Monday, August 15, 2011

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 1

பேறு பெற்ற பெண்மணிகள் என்ற தலைப்பில் சகோதரர் அதிரை அஹ்மது அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் தொடராக இன்ஷா அல்லாஹ் அதிரைநிருபர் வலைத்தளத்தில் வெளிவர இருக்கிறது. அவ்வகையில் இன்று முதல் பதிவாக "முஸ்லிமான முன்னோடி" பதிவுக்குள் வந்திருக்கிறது.

அருட்கவி அல்லாமா இக்பால் அவர்களின் கவிதையை தமிழாக்கம் செய்து இந்த புத்தகத்தின் பதிப்புரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள் இந்நூல் ஆசிரியர் அதிரை அஹ்மது அவர்கள்.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள வரைமுறைகளுக்கு உட்பட்டு, முஸ்லிம் பெண்கள் தஅவாக் களத்தில் உளமார உழைக்கத் தொடங்கினால், பெரிய பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும்; வியப்பிற்குரிய நல்ல விளைவு களைக் காண முடியும்.

நன்றாய்க் கேட்பாய் எம்முஸ்லிம்
    நங்காய் ! மாலைப் பொழுதினையே

தென்றல் காலைப் பொழுதாக்கு
    தேர்ந்த இறையின் அன்பர்க்கே

என்றும் குர்ஆன் மறையோதி
     இறைவாக் கின்படி நடப்பாய்நீ

உன்றன் இனிய மறையோசை
   உமரின் விதியை மாற்றியதே !"

[ * இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களின் நேர்வழித் திருப்பத்திற்கு, அவருடைய தங்கையான ஃபாத்திமா(ரலி) அவர்களின் இனிமையான மறையோசைதான் காரணம் என்ற வரலாற்று நிகழ்வு இங்கு நினைவு கூறப்படுகின்றது.]

இஸ்லாமிய அழைப்புத் தொண்டில் எத்துணைப் பெரிய பங்களிப்பு முஸ்லிம் பெண்களுக்கு உண்டு அதன் விளைவு எங்கெல்லாம் பிரதிபலிக்கும் என்பதைத் தெள்ளிதின் விளக்குகின்றது, இக்பாலின் கவிதை.

முஸ்லிமான முன்னோடி

"கிறிஸ்த மதத்தின் Trinity என்ற திரியேகத்துவக் கொள்கையால், அம்மதத்தின் மீது எனக்கு ஒருபோதும் பிடிப்பு உண்டாகவில்லை ! கன்னிமேரியின் மகன் கடவுளுக்கும் மகனா?! என்னால் ஜீரணிக்க முடியவில்லை. முதல் மனிதர் ஆதம் மண்ணால் படைக்கப்பட்டார் என்ற அடிப்படைக் கொள்கையே, திரியேகத்துவக் கொள்கையைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கி விடுகின்றது. எனவேதான் கிறிசஸ்தவ மதம் பொய்மையால் புனையப்பட்ட ஒரு மதம் என்ற முடிவுக்கு நான் வந்தேன்".

மேற்கண்ட கூற்றுக்குரியவர் யார் தெரியுமா ?
அவர் ஒரு பிரபலம்! ஆணில்லை; பெண் !

கி.பி. 1856-இல் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேம்ஸ் பூஷனானின் உறவினர், Madam Khalidha Buchanan Hamilton!

இங்கிலாந்துக் கடற்படையில் துணை சர்ஜன் ஜெனரலாகப் பணியாற்றிய ஜெனரல் சார்ல்ஸ் வில்லியம் பூஷனான் ஹேமில்ட்டன் என்ற பெரும் புள்ளியின் அரும் மனைவி!

ஜெனரல் ஹேமில்ட்டன் 1929ல் இறப்பதற்குச் சில நாட்கள் முன்பு இஸ்லாத்தைத் தழுவினார். கணவரை இஸ்லாத்தின்பால் ஈர்த்தவரே லேடி காலிதாதான்!

லண்டனின் உயர் குடும்பத்தைச் சேர்ந்த மேடம் காலிதா, இங்கிலாந்தின் இஸ்லாமியச் சமூகத்துடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். நடையால், உடையால், பழக்க வழங்களால், அன்றைய இங்கிலாந்துக் குடும்பப் பெண்ணுக்கு ஒரு முன்மாதிரியானவராகத் திகழ்ந்தார் மேடம் காலிதா.

இயல்பாய் அமைந்த தியாக உணர்வும் தான தருமச் சிந்தையும் பிறர் துன்பத்தைக் கண்டு வேதனைப்படுவதும் ஆகிய நற்குணங்கள், இவரோடும் அவர் தேர்ந்தெடுத்த புதிய வாழ்க்கை நெறியோடும் ஒட்டிக் கொண்டன. அதே வேளை, கிறிஸ்த்துவத் திருச் சபயைச் சார்ந்த ஆங்கிலேயச் சமூகத்தால் கவர்ந்திழுக்கப்படாமல் தற்காத்து கொண்டார்.

அவரின் உதவி தேடி வந்த கீழை நாட்டு ஏழை முஸ்லிம் களைத் தன் கனிவான பார்வையால் வரவேற்று, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வந்தார். அந்த அளவுக்கு அவ்வம்மையாரை இஸ்லாம் வார்த்தெடுத்திருந்தது.

அக்காலத்தில் இங்கிலாந்தின் முஸ்லிம் சமுதாயத்தைத் தலைமை ஏற்று வழி நடத்தியவர் லார்டு ஹெட்லி (Lord Headle) என்ற கோமான்.

அவர் இறந்த பிறகு, லேடி காலிதா பூஷனான் தலைமைப் பொறுப்பை ஏற்றார், அதன் பின்னர், தனது செல்வமனைத்தையும் முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவே தியாகம் செய்தார்.

லேடி காலிதா 1942ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி லெட்ச்வொர்த் ஹெர்ட்ஸ் (Letchworth Herts) என்ற ஊரில் இறப்பெய்தினார் (இன்னாலில்லாஹி..!)

"நவீன காலக் கிறிஸ்தவ மதம் பழுதுபட்டுப் போய், உயிரற்ற பிணமாயிருப்பதால், சிந்தனைத் திறனுள்ள எவரும் அதனை மார்க்கமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்" என்பது, லேடி காலிதா பூஷனான் ஹேமில்ட்டன் கூறிய முத்தான மொழியாகும்.
தொடரும்...

- அதிரை அஹ்மது
Source : http://adirainirubar.blogspot.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails