தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் சங்கம்
பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க வரலாற்றுச் சுருக்கம்:
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாட்டைத் துறந்து, உழைத்துப் பொருளீட்டும் உயர்வான எண்ணத்தில் நூற்றுக்கும் சற்று குறைவான தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்கள் அமைதி தவழும் சியாம் என்றழைக்கப்படும் தாய்லாந்தின் தலைநகரமாம் பேங்காக்கில் தொழில் செய்து வந்தார்கள்.அதுசமயம், நமது இளைநர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள, கருத்துபரிமாறிக் கொள்ள இனிய மாலைப்பொழுதுகளை இன்புற கழிக்க ஒரு பொது இடமின்றி தவித்தனர். பெரும்பாலான சமயங்களில் ஹோட்டல் லாபிகளில் அமர்ந்து நாட்டு நடப்புகள்,தொழில் விஷயங்களை பேசிக்கொள்வார்கள்.
அப்போது சிலோம் சாலையில் அமைந்திருந்த ராமா ஹோட்டல், விக்டோரியா, நாராய் லாபிகளில் அமர்ந்து கருத்துப் பரிமாறிக்கொள்வர். காயல்பட்டணம் ஹாஜி H.M..செய்யது உமர், ஹாஜி S.M.கலீல், கீழக்கரை ஜனாப் I.M..ஜாபிர், சி.ஹா எனும் சின்ன ஹமீது, ஜமால் முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் நமக்கென்று ஒரு அமைப்பு வேண்டும் என்று பேசி அப்போதைய மூத்த பிரமுகர்கள் கீழக்கரை குளோபல் டாக்டர் P.R.L.அபூபக்கர் ஹாஜி, சைய்யது சதக்கத்துல்லாஹ், தரங்கம்பாடி காசீம் மரைக்காயர், காரைக்கால் ஜக்கரியா மரைக்காயர், சாலிஹ் மரைக்காயர், முஸ்தபா மரைக்காயர், ரவூஃப் நானா, டி.எஸ்.முஹம்மது ஷா, அம்பகரத்தூர் ஹாஜி எம்.எம்.அப்துல்லாஹ், எம்.எம்.மாலிக் ஹாஜி, ஏ.எம்.செய்யது ஹாஜி....ஆகியோர்களை சந்தித்து நமக்கென்று ஒரு சங்கம் தேவை என்று வலியிறுத்தினர்.
தன்னலமற்ற சேவைகளை ஊக்குவிப்பதில் முதலிடம் வகிக்குமிவர்கள் அனைவரும் ஆலோசனை கலந்து, தேவை உணரப்பட்டு முறையாக தமிழ் முஸ்லிம் சங்கத்தை நிறுவினார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க அதன் முதல் கூட்டத்தை 04.04.1975 அன்று சிலோம் நாராய் ஹோட்டலில் ஏற்பாடு செய்து துவக்க விழாவிற்கு சிராஜீல் மில்லத் அல்ஹாஜ் A.K.A.அப்துஸ்ஸமது M.A.,M.P.அவர்களை அழைத்து வாழ்த்தி சிறப்புரையாற்றச் செய்தனர்.
பேங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் முதல் தலைவராக கீழக்கரை குளோபல் டாக்டர் ஹாஜி P.R.L.அபூபக்கர் அவர்களும்,செயலாளராக தரங்கம்பாடி காசீம் மரைக்காயர் அவர்களும் இதர நிர்வாகிகளும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இடம்:
நிர்வாகிகள் பொற்ப்பேற்ற பின்னர் சங்கம் செயல்படுவதற்காக M.T.S. மரைக்காயர் என்றழைக்கப்படும் மு.தம்பி சாஹிப் அவர்கள் ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் அருகிலுள்ள தனது சொந்த இடத்தை வாடகை ஏதுமின்றி சங்கம் நடத்த கொடுத்து உதவினார்கள்.
சங்கப்பதிவு:
அரசாங்க விதிமுறைப்படி சங்கத்தை பதிவு செய்ய வேண்டிய பொறுப்பை ஹாஜி சீர்காழி T.S.முஹம்மது ஷா அவர்கள் பொறுப்பு எடுத்துக்கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை காரைக்கால் A.M.ஜக்கரிய்யா மரைக்காயர் அவர்கள் தனது அலுவலகத்தில் வைத்து செய்து கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.
சங்கத்தின் முதல் சொந்தக்கட்டிடம்:
M.T.S.கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சங்கம் பின்பு தலைமை தபால் நிலையத்திற்கு எதிரிலுள்ள A.E. நானா கட்டிடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது.பின்பு நமது சங்கத்திற்கென்று சொந்த கட்டிடம் தேவையென்று உணர்ந்து 1977ஆம் ஆண்டு புதிய கட்டிடம் வாங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
புதிய பள்ளிவாசலின் தோற்றம்:
சங்கத்தின் உறுப்பினரகளால் புதிய பள்ளிவாசல் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, பேங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் உறுப்பினர்களிடம் மட்டுமின்றி, வெளிநாடு வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடமும் தாராள நிதியுதவி பெறப்பட்டு, நீடூர் ஹாஜி ஸலாஹுத்தீன் அவர்கள் பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத் தலைமைப் பொறுப்பை அலங்கரித்த காலத்தில், அல்லாஹ் உதவியால், ஹிஜ்ரீ 1427 ஷஃபான் முதல் நாள், கி.பி. 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று புதிய பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு வக்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
காயலரின் பங்களிப்பு:
தற்போது பள்ளியின் தலைவராக நமதூரைச்சேர்ந்த வாவு ஹாஜி எம்.எம்.சம்சுதீன் அவர்களும், துணைச்செயலாளராக அல் ஹாபிழ் அல் ஆலிம். எம்.ஏ.அபுல் ஹஸன் ஷாதுலி அவர்களும், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக மு.ஹ.செய்து முஹம்மது சாலிஹ் அவர்களும், மு.அ.முஹம்மது செய்து அவர்களும் சிறப்புற பணியாற்றி வருகிறார்கள்.
இஃப்தார் ஏற்பாடுகள்:
ரமழான் மாத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்கு காயல் தினசரி கஞ்சி, சம்சா ரோல், பழ வகைகள், ரோஸ் மில்க், இளநீர் கடற்பாசி மற்றும் மஃரிப் தொழுகைக்குப்பிறகு சூடான காயல் தேனீரும், தராவீஹ் தொழுகைக்குப் பிறகு சூடான பால் – சிற்றுண்டி பரிமாறப்படுகிறது.
கியாமுல் லைல் தொழுகையை காயல்பட்டினத்தைச் சார்ந்த மவ்லவீ ஹாஃபிழ் ஷாதுலீ ஃபாஸீ, ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான் ஆகியோரும் வழிநடத்துகின்றனர். மவ்லவீ ஹாஃபிழ் ஷாதுலீ ஃபாஸீ சென்ற ஆண்டுதான் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கியாமுல் லைல் தொழுகையின் இடைவேளையில் சுக்கு டீ, பிஸ்கட்டும், தொழுகை முடிந்ததும் சஹர் உணவாக வாழைப்பழத்துடன், பிரியாணி, நெய்ச்சோறு, களறி கறியுடன் கூடிய சாப்பாடு ஆகியவை காயல்பட்டினத்தைச் சார்ந்த பாலப்பா முத்து மொகுதூம் கைவரிசையில் ஆண்கள், பெண்கள் என சுமார் 500 பேருக்கு தமிழ் முஸ்லிம் சங்கத்தினரால் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்துப் படங்களையும் தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக!
பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க பள்ளிவாசலில் தினமும் நடைபெறும் ஐவேளைத் தொழுகை, ரமழான் தராவீஹ், இஃப்தார், கியாமுல் லைல் உள்ளிட்ட நிகழ்வுகளை www.bangkok-mosque.com என்ற வலைதள முகவரியில் அசைபடமாக (வீடியோ) காணலாம். GPRS வசதி கொண்ட கைபேசிக் கருவியில், eagleeye என்ற மென்பொருளைப் பயன்படுத்தி, ஒளி/ஒலி (Audio/Video)யுடன் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க அங்கத்தினர் அனுப்பித் தந்துள்ள வரலாற்றுச் சுருக்க மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல்:
M.H.முஹம்மத் ஸாலிஹ்,
நிர்வாகக் குழு உறுப்பினர்,
பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கம்.
படங்கள்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து.
Source : http://kayalpatnam.com
----------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment