Monday, August 15, 2011

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 2

என் வாழ்வை மாற்றியமைத்த நிகழ்ச்சி

"நான் எப்போது, ஏன் இஸ்லாத்திற்கு வந்தேன் என்று அடிக்கடி பலர் என்னிடம் கேட்கிறார்கள். இஸ்லாம் என்ற உண்மை மார்க்கம் எப்போது என்னில் விடியலானது என்பது பற்றிக் குறிப்பாக எனக்குத் தெரியாது என்று மட்டும் என்னால் கூற முடியும். ஆனால், நான் எப்போதுமே முஸ்லிமாகவே இருந்து வந்திருக்கின்றேன் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று தனது வாழ்வைப் பற்றி அறிமுகம் செய்கிறார் ஆங்கிலேயச் சீமாட்டி லேடி எவலின் கொபோல்டு என்ற ஜைனபு.

ஏனென்றால், தன் குழந்தைப் பருவம் முதல் இஸ்லாமியச் சூழலில் (அல்ஜீரியா நாட்டில்) வளர்ந்து, முஸ்லிம் தோழிகளுடன் சேர்ந்து இறைவணக்கமாகிய தொழுகையைப் பழகி, அரபு மொழியைப் பேசக் கற்று, உள்ளத்தளவில் முஸ்லிம் சிறுமியாக வளர்ந்து வந்ததாகப் பெருமைபடக் கூறுகிறார் ஜைனபு.

இஸ்லாமியச் சூழலில் வளர்ந்ததால், முஸ்லிம்களின் நடையுடை, பாவனைகள் தன்னிடம் இயல்பாகவே அமைந்துவிட்டதாகக் கூறும் ஜைனபு, பிற்காலத்தில் இத்தாலி நாட்டிற்குக் குடிபெயர்ந்து சென்ற பின்னரும் பெரியவளாகி, முஸ்லிம் பெண்கள் அணியும் நீண்ட கருப்பு உடை (புர்கா) அணியும் பழக்கமுடையவரானார்.

ஒரு தடவை இத்தாலியின் தலைநகர் ரோமில் தங்கியிருந்த போது, "போப்பைச் சென்று கண்டு வரலாமா?" என்று கேட்டாள் ஜைனபு தங்கியிருந்த வீட்டுத் தோழி.

அனைத்துலகக் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரை நேரில் காண்பது என்ற நிகழ்வை நினைத்தபோது, உடலில் ஒரு வித சிலிர்ப்பு ஏற்பட்டதாம். தனது வழக்கமான கருப்பு உடையுடனே தோழியுடன் சென்றார் ஜைனபு!

அங்கு நடந்ததை அவரே கூறுகின்றார்: "புனிதச் சபையில் அமர்வதற்கு நாங்கள் அனுமதியைப் பெற்றோம். வித்தியாசமான தோற்றத்தில் என்னைக் கண்ட போது அந்த புண்ணியவான் (போப்), என்னை கத்தோலிக்கப் பெண்தானா எனக் கேட்டார்.

நான் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. நான் ஒரு நொடியில் அதிர்ந்து போனேன்! இருப்பினும் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு, 'நான் முஸ்லிம்' என்று மறு மொழி கூறினேன்.

அந்த நிமிடம் வரை, என்னை முஸ்லிம் என்று கருதிக் கொண்டிருந்தேனே அல்லாமல், இஸ்லாத்தை பற்றிய அறிவை வளர்ப்பதில் பின் தங்கியிருந்தேன்.

என்னை முஸ்லிம் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நிமிடத்திலிருந்து, தீவிரமாக இஸ்லாத்தைப் பற்றிப் படிப்பதில் ஆர்வம் காட்டினேன். இந்த நிகழ்ச்சி, ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்தது போன்று எனது வாழ்கையை மாற்றியமைத்தது!

எவ்வளவு கூடுதலாக நான் படித்தேனோ, அவ்வளவு இஸ்லாம் வாழ்கைக்கு உகந்த நெறி என்ற ஆழமான நம்பிகை என்னுள் ஏற்பட்டது. இவ்வுலகு எதிர்கொள்ளும் படுபயங்கரமான பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறும் வாழ்க்கை நெறி இஸ்லாம்தான் என்றும், மானிட இனத்திற்கு அமைதியையும் மகிழ்சியையும் தர வல்லது இஸ்லாமே என்றும் உணர்ந்தேன். ஆழமாக என்னுள் இஸ்லாம் வேரூன்றிற்று."

பிரிட்டானிய முஸ்லிம் சமூக வரலாற்றில் ஜைனபு கொபோல்டுக்கு ஓர் ஒப்பற்ற இடமுண்டு. சவுதி அரசாங்கத்தின் விருந்தினராக ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிய முதல் முஸ்லிம் ஆங்கிலப் பெண்மணி இவர். ஹஜ்ஜுக்குச் சென்ற ஆண்டு 1933!

பிரிட்டனில் இருந்த முஸ்லிம்கள் 1933 டிசம்பர் 14 ஆம் தேதியன்று லேடி ஜைனபுக்கு வரவேற்பும், திருநபி நினைவு நாளுமாக விழா ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர். அக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பிரிட்டிஷ்காரர்களுடன், இந்தியர், ஆப்கானியர், எகிப்தியர், சிரியாக்காரர்கள், ஈரானியர், அரபிகள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரும் வந்திருந்தனர். அம்மாநாட்டில் லேடி ஜைனபு சிறப்புப் பேச்சாளராக அமர்த்தப்பட்டிருந்தார்.

தமது சொற்பொழிவினூடே, முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது, உண்மைச் சேவைக்காக எவ்வாறெல்லாம் அந்த மாநபி அவர்கள் துன்பங்களை நுகர்ந்தார்கள் என்பதை உருக்கமாக விளக்கி, இறுதியில் அத்திருநபியவர்களின் போதனைகள் வெற்றிக் கொடி நாட்டின என்பதை விரிவாக விளக்கினார்கள்.

தாம் மேற்கொண்ட ஹஜ்ஜுப் பயணம் பற்றியும், மக்கா, மதீனாவிற்கும் புனிதப் பகுதிகளின் படங்களைத் திரையில் போட்டும் காட்டியும் அனைவரையும் ஆனந்தக் களிப்பில் ஆழ்த்தினார்.

பின்னர் தமது ஹஜ் அனுபவங்களைத் தொகுத்து, Pilgrimage to Mecca என்ற நூலாக வெளியிட்டார். இந்நூலைப் படித்த மேலை நாட்டினர் ஏராளமானோர் இஸ்லாத்தைத் தழுவினர் அதற்கு காரணம், மேற் கண்ட நூலில், ஐரோப்பா முழுவதும் பரவியிருந்த இஸ்லாத்திற்கெதிரான கருத்துகளுக்குத் தக்க மறுப்புரை வழங்கி, இஸ்லாத்தைப் பற்றிய கருத்துகளுக்கு வலு சேர்த்திருக்கிறார். அந்நூலைப் பற்றிய ஆய்வில் Manchester Guardian என்ற பத்திரிகை, "இஸ்லாத்திற்கு எதிராக அறியாமையால் கிளப்பி விடப்பட்ட புழுதிப் புயலான எதிர்வாத இலக்கியங்களுக்குச் சரியான பதிலடி கொடுத்து - வரவேற்கத் தக்க ஆறுதலைக் தரக் கூடியது இந்நூல்" என கூறிற்று.

'The Times' பத்திரிகை, "இந்நூல் தகவல்களை நேரடியாகவும் நேர்மையாகவும் கூறக்கூடியது. மேலை நாட்டினருக்கு அறிமுகமில்லாத, மக்கா மதினா பற்றிய அரிய புகைப்படங்கள் பல இடம் பெற்றிருப்பது, இந்நூலின் மதிப்பை உயர்த்துகின்றது" என்று கருத்துத் தெரிவித்தது.

லேடி ஜைனபுவின் ஹஜ்ஜுப் பயண விவரங்களைப் பற்றிய ஒரு சில குறிப்புகள்:

  • சவுதி அரசாங்கப் பிரதிநிதியாக இங்கிலாந்தில் பணிபுரிந்த ஷெய்க் வஹ்பாவின் பரிந்துரையின் பேரில் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற 1933 ஏப்ரல் மாதம் ஜித்தா வந்து சேர்ந்தார் ஜைனபு.
  • இங்கிலாந்துத் தூதராக சவுதிக்கு நியமிக்கப்பட்டிருந்த சர் ஜான் ஃபில்பியின் விருந்தினராக ஜித்தாவில் ஒரிரு நாட்கள் தங்கியிருந்தார்.
  • ஃபில்பியின் ஏற்பாட்டில், முஸ்தபா நாஸிர் என்ற அறிவார்ந்த வழித் துணைவருடன் முதலில் மதீனாப் பயணத்தை மேற்கொண்டார்.
  • வழியில் மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட, நெடுஞ்சாலை வாகனப் போக்குவரத்துக்குச் சிரமாமனது என்று போலீஸ்காரர்கள் மரியாதையுடன் எச்சரித்தனர். திறமையான காரோட்டி, இலகுவாக அவ்வழியைக் கடக்க உதவியதால், நலமாக மதினாவுக்குப் போய்ச் சேர்ந்தார்.
  • மதீனா ஆளுநரின் உத்தரவின் பேரில், இச்சிறப்பு விருந்தனருக்காகப் பள்ளிவாசலின் வாயில்கள் திறந்தே வைக்கப்பட்டிருந்தன. மஸ்ஜிதுந் நபவியில் தொழுது, மனநிறைவு அடைந்தார் ஜைனபு.
தொடரும்.. 
- அதிரை அஹ்மது
Source : http://adirainirubar.blogspot.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails