Wednesday, January 16, 2013

அழகிய அழைப்பு.......

அன்பான சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

சக்திவேல் முதலியார் என்பவர் இஸ்லாத்தை குறித்து விமர்சனம் செய்வதனை இக்குழுமத்தில் ஏற்கனவே சில சகோதரர்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். இந்நிலையில் அவரை நேரடியாக போய் சந்தித்து தூய இஸ்லாத்தை எடுத்துரைப்போம் என நாம் முடிவு செய்த அடிப்படையில் சென்ற சனிக்கிழமை அன்று அபுதாபியிலிருந்து 125 கிமீக்கு அப்பால் இருக்கும் ஸ்வேஹான் சென்று அவரை நேரடியாக சந்தித்தோம்.

தனக்கு இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் என்ற வெறி எல்லாம் கிடையாது என்றும் சில முஸ்லிம் சகோதரர்கள் எங்கள் இந்து கடவுள்களை மிகவும் கொச்சையாக விமர்சித்த காரணத்தினால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டதால் தான் அவ்வாறு விமர்சித்தேன் என்றும் குறிப்பிட்டார். மேலும் அவரது குடும்பத்தை கூட விட்டு வைக்காமல் சிலர் விமர்சித்து உள்ளனர், இதே இடத்தில் படிக்காத பாமரன் ஒருவன் இருந்திருந்தால் அவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருப்பான் அந்த அளவுக்கு தனது பிறப்பையும், தனது மனைவியையும் உங்கள் இஸ்லாமிய சகோதரர்கள் விமர்சித்துள்ளனர் என்று ஆதங்கப்பட்டார். இதன் விளைவுகள் தான் என்னையும் அசிங்கமான முறையில் கருத்திட வைத்து விட்டது. ஒருவர் அல்ல பலர் இப்படி கமெண்ட் செய்யும் போது ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இப்படி தான் இருப்பர் போல என்று தான் எண்ணியதாகவும் குறிப்பிட்டார்.


அவரது ஆதங்கம் முழுவதனையும் கேட்ட பின்னர் தூய இஸ்லாத்தை குறித்து அவருக்கும் நாம் எடுத்து சொன்னோம். நல்ல முறையில் செவி தாழ்த்தி கேட்டார், சில சந்தேகங்களையும் கேட்டார். தான் 2009 வரை வின்டிவி நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்தவன் என்றும், சகோ.பீஜேவின் உரைகளை நான் ரசித்து கேட்பேன் என்றும் குறிப்பிட்டார்.

நம்முடன் வந்தவர்களில் சகோதரர் லுக்மான் ராஜா இஸ்லாத்தை தழுவியவர் ஆகும். அவர் இந்து சாஸ்திரங்கள், வேதங்கள் எல்லாவற்றை குறித்தும் “இஸ்லாம் தான் ஈருலக வெற்றிக்கு வழி” என்பதனை நான் புரிந்து கொண்டதால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் என்று கூறிய போது மிகவும் உன்னிப்பாக அவர் கவனித்தார்.

“இஸ்லாமிய சகோதரத்துவம்” என்னை வெகுவாக கவர்ந்துள்ளது என்று அந்நேரம் குறிப்பிட்ட சகோதரருக்கு திருமறை குர்ஆன் மொழியாக்கம், மாமனிதர் மற்றும் வருமுன் உரைத்த இஸ்லாம் ஆகிய நூற்களை வழங்கினோம். அத்துடன் அபுதாபி மண்டலம் நடத்தும் 9வது பிற மத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டிக்கு அழைப்பு கொடுத்தோம். தான் கட்டுரை எழுத முயற்சிப்பதாகவும் எங்களிடம் அவர் தெரிவித்தார்.

இறுதியாக விடைபெறும் நேரம், “இஸ்லாம் குறித்து என்னிடம் இருந்த கெட்ட எண்ணத்தினை தங்களின் வருகை மூலம் என்னிடமிருந்து மாற்றி விட்டு செல்கிறீர்கள்” என்று குறிப்பிட்டது நமக்கு மகிழ்வை தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் இவருக்கு நேர்வழியை காட்ட நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
—Mohammad Sheik

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails