Wednesday, December 26, 2012

இந்தியாவில் இஸ்லாம் - (பகுதி 1)

 எழுதியவர் தோப்பில் முஹம்மது மீரான்

இந்தியாவில் இஸ்லாம் மார்க்கம் பரவியதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலரும் பற்பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.

இதில் எது உண்மை, எது பொய் என்று வரலாறு ஆசிரியர்கள் எனக் கூறப்படுபவர்கள் யாருமே திட்டவட்டமாகத் தங்கள் முடிவைத் தெரியப்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் சில குளறுபடிகள் ஊடுருவியதால் உண்மைகளை அதன் நிஜநிலையில் தெரிந்து கொள்ளச் சிரமங்கள் பல ஏற்படுகின்றன.

தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில்தான் முதன்முதலாக இந்தியாவில் இஸ்லாம் தோன்றியது எனக் காட்டுவதற்கான அடிப்படை ஆவணங்கள் எதையுமே அதிகாரப்பூர்வமான நமது வரலாற்று விற்பன்னர்கள் யாரும் மேற்கோள் காட்டவில்லை.

ஆதாரம் எதுவுமின்றி மொட்டையாக வடபகுதியில் தோன்றுவதற்கு முன்மேற்கு கடலோரப் பகுதிகளில் இஸ்லாம் பரவியதாகக் கூறி முடிக்கின்றனர். ஆதாரமற்ற இக்கூற்றை சிலர் மறுக்கின்றனர். முகம்மது இப்னுகாசிம் சிந்து மார்க்கமாக கூரிய வாளேந்தி வந்து இரத்தம் சொட்டச் சொட்ட இஸ்லாத்தைப் பரப்பினார் என்று உறுதிப்படுத்த சில ஆவணங்களை முன்வைக்கின்றனர்.


சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மலபார் கடற்கரை வாயிலாகத்தான் முதன்முதலாக இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது என்று கூறுகின்றனர். அதற்குப் பழங்கால அரபி நாணயங்கள் சிலவற்றையும், சில பள்ளிவாசல்களில் பொறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்புகளையும் ஆதாரம் காட்டுகின்றனர்.

அந்த ஹிஜ்ரி ஆண்டுகள் உண்மையானவைகளல்ல என்று வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இவர்கள் தம் மறுப்பை உண்மைப்படுத்துவதற்காக சில பலகீனமான ஆவணங்களையும் காட்டுகின்றனர்.

இந்தியாவில் இஸ்லாம் தோன்றியதைப் பற்றியும், அது தென்னகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தான் முதலில் தோன்றியது என்றும் வாதாடுபவர்களும், எதிர்வாதம் புரிபவர்களும் “இந்திய வரலாற்று ஆசிரியர்கள்” என்ற அந்தஸ்தைப் பெறாதவர்கள். அதனால் இவர்களுடைய கருத்துக்களை வரலாற்றுப் புலிகள் யாரும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தஸ்து பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளவோ, தெரிந்தவற்றை வெளியே சொல்லவோ தயங்குகின்றனர்.

வெள்ளையர்கள் கோடிட்டுக் காட்டிய, தடம் நோக்கி நடந்த நம் வரலாற்று ஆசிரியர்களானாலும் சரி, மேல்நாட்டு ஆசிரியர்களானாலும் சரி, இந்திய வரலாற்றுப் பக்கங்கள் தென்னகத்திற்கு குறிப்பாக கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் போதிய இடஒதுக்கீடு செய்யவில்லை. இந்தக் கஞ்சத்தனமான இடஒதுக்கீட்டின் இருக்கமான பகுதியில் இஸ்லாத்தின் வருகையைப் பற்றி ஆராய்ந்து எழுத இடமில்லாமல் போய்விட்டது.

- தோப்பில் முஹம்மது மீரான்
நன்றி: மக்கள் உரிமை

 இறைவன் நாடினால்! ‘இந்தியாவில் இஸ்லாம். தொடரும்.

Source : http://adiraipost.blogspot.in/2012/12/1.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails