Monday, December 10, 2012

தொழுகை ஓதுதலை ஒலிபரப்ப வேண்டாம்!

பள்ளிவாசலில் தொழுவதை வெளி மைக்கின் மூலம் ஒலிபரப்ப வேண்டாம் என்று தமிழகத்தின் மூத்த ஆலிம்களில் ஒருவரான மவ்லவீ, டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்களைத் தலைவராகக் கொண்ட நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்மானம். ஒவ்வொரு மஹல்லாவும் பொறுப்புணர்வுடன் அதை ஏற்று நடப்பது மிகவும் அவசியம் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.

நோன்பு கால தராவிஹ் தொழுகைக்கு மைக்கை தெருவுக்குத்தெரு கட்டி வயோதிகர்களையும், நோயாளிகளையும், பெண்களையும், குழந்தைகளையும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளையும் பற்றி சிறிதுகூட கவனத்தில் கொள்ளாமல்; தொல்லைக்குள்ளாக்கும் செயலை ஏதோ நன்மையான காரியமாக் கருதி அதை நடைமுறைப்படுத்தி வருவது அமைதி மார்க்கமான இஸ்லாம் காட்டித் தந்த வழியல்ல.
கூட்டுத்தொழுகை என்பது பள்ளிவாசலுக்கு வருகின்றவர்களுக்கு மட்டுமே. அதை வெளி மைக் மூலமாகவும் தெருவுக்குத்தெரு குழல் ஒலிபெருக்கி மூலமாகவும் ஒலிபரப்பும்போது வீட்டிலுள்ள பெண்கள் தனித்து தொழும்போது அது எவ்வளவு இடையூறை விளைவிக்கும் என்பதை எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

சில ஊர்களில் நோன்பு காலத்தில் தராவிஹ் தொழுகை மட்டுமின்றி, நோன்பு திறந்து சிறிது நேரத்திற்குள் குர்ஆன் சி.டி.யை மைக்கில் போட்டு நோன்பாளிகளின் நிம்மதியைக் கெடுக்கும் செயலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ‘திருக்குர்ஆன் ஓதக்கேட்டால் அதை செவி தாழ்த்திக் கேளுங்கள்’ என்பது இறைக்கட்டளை. நோன்பாளிகள் நோன்பு திறந்தவுடன் சற்று ஓய்வாக இருக்கும் அந்த நேரத்திலும் குர்ஆனை ஒலிக்கச்செய்வது முறையா?

இதே பழக்கத்தில் சாதாரண காலங்களிலும் ஃபஜ்ர், மஃரிப், இஷா போன்ற வக்துகளிலும் வெளி மைக்கில் இமாம் தொழ வைப்பதை ஒலிபரப்புவதை சில மஹல்லாக்கள் நடைமுறைக்கே கொண்டு வந்து விட்டன என்றுகூட சொல்லலாம்.

சுன்னத்தையும், ஃபர்ளையும் பேணுவதில் அசட்டையாக இருப்பவர்கள் பித்அத்தை பின்பற்றுவதில் மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை!

தற்போது நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைப் போல் மாநில ஜமாஅத்துல் உலமா சபையும் தீர்மானம் நிறைவேற்றி எல்லா மஹல்லாக்களும் அதனைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துவது அவசியம்.  (நிர்வாகி, நீடூர் இன்ஃபோ)

நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிறைவேற்றயுள்ள தீர்மானம்:
பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகை மற்றும் ஓதுதலை வெளி மைக்கின் மூலமாக ஒலிபரப்பி மஹல்லா முழுவதும் கேட்க வைப்பது கூடாத செயலாகும். மேலும் நமது மக்கள் குர்ஆன் ஓதுதலை அவமதிக்கிற சூழ்நிலை ஏற்படுவதுடன் நாட்டுச் சூழ்நிலையில் பின் விளைவுகள் ஏற்படும் என்று அச்சம் இருப்பதாலும் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்று கண்ணியமிக்க ஜமாஅத் நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

ஒலியை உள் வாங்கி தூரத்தில் உள்ளவர்களக்கும் கேட்கும் வண்ணம் செயல்படக் கூடிய நவீன கருவிகளில், ஒலிபெருக்கி மிகவும் பயனள்ள பங்களிப்பை ஆற்றி வருகிறது.

பள்ளிவாசல்களில் தொழுகை நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பதில் ‘நகராக்கள்’ என்னும் முரசுகள் பயன்படுத்தப்பட்டன. பிறகு மின்சார ஒலி பெருக்கி வந்த பிறகு அதன் மூலம் பாங்கு சொல்லப்பட்டது. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இது நடைமுறையில் உள்ளது.

ஆனால் சமீப காலமாக ஐவேளைத் தொழுகையும் சில பள்ளிவாசல்களில் நேரடியாக ஒலி பெருக்கி மூலம் ஒலி பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் செயல் நமது சமுதாயத்தினரை மட்டுமின்றி பிறரையும் முகம் சுளிக்க வைக்கிற சூழிநிலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாம் யாருக்குமே எந்த வகையிலும் இடைஞ்சல் செய்யாத மார்க்கம். ஆனால் சில பள்ளிவாசல்களில் ஆர்வக் கோளாறு காரணமாக ஒலி பெருக்கியைத் தங்கள் இஷ்டத்திற்குப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

தொழுது கொண்டிருப்பவர்கள் மட்டுமின்றி தொழுகையில் ஓதப்படும் குர்ஆன் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் அதற்கான ஒழுக்கத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

வீடுகளில் இருக்கும் பெண்கள் வயோதிகர்கள் குர்ஆன் ஓதுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அசிரத்தையாக இருப்பார்களானால் அது அவர்கள் மீது குற்றத்தை ஏற்படுத்தி விடும்.

பிற சமுதாயத்தினர் நம்முடைய தொழுகையினால் ஏற்படும் சப்தங்களை சகித்துக் கொள்ளாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் விமர்சனம் செய்யக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.

மேலும் தெருவுக்குத் தெரு குழாய் கட்டி எல்ல மக்களும் எல்லா நேரங்களிலும் குர்ஆன் சப்தத்தைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்துவது மார்க்க விதிகளுக்கு முரணானது.
மவ்லவீ, டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி (ஜமாஅத்துல் உலமா, நெல்லை மாவட்ட தலைவர்)

நன்றி: முஸ்லிம் முரசு, நவம்பர் 2010
source: http://www.nidur.info/data/index.php?option=com_content&view=article&id=2645:தொழுகை-ஓதுதலை-ஒலிபரப்ப-வேண்டாம்!&catid=37:கட்டுரைகள்&Itemid=58

3 comments:

mohamedali jinnah said...

தொழ வைபவர்கள் பின்னால் நின்று தொழுபவர்களுக்கு கேட்கும் அளவுக்கு ஒலி எழுப்பி தொழ வைத்தால் போதும் அதைவிடுத்து இரண்டு வரிசைக்கு தொழுபவர் இல்லாத நிலையிலும் ஒலி பெருக்கி வைத்து பள்ளிவாசலை தாண்டி வெளியே கடைத்தெருவுக்கு கேட்கும் அளவுக்கு தொழ வைக்கும் நிலை ஏனோ! குர்ஆன் ஓதி தொழ வைக்கும் போது ஒலி கடைத்தெருவில் வந்து கேட்க அதற்கு மரியாதை தராத நிலையை உண்டாக்குவதும் சரியாகப் படவில்லை.

மக்கா மதினாவில் தொழ வைக்கின்றார்கள் உடனே மக்கள் அதற்கு மரியாதை தந்து செயல் படுகின்றார்கள். அதை காரணம் காட்டி ஐந்து வேலை தொழுகைக்கும் சில கிராமங்களில் இந்த செயலை கடைபிடிப்பது உசிதமல்ல. அதாமை ஒலி பெருக்கி வைத்து அழைப்பது சிறப்புதான். https://www.facebook.com/nidurali

Burhan said...

நிச்சயம் நடைமுறை படுத்த வேண்டிய காலத்திற்கு ஏற்ற சரியான தீர்பு. எந்த ஒன்றும் குறைவாக இருக்கும் பொது அதன் மதிப்பு அதிகம், இது மைக்குகும் பொருந்தும்.
பாங்கு மைக்கில் சொன்ன உடனே தொலைக்காட்சிஐ அணைத்து விட்டு செவி தாழ்த்தி கேட்கும் காலம் ஒன்று இருந்தது. பிறகு நியூஸ் தானே என்று நமக்கு நாமே சமாதானம் கூறி கொண்டோம், இப்பொழுது எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது. பாங்கு போய்கொண்டு இருக்க பல வீடுகளில் தொலைக்காட்சி சத்தம் எகிறுகிறது ஏனெனில் அது நெடுந்தொடர் போய்கொண்டு இருக்கும் நேரம்!!!

mohamedali jinnah said...

வேதமும் புர்கானும்

وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ .- Qur`an:2:53

2:53. இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).(குர் ஆன் :2:53.)

And [recall] when We gave Moses the Scripture and criterion that perhaps you would be guided.- Qur`an:2:53

LinkWithin

Related Posts with Thumbnails