Saturday, August 20, 2011

'நோன்பு' அதனை நீ விரும்பு

நோன்பின் நோக்கம் என்பது ஏழைகளின் பசியை அறிந்துக் கொள்வதற்காக என இஸ்லாம் நமக்கு எங்குமே கூறவில்லை. அடுத்தவர்களின் கையை எதிர்ப்பார்த்து வாழும் பரம ஏழைகளாகவே இருந்தாலும்கூட ரமளானில் நோன்பு நோற்பதை இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது.நோன்பு முறையினால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறினாலும் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம் என இஸ்லாம் குறிப்பிடவில்லை. நோன்பு நோற்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு என்னதான் நோக்கமாக இருக்கும்?

“நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் இறைவனை அஞ்சி (பயபக்தியுடன்) நடந்துக் கொள்வதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது”. (அல்குர்ஆன் 2:183) என்று அல்லாஹ்தஆலா கூறுகிறான்.

அதாவது மனிதன் மறுமையின் வெற்றியை அடைய இறையச்சத்துடன் வாழவேண்டும். அந்த இறையச்சத்திற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சியை நோன்பு நோற்பதின் மூலம் நாம் பெறுகிறோம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலோ, தாகித்திருப்பதிலோ அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் சண்டைக்கு வந்தால், (அல்லது) யாரேனும் திட்டினால் “நான் நோன்பாளி” என்று கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி (1893, 1903)

 அல்லாஹ்வின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ரமளான் நோன்பின் முழு பயனையும் அடைய‌ பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டும் போதாது. நாம் நோன்பு நோற்பதுடன் அலட்சியமாகக் கருதிக் கொண்டிருக்கும் ஆபத்தான பாவங்களை விட்டு நாம் தவிர்ந்துக் கொள்ளவேண்டும். நோன்பின் மூலம் எடுக்கப்படும் இந்தப் பயிற்சி மற்ற 11 மாதங்களிலும் நம்மிடம் சிறந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.  நோன்பின் மூலம் நாம் பொய் சொல்வதிலிருந்தும் அதுபோன்ற மற்ற‌ தீய நடவடிக்கையிலிருந்தும் விலகிக் கொள்ளவில்லை என்றால் அது நோன்பே அல்ல, வெறும் பட்டினிதான் என்பதை நினைவில் கொள்வோமாக! அதுபோன்றதொரு நிலையை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!
by mail from : A.R.SULAIMAN SHAIT Al Ahmadiah Contracting & Trading
Dubai - U.A.E

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails