Sunday, January 6, 2013

இந்தியாவில் இஸ்லாம்-2

எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ உமர்

கவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள்

சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்(?) “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார்.

இங்கு இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இம்மூன்று இருண்ட நூற்றாண்டுகளுக்குள் அடங்குவதால் இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தடயங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.

தென்னிந்தியாவிலுள்ள வல்லரசுகளான சாளுக்கியர், பல்லவர், பாண்டியர், இராஷ்ட்டிகூடர் போன்றவர்கள் கேரளா (சேரநாடு) மீது படையெடுத்த குறிப்புகளில் காணப்படும் சில செய்திகள் இந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில அறிவுகள் புகட்டுகின்றன.


நம்மைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான இம்மூன்று நூற்றாண்டுகளில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை நாம் தெரிந்து கொள்வதற்கான கல்வெட்டுகளோ, இலக்கியங்களோ, செப்பேடுகளோ எதுவும் நம் பார்வைக்குக் கிடைக்காமல் போய்விட்டது துர்பாக்கியம் என்றே கூறவேண்டும்.

நிலைமை இவ்வாறிருக்க, எதை ஆதாரமாகக் கொண்டு “இந்த விடியாத இரவில்” நடந்த சரித்திரச் சிறப்புமிக்க உலகளாவிய உன்னதமான ஒரு மார்க்கம் நம்நாட்டிற்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்த சுபமுகூர்த்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்? எதிர்வரும் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது எவ்வாறு?

இந்தியாவின் வடபகுதி வாயிலாக முகமது இபுனுகாசிமையும், அவரைத் தொடர்ந்து வந்தவர்களையும் இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தவர்களாகச் சித்தரிப்பதற்குப் பெரும் சிரமம் மேற்கொண்டு பல பிறமொழி நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, மொழியாக்கம் செய்து தங்கள் கற்பனைக்கேற்றவாறு இந்திய வரலாற்றைத்திறம்பட சிருஷ்டித்தவர்கள், இந்தியாவின் தென்பகுதியில் இஸ்லாம் தோன்றியது குறித்து சரிவர ஆராயாமலும், கவனம் செலுத்தாமலும் மவுனமாக இருந்து விட்டனர்.


இந்தியாவுக்குள் இஸ்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் உருவத்தில் அத்துமீறி நுழைந்தது என்ற அவர்களுடைய கூற்றைப் பொய்ப்பிக்கும்படி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் அமைதியாகத் தோன்றிப் பரவிய உண்மையைத் தெரிந்த வெள்ளையர்களும் அவர்களுடைய வழித்தோன்றல்களான இந்திய வரலாற்று ஆசிரியர்களும் ஒளிமயமான இந்த மூன்று நூற்றாண்டுகளையும் வரலாற்றில் இருண்ட காலம் என்று சித்தரித்து உதாசீனம் செய்துவிட்டனர்.

மக்கள் மத்தியில் கருத்து வேற்றுமை எனும் படம் எடுக்கும் பாம்பை ஏவிவிட்டு தம் ஆட்சியை உறுதிப்படுத்த வெள்ளையர்கள் செய்த சதித்திட்டம்தான் இந்த உதாசீனம். இது பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல வரலாற்று நிஜங்களை ஆராய்ந்து அறியத்தடயங்கள் இல்லாமல் தடையாகிவிட்டது.

ஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வருகைதந்த அரபி வணிகர்களும் இஸ்லாமிய பிரச்சாரகர்களும் தம் வருகைகளைக் குறிக்கும் சில ஆவணங்களை இங்கு விட்டுச் சென்றனர் என்பது உண்மையேயாகும். அவைகள் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அன்று கட்டிய பள்ளிவாசல்களிலும் சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன.

முஸ்லிம் மூதாதையர்களின் கவனக் குறைவாலும், அவற்றின் விலைமதிப்பு என்னவென்று அறியாததாலும் பலவும் அழிந்து போய்விட்டன. எஞ்சிய சிலவற்றை போர்ச்சுக்கீசியருடைய படையெடுப்பின் போது முஸ்லிம்களைக் கூட்டுக்கொலை செய்த வேளையிலும் பழங்கால மஸ்ஜித்களை இடித்துத் தரைமட்டமாக்கிய நாசச் செயலிலும் காணாமற் போய்விட்டன.

சில ஆவணங்கள் இன்னும் எஞ்சியுள்ளதாகத் தெரிய வருகிறது. அவைகள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயனளிக்காதவாறு சில சுயநலக் கும்பல்களிடம் சிக்கிவிட்டதாக அறியமுடிகிறது.

சமீபகாலம் வரையிலும் தேங்காய் பட்டினம் மாலிக் இபுனுதினார் பள்ளிவாசலில் ஒரு பழங்கால அரபிக் கையெழுத்துச் சுவடி இருந்து வந்தது. இப்பணிக்காக அந்த அரபிக் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட விரும்பிச் சென்ற போது எங்கோ தவறிவிட்டதாக அங்கு அப்போது இருந்த பேஷ் இமாம் அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர் பேராசிரியர் திருமலர் எம்.எம். மீரான் பிள்ளை அவர்களிடம் அக்கையெழுத்துச் சுவடியில் காணப்படும் சில ஆண்டுகளும் இடங்களும் அடங்கிய சிறு குறிப்பு ஒன்று உள்ளது. அதை ஒரு ஆவணமாக மேற்கோள் காட்ட முடியாத நிலை.

இப்படிப்பட்ட வரலாற்று ஆவணங்களை நம்மவர்கள் இழந்துவிட்ட காரணத்தினால் வரலாற்று உண்மைகளை அறிய முற்படுவோருக்கு ஏமாற்றம்தான் எஞ்சுகிறது.

சேரமான் பெருமாள் ஹிஜ்ரி ஆண்டு 10-ல் (ஏ.டி.632) செஹர்முஹல்லாவில் இறைவனடி சேர்ந்ததைக் குறிக்கும் மிகப்பழமையான அரபுக் கையெழுத்துப் பிரதி ஒன்று கேரளாவில் வளர்ப்பட்டணம் காசி இம்பிச்சிக்கோயா என்ற மார்க்க அறிஞரிடம் இருப்பதாக மறைந்த வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் ஜனாப் பி.ஏ. செய்யது முஹம்மது என்பவர் “முகல் சாம்ராஜ்ஜியத்தின் ஊடே ஒரு பயணம்” என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக்கம் 103) குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான இந்த ஆவணம் இன்று யாரிடமுள்ளது என்று யாருக்குத்தான் தெரியும்? நம்பகமான பல வரலாற்று ஆவணங்கள் நம்மவர்களிடமிருந்தும் நமக்கு பயனற்றதாகப் போய்விட்ட ஏக்கத்தோடு பிற வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்த வரலாற்று வரிகளுக்கிடையில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைத்தேடி கண்டுபிடிக்கவேண்டிய சிரமம் மிகுந்த பணிமை இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.

1857-க்குப் பின் இன்று வரையிலும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்ற சில வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் இந்தியாவில் மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தோன்றிவிட்டது என்ற உண்மையை அடுத்த இதழில் ஆராய்வோம்.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் :
http://www.islamkalvi.com/portal/?p=134

---------------------------------------------------------------------

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails