கேள்வி – ஹஜ்ஜூக்கு செல்லும்போது ஊர் முழுவதும் அறிவித்து எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். ஊர் மக்கள் வந்து வழியனுப்பி வைக்கிறார்கள் இது முறையா… போகும் போது மாலை போடுதல் அல்லது வந்த பிறகு மாலை போடுதல் என்ற பூமாலை நிகழ்ச்சியும் நடக்கின்றது. ஹஜ் சென்று வந்த பின் தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்கிறார்கள். இப்படி போட்டுக் கொள்ளலாமா…? ஜின்னா – யாஹூமெயில் வழியாக.
நாம் பிற மனிதர்களுக்கு இழைக்கும் குற்றங்கள் – தவறுகள் இவற்றிர்க்கு நாம் மரணிக்கும் முன்பே சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் விதி. இந்த பொதுவான அடிப்படையில் – இந்த நோக்கத்திற்காக – ஹஜ்ஜை அறிவித்து உள்ளங்களை தூய்மைப்படுத்திக் கொண்டால் தவறில்லை. ஏனெனில் ஹஜ் செய்ய போகும் இடத்தில் மரணம் நிகழ்ந்து விடலாம். பிறகு இறைவன் முன்னிலையில் குற்றவாளியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும். அதனால் மக்களிடம் பிழை பொருக்க சொல்லி விட்டு செல்லலாம். (பொதுவாக இது எல்லா பயணத்திற்கும் பொருந்தும்)
இதை விடுத்து இதர நோக்கங்களுக்காக ஹஜ் அறிவிக்கப்படுமானால் அது இஸ்லாத்திற்கு மாற்றமானதாகும். இன்று பல ஊர்களில் இந்த நோக்கத்திற்கு மாற்றமாகத்தான் ஹஜ் விளம்பரப் படுத்தப்படுகிறது. போஸ்டர் அடித்து ஒட்டி ஏக – போக பந்தாவாக ஹஜ்ஜூக்கு கிளம்புவதை பார்க்கலாம். மக்கள் தனது ஹஜ்ஜை அறிந்து தன்னைப் பற்றிப் பேசிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பரவலாக ஹஜ்ஜை விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளில் தான் பூமாலையெல்லாம் போட்டு விழாக்கோலமாக்கப்படும். இந்த பந்தா – விழாக் கோலத்தின் பிரதி பலிப்புதான் ஹஜ் முடித்துவிட்டு வந்த பிறகு தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஹஜ் செய்தவர் அல் ஹாஜ் என்றும் போட்டுக் கொள்வதாகும். (தனக்கு வரும் திருமண அழைப்பிதழில் ஹாஜி என்று போடாமல் வந்து விட்டால் அதற்காக சண்டைப் போடும் விளம்பர ஹாஜிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்)
இது முழுக்க – முழுக்க இஸ்லாமிய வணக்கத்திற்கும் அது எதிர்பார்க்கும் உள்ளத்தூய்மைக்கும் மாற்றமான செயலாகும்.
இறைவனுக்காக செய்யப்படும் அமல்கள் எது ஒன்றிர்க்கும் முழு உரிமையாளனும் அதற்கு கூலி கொடுப்பவனும் அவனேயாவான். இந்த அமல்கள் வேறு நோக்கங்களுக்காக செய்யப்பட்டால் அந்த அமல் இறைவனின் பார்வையில் வெறும் குப்பைக் கூளமாக்கப்பட்டு விடும்.
மக்கள் தன்னை பெரும் வணக்கசாலி என்று கூறி புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் அமல் செய்பவர்கள் நாளை நரகில் தூக்கி வீசப்படுவார்கள். அவர்கள் எதிர்பார்த்த புகழ் உலகிலேயே கிடைத்து விட்டது என்று இறைவன் கூறுவான் என நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள் (ஹதீஸ் சுருக்கம்) (முஸ்லிம்)
இறைவனுக்காக செய்யப்படும் எந்த ஒரு காரியத்திற்கும் புகழுக்கான விளம்பரம் கூடாது என்று இந்த ஒரு நபிமொழியே எச்சரித்து விடுகிறது.
தினமும் தவறாமல் தொழும் ஒருவர் தன் பெயருக்கு முன்னால் ‘முஸல்லி’ என்று (உதாரணமாக ‘முஸல்லி அப்துல் காதர்’ அதாவது தொழுகையாளி அப்துல் காதர்) என்று போட்டுக் கொள்வதில்லை.
‘நோன்பாளி அப்துல் அளீம்’ என்று யாரும் தன் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் தர்மம் செய்யும் ஒருவர் – ஜகாத் கொடுக்கும் ஒருவர் தன்னை ‘கொடை வள்ளல்’ என்று விளம்பரப்படுத்துவதும், ஹஜ் செய்தவர் தன்னை ஹாஜி என்று விளம்பரப்படுத்துவதும் (சில ஆலிம்?கள் உம்ரா செய்து விட்டு வந்து தன்னை உம்ரி என்றும் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்) இறைவனுக்கு உகந்த செயல்தானா என்று விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
(நபியே) நீர் கூறும் மெய்யாக என் தொழுகையும் என் குர்பானியும் (ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட அமல்) என் வாழ்வும் என் மரணமும் அகிலங்களில் இறைவனான அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. இப்படித்தான் நான் ஏவப்பட்டுள்ளேன். (அல் குர்ஆன் 162, 163)
‘இப்படித்தான் ஏவப்பட்டுள்ளேன்’ என்ற ஏவலின் பிரகாரமே நபி(ஸல்) வாழ்ந்துக் காட்டினார்கள். அவர்களோ – அவர்களை சார்ந்த நபித்தோழர்களோ இந்த விளம்பரங்களை கண்டு அஞ்சினார்கள். இதனால் நாளை இறைவனிடம் கூலி கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து அதை வெறுத்து ஒதுக்கினார்கள். இந்த மன நிலை இறைவனுக்காக செயல்படும் ஒவ்வொரு முஸ்லிமிடமும் வர வேண்டும்.
Source http://islamthalam.wordpress.com/
No comments:
Post a Comment