருந்து, plumping, wiring என்று அனைத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்...      

ஏ: இல்லை, நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. யாராவது ஒன்றை உருவாக்கினார் என்று சொன்னால் அது அறிவியலில்லை....தற்செயலாக என்று கூறுவது தான் எனக்கு சரியென படுகின்றது....நீங்கள் அறிவியலுக்கு முரண்படுகின்றீர்கள்....நீங்கள் அறிவியலுக்கு எதிரி...  

பி: நான் சொல்வதில் லாஜிக் இல்லையா?...சரி உங்கள் வாதத்திற்கே வருவோம். உங்கள் கூற்றுக்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்?....இந்த கட்டிடம் உங்கள் வாதப்படி உருவாகும் போது நீங்கள் பார்த்தீர்களா? இல்லை வேறு ஏதாவது இப்படி உருவாகும் கட்டிடத்தை காட்ட முடியுமா?...

ஏ: இப்படி மற்றொரு கட்டிடம் உருவாக லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும். நம்மால் பார்க்க முடியாது...

பி: ஒரு ஆதாரமும் இல்லை என்று இப்படி சுற்றி வளைத்து சொல்கின்றீர்கள்....அப்படித்தானே.... ஆதாரமே இல்லாமல் நம்புவதற்கு பெயர் அறிவியலா?  

ஏ: நீங்கள் என்ன சொன்னாலும் சரி. யாராவது இதை உருவாக்கினார் என்று நீங்கள் சொன்னால் அதை என்னால் நம்ப முடியாது. இது தற்செயலாக தான் உருவாகியிருக்க வேண்டும்....அவ்வளவுதான்...

உங்களுடன் பேசுவதெல்லாம் டைம் வேஸ்ட். நீங்கள் இப்படியே பேசி அறிவியலுக்கு எதிராக இருங்கள். என்னைப் போன்றவர்கள் உங்களை பற்றி கவலைப்பட போவதில்லை...

பி: நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்....ம்ம்ம்... மிக்க மகிழ்ச்சி...   

.....பிரிந்து சென்று விடுகிறார்கள்...

பிறகு ஏ, எப்படி அந்த வீடு தற்செயலாய் உருவாகியிருக்கும் என்பதைப் பற்றிய தன் ஆராய்ச்சியை (???) தொடங்குகிறார்...

ஒரு மின்னல் வெட்டியதால் மண், சிமென்ட், தண்ணீர் எல்லாம் ஒன்றாக கலந்து சிமென்ட் கலவை உண்டாகி, பின்னர் காற்று இந்த பக்கமாக பலமாக அடித்ததால் சிமென்ட் கலவை செங்கல்லோடு சேர்ந்து ஒருபக்க சுவர் உண்டாகி, பின்னர் காற்று அந்த பக்கமாக பலமாக அடித்ததால் அந்த பக்க சுவர் உண்டாகி என்று மிக அற்புதமாக தன்னுடைய ஆராய்ச்சியை வழிநடத்தி செல்கின்றார்.  

என்ன? வீட்டின் அடிப்படை பற்றி எப்படி எழுதினார் என்று கேட்கின்றீர்களா?....

அதாவது, ஒரு சூறாவளி எங்கோ இருந்த TMT BAR கம்பிகளை (கம்பிகளும் தற்செயலாய் உருவானவைதான், அந்த அளவுடன், அந்த எடையுடன், அந்த நீளத்துடன்...)  அப்படியே தன்னோடு கொண்டு வந்து, அவற்றை அந்த கட்டிட இடத்தில் சொருகி விட்டு சென்றதாம்.    

இப்படியாக தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரையை முடித்து, அதனை, தன்னைப் போலவே கருத்துள்ளவர்கள் இருக்கக்கூடிய சங்கத்தில் சமர்ப்பித்தார் ஏ.

சிலபல நாட்கள் சென்ற பிறகு 'பி'க்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு. அழைத்தது ஏ தான். தன்னுடைய ஆய்வுக் கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றதாகவும், அந்த கட்டுரைக்காக தனக்கு விருது அளிக்கப்படுவதாகவும், அந்த விழாவில் நிச்சயம் பி பங்குக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். 

'பி'யும் சென்றார். தடபுடலாக நடந்து முடிந்தது விருது வழங்கும் விழா. நிகழ்ச்சி முடிந்ததும் 'ஏ'விடம் கேட்டார் பி... 

"வாழ்த்துக்கள்.... அடுத்து என்ன?"

"அடுத்ததா......ஒரு நகரமே எப்படி தற்செயலாய் உருவாகியிருக்கும் என்பது பற்றி தான் அடுத்த ஆய்வு...."

அவ்வளவுதான். அதிர்ச்சியில் உறைந்தார் பி..........................

"என்ன?...மிக சிக்கலான கட்டமைப்பையும், செயல்பாட்டையும் கொண்ட ஒரு நகரம் தற்செயலாய் உருவாகுமா?.......நம் உடலில் உள்ள மில்லியன் கணக்கான செல்கள் ஒவ்வொன்றும் ஒரு நகரத்திற்கு நிகரான கட்டமைப்பையும், செயல்பாட்டையும் கொண்டுள்ளதாக கேள்விப்பட்டிருக்கின்றேனே?....ஒரு வீடே தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை எனும்போது ஒரு நகரம் எப்படி........................." என்று தனக்குள் கேட்டவராய், "கற்பனை வளம் இருந்தால் போதும் போல" என்று நினைத்துக்கொண்டே நடையை கட்டினார். 

அந்த சங்கத்தை விட்டு வெளியேறும் சமயம், வரவேற்பறையில் தன் நண்பனை பார்க்கின்றார் பி.

"நீ என்னப்பா செய்கின்றாய் இங்கே?...அது என்ன கையில்? நோட்டா? என்ன எழுதிக் கொண்டிருக்கின்றாய்?' 

"ஒ அதுவா, எப்படி ஒரு பஸ் தானாகவே உருவாகியிருக்கும் என்பது பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்றேன்...."

"டேய் நீயுமா......................."

"அட நீ ஒண்ணுப்பா...இப்படியெல்லாம் எழுதினாத்தான் இந்த சங்கத்துல உறுப்பினரா இருக்க முடியும்...ஒரு complete system தானாக உருவாக வாய்ப்பில்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்....இதெல்லாம் சும்மா ஜாலிக்குதான்.... கண்டுக்காதே"

"உனக்கே தெரியும்னு சொல்ற...அப்புறம் ஏன் இன்னும் இந்த சங்கத்துல உறுப்பினரா இருக்கணும்னு ஆசப்படுற" 

"என்னப்பா தெரியாத மாதிரி கேட்குற. இவங்களுக்கு தான் ஆராய்ச்சிக்காக பணம் அதிகம் வருது. இங்க இருந்தாதான் நல்லா காசு பார்க்க முடியும்"  

"பொழைக்க தெரிந்தவன்டா நீ" என்று சொல்லி புன்னகைத்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்  பி...........

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

பரிணாமம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் காண <<இங்கே>> சுட்டவும்... 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.......

உங்கள் சகோதரன்,

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails