Tuesday, April 24, 2012

ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல்


ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல்
ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
----------------------------------------புறநானுறு

மேற்படி வரிகள்... "மனிதனுக்கு தர்மம் செய்யும் சிந்தனை தழைத்தோங்கச் செய்வதற்காக இயற்றப்பட்ட செய்யுட்பா" என என் ஆசிரியர் கூறியபோது, "இல்லை...ஐயா, பிச்சை எடுப்பதை ஒழிப்பதற்காகவும் இயற்றப்பட்ட புரட்சிப்பா... என்றுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தம் இறுதியில் கூறுவது போல தெரிகிறதே..!" என ஆசிரியருடன் தொடர்ந்து நான் வாதிட்டதால்... பெஞ்சு மேல் ஏற்றப்பட்டேன்.(!?)


'இது என்ன தண்டனையோ..? மற்ற மாணவர்களை விட என்னை உயர்ந்த இடத்தில் வைக்கிறாரா நம் ஆசிரியர் (?!)' என்ற சிந்தனையில் நான் மூழ்கி இருந்த போது, "இதை இயற்றியவர் யார்?" என்று ஆசிரியர் கேட்க, "பொற்கிழி பரிசில் பெறுவதற்காகவே புகழ்ந்து பாடி பாடல் புனையும் புலவர்களை இடித்துரைக்கும் பொருட்டு, தமிழ்ப்புலமை கொண்ட ஓர் அரசனால் இயற்றப்பட்டதாக இருக்கலாம் ஐயா...!" என்று பெஞ்சில் நின்றவாறே என் கருத்தை கூறியபோது... ஆசிரியரால் வகுப்பினின்றும் வெளியேற்றப்பட்டேன்..!

இது ஒருபுறம் இருக்க...பள்ளிக்காலங்களில்  நான் படித்த இந்த வரிகள் என்னை சிந்திக்க வைத்தன. உண்மையில், 'யார் பிச்சை எடுக்கலாம்',  'யார் தர்மம் செய்ய வேண்டும்' என்ற... "இதற்கான சரியான வரைமுறை எது?... இருவருக்குமான தகுதிகள் யாவை..?" என்ற என் கேள்விக்கு பள்ளியில் ஆசிரியரிடம் சரியான விடை எனக்கு கிடைக்கவில்லை. இதற்கு விடை இல்லை என்றால், ஒரு கோடீஸ்வரரும் தன்னை ஏழை எனலாம். ஒரு பெயர் தெரியா சாலையோர பிச்சைக்காரரும் தன்னை பணக்காரர் எனலாம். இவர்களை பிரித்தறிவிக்க என்ன அளவுகோள்..?

அதாவது, நாம் ஓர் ஊரை விட்டு வெளியேறினால்... அதன் எல்லை முடிவை... "நன்றி..! மீண்டும் வருக..!" என்ற அறிவிப்புப்பலகை மூலம் அறியலாம். அதேபோல ஊரின் எல்லை துவக்கத்தை, "நல்வரவு...! அன்புடன் வரவேற்கிறோம்..!" என்ற அறிவிப்புப்பலகை மூலம் அறியலாம். அடுத்தடுத்து ஒட்டியுள்ள  இரண்டு ஊர்களுக்கு ஒரே பலகையில் இரண்டு அறிவிப்புகளையும், அந்த ஒரே பலகையின் இரண்டு புறங்களிலும் கூட காணலாம். இதன் மூலம் இரு ஊர்களின் எல்லைகளை நாம் அறியலாம், அல்லவா..?

நான் கேட்பதும்  அதே போலத்தான்,
"இதுபோல இரண்டையும் பிரித்தறிவிக்கும் ஒரு அறிவிப்பு பலகை... 'இவர் பணக்காரர்- இவர் ஏழை' என்ற ஓர் அலகு அந்த 'ஏழை-பணக்காரன் அளவுகோளில்' எந்த இடத்தில் வருகிறது..?"
----என்பதுதான்..!

உலகின் பல  அரசுகளும் இன்று தத்தம் நாடுகளில் 'வறுமைக்கோடு' என்று ஓர் அளவை வைத்திருக்கின்றன. ஆனால், அது ஒவ்வொரு நாட்டுக்கும் அந்ததந்த நாட்டு பொருளாதாரம் மற்றும் பணமதிப்பின் அடிப்படையில்தான் அந்த வறுமைக்கோடு உள்ளதே தவிர, உலகளாவிய சர்வதேச வறுமைக்கோடு என்று ஒன்று பொதுவாக இல்லை. அது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

மேலும், எனக்கு ஓரிருமுறை பணநெருக்கடியான சூழல் ஏற்பட்டு, நண்பர்களிடம் கடன் கேட்கும் போது, என் அவசர சூழலைத்தான் விவரித்தேனே அன்றி, இக்கட்டான சூழலில் அழகிய முறையில் தன் சகோதரனுக்கு கடன் கொடுப்பதால் அவருக்கு கிடைக்கப்போகும் மறுமை நன்மைகளை அவரிடம் பட்டியலிட்டதில்லை. கடன் கேட்பவர் இதை கூறாமல் இருப்பதும், கடன் கொடுப்பவர் இதை அறிந்து இருப்பதும்தான் சிறப்பு, அல்லவா..?
.
ஆனால், வெள்ளிக்கிழமை ஜும்மாவில் மட்டுமே இஸ்லாமிய சிந்தனை என்று வளர்ந்த அந்நேரத்தில், மாதத்தில் ஓரிரு வாரங்களில் வெளியூரிலிருந்து பள்ளிக்கு வரும் சில மவ்லானாக்கள், பள்ளியின் இமாமுக்கு பதிலாக ஜும்மா உரை நிகழ்த்துவார்கள். அப்போது, பெரும்பாலும் ஜகாத்(கட்டாய தர்மம்), சதகா(தர்மம்) இவற்றை செய்வோருக்கான இவ்வுலக-மறுவுலக சிறப்புகளை நன்மைகளை எல்லாம் அரைமணிநேரம் பட்டியலிட்டு கூறிவிட்டு, இறுதியாக தங்கள் பொருளாதார தேவைகளை மக்களிடம் கூறி ஜகாத் கேட்கும்போதுதான் என்னுள் ஒரு பரிதாப உணர்வு தோன்றும்... இவ்வளவு சிறப்புகளையும் இவர் அடைந்து கொள்ள, ஈயென இரக்கும் இவருக்கு கொடுத்து வைக்க வில்லையே என்று..! இரப்பவரே இதை கூறாமல் இருப்பதும், ஈபவர் இதை அறிந்து வைத்திருப்பதும்தான் சிறப்பு, அல்லவா..?

மேலும், இவர்களில் சிலர் உழைக்க நல்ல உடல்நலனுடன் திடகாத்திரமான உடலுருப்புக்களுடனும், இளமையாக இருப்பர். அப்படியெனில், இவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் நன்மைகளை அடைந்து கொள்ள இவர்கள் ஏன் ஜகாத் கொடுப்பவராக முயற்சிக்கக்கூடாது..? அப்போது, எனக்குள் தோன்றிய... என்னுடைய இந்த 'யார் ஏழை... யார் பணக்காரன்', 'யார் யாசிக்கலாம்', 'எப்போது ஈயென இரக்கலாம்', 'யாருக்கு, எப்போது கொள்ளென கொடுக்கலாம்?' என்ற பல அரசுகளும் அவற்றின் சட்டங்களும் விடைசொல்ல முடியாத கடினமான இக்கேள்விக்கு... துல்லியமான பதிலை நாம் பெற முடியுமா..? எனது இளம்பிராயத்து இத்தேடலின் இறுதிப்புகலிடம் இஸ்லாமிய ஆவணங்களான அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ்..!

குர்ஆனில், தர்மம் செய்வது என்பது தொழுகையுடன் கூடவே சேர்ந்து பல இடங்களில் பலமுறை மீண்டும் மீண்டும் வலியுருத்தப்படுவதால், கொள்ளென கொடுத்தலாகிய ஜகாத் & சதகாவின்  முக்கியத்துவத்தை நாம் அறியலாம். அதில் ஒரு வசனத்தில் யார் யாருக்கெல்லாம் நம்முடைய கடமையான தர்மங்கள் உரித்தானவை என்றும் இறைவனால் கூறப்பட்டுள்ளது.

தர்மங்கள் - யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:60)



இங்கே... கூர்ந்து கவனித்தால் மேற்கூறப்பட்ட ஏனைய எட்டு பிரிவினரில் ஒரே ஒருவர்தான் யாசிப்பவர்...! யாசிப்பதால், 'இவர் தர்மம் செய்யப்பட வேண்டியவர்' என்று ஒரு பிரிவினரை மிக இலகுவாக அறியலாம். இதில் ஏழைகளும் இருப்பர்..! ஏழை அல்லாதோரும் இருப்பர்..! ஏனென்றால்...

அடுத்து, ஒரே ஒரு பிரிவினர்தான் ஏழைகள்...! அதாவது, யாசிக்காத தன்மானமுள்ள ஏழைகள்..! அதேநேரம், மீதம் உள்ளவர்கள் இவ்விரு பிரிவினரும் இல்லை..! ஆனால், மற்றவர்களை 'இவர்கள் தர்மத்துக்கு உரியவர்கள்தான்' என்று எப்படி அறிவது..? இதுதான் இஸ்லாம். நம் அறிவிற்கும் சிந்தனைக்கும் தீனி போடும் நுண்ணிய இஸ்லாம். எனது மேற்படி கேள்விகளுக்கும் பதில் தந்த இஸ்லாம். அது பற்றிய அழகிய சிந்தனைகளை  இறைநாடினால் பின்னர் பகிர்ந்துகொள்கிறேன்...
----------------------------------------------------------------
இப்பதிவின் தொடர்ச்சியை  இங்கே வாசியுங்கள் சகோ..!
Source : http://pinnoottavaathi.blogspot.in/2011/04/vs.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails