ஊற்றுக்கண் (பகுதி - 20)
by டாக்டர் ஹிமானா செய்யத்
அது 1994 -ம் வருடம் ஜூலை மாதம். சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் அழைப்பில் சிங்கை சென்று மீலாது விழாவில் பேசிவிட்டு மலேசியாவழியாக டிரான்ஸிட் எடுத்து மாஸ் விமானத்தில் தமிழகம் திரும்பவேண்டும். என்னுடன் அண்ணன் ஜே.எம் சாலி அவர்கள் ஏர்போர்ட்டுக்கு வந்தார்கள். வழியில் டிராஃபிக் ஜாம். நாங்கள் வந்து சேர்ந்தபோது நான் செல்ல வேண்டிய கனெக்டிங் ஃபிளைட் மலேசியாவுக்குப் புறப்பட்டு விட்டது. அடுத்த ஃபிளைட் எடுத்தால் சென்னை செல்லும் விமானத்தைப் பிடிக்க முடியாது; மலேசியாவில் நுழைவதற்கும் விசா இல்லை. சிங்கப்பூரில் தங்கிவிட்டு அடுத்த நாள்தான் புறப்பட வேண்டும் என்ற நிலை.
ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. அன்றிரவு நான் சென்னை சென்று அதற்கடுத்த நாள் மயிலாடுதுறை மீலாதில் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் தலைமையில் பேச வேண்டும் . ஒரு மாதத்துக்கு முன்பே கொடுத்திருந்த அப்பாய்ன்மெண்ட். அதை விட்டுவிட மனசில்லை. வீட்டுக்குத் திரும்புவதற்கு முன் பளிச்சென்று ஒரு யோசனை. சகோதரர் நஜீம் பிரதர்ஸ் அப்துல் பாரி அவர்களிடம் டெலிபோனில் இத்தகவலைச் சொல்வோம்; அவர் அடிக்கடி விமானப் பயணம் செய்யக் கூடியவர் ஏதாவது வழி சொல்வார் என்ற நம்பிக்கை.
"அண்ணன் ... ஏர்போர்ட்டிலேயே நில்லுங்கள் ; அரை மணி நேரத்தில் நான் அங்கு வந்துவிடுவேன்" என்றார் பாரி.
நின்றோம்; அதேபோல அரைமணிநேரத்துக்கு முன்பே வந்தார் - அன்று சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குப் புறப்படும் சியா விமானத்திற்கான டிக்கெட்டுடன்.
"எதற்கு வீண் செலவு...? " என்றேன்.
"இங்கே இன்னும் சில நாட்கள் தங்கி விழாக்களில் பேசும் வாய்ப்பையும் விட்டுவிட்டு எங்கள் ஊர் மீலாது விழாவுக்காக நீங்கள் செல்லவிருக்கும்போது, நான் சும்மா இருந்துவிட முடியுமாண்ணே..?" என்றார் புன்னகையுடன் அந்த நீடூர்க்காரர். அதேபோல சென்னைக்கு அன்றிரவே பறந்தேன். ஏர்போர்ட்டில் என்னை வரவேற்று அழைத்துச் செல்ல நஜீம் பிரதர்ஸ் சென்னை அலுவலகத்திலிருந்தே ஒரு சகோதரர் (பிலால்) வந்திருந்தார் மயிலாடுதுறைக்கு பஸ் டிக்கட்டுடன்! அவரே பாரிஸ்கார்னருக்கு அழைத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றியும் விட்டார்.
சிங்கை ஏர்போர்ட்டில் இரவில் தவித்துநின்ற நான் அடுத்த நாள் காலையில் மயிலாடுதுறை வந்து விழாவிலும் கலந்து கொண்டேன். "இங்கே எல்லோரும் தெரிந்தவர்கள்தானே...?அமைப்பாளர்களுக்குச் சொல்லிக்கொள்ளலாமே...? இன்னும் சில நாட்கள் சிங்கப்பூர் நிகழ்ச்சிகளைச் செய்திருக்கலாமே? " என்று தலைவர் சொன்னார்கள். ஆனால் எனக்குள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய நிறைவு நெஞ்செல்லாம்.
நான் உரையாற்று நேரமும் வந்தது. எனது சிங்கைப் பயணம் குறித்த முன்னுரையுடன் தலைவர் பேசப் பணித்தார்கள். நான் பேசத்தொடங்கி ஏழே நிமிடங்கள்தான். சகோதரர் அப்துல் பாரி அவர்களின் உதவியினால் அவ்விழாவுக்கு வர முடிந்த விசயத்தை விளக்கிவிட்டு உரையின் தொடக்கத்துக்கு அப்போதுதான் வந்தேன்...!
கூட்டத்தில் சலசலப்பு. அப்போது கல்வி அமைச்சராகயிருந்த திரு கே.ஏ.கிருஷ்ணசாமி வந்துவிட்டார். அவர் வந்த உடன் மைக்கில் தலைவர் சொன்னார்கள்..... "சகோதரர் டாக்டர் இவ்விழாவில் பேசுவதற்கென்றே சிங்கையிலிருந்து சிரமப் பட்டு வந்திருக்கிறார்; மணிக்கணக்கில் பேச முடிந்தவர்... ஆனால் அமைச்சர் பேசிவிட்டு உடனே செல்லவேண்டியிருப்பதால், வேறு வழியில்லாமல் கனத்த மனதுடன் அவர் இப்போது தமது உரையை நிறைவு செய்வார் என அறிவிக்கிறேன்".
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பொதுவாழ்வின் ஆரம்ப காலம் அது. ஒரு மாதத்துக்கு முன்பே தயார் செய்து வைத்திருந்த உரையை கூடியிருந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத ஏமாற்றம்! இவ்வளவு சிரமப் பட்டு வந்தும் கைகூடி வரவில்லையே? என்ற மன உளைச்சல்! அனைவரும் வருத்தம் தெரிவித்தனர். குறிப்பாக 'இறையில்லப் பொறியாளர்' "அல்லாஹ்வின் விருந்தினர்கள் " நூலின் ஆசிரியர் சகோதரர் பி.எஸ்.ஆர்.அஹமது அவர்கள் ஆறுதல் வார்த்தைகளால் ஒத்தடமிட்டார். இருந்தாலும் மனதில் அந்த வலி இருந்து கொண்டே இருந்தது.
அடுத்த நாள் ஊர் திரும்பும் வழியில் அய்யம்பேட்டையில் சமுதாயப் பணியில் முன்னிற்கும் அருமைத்தம்பி ஆலிமான் ஜியாவுதீனும், ராஜாஜி முஹம்மது காஸிம் போன்ற நண்பர்களும் ஒரு பெண்கள் மீலாது விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அடுத்த நாள் அங்கு பேசினேன். எந்த இடையீடும் இல்லாத அமைதியான கூட்டம்! இரண்டு மணிநேரம் உரை நீடித்தது. மயிலாடுதுறையில் ஏற்பட்ட வலி மாறிப்போனது. அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னேன்.
அதன் பிறகு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு எத்தனையோ அழைப்புகள் வரவும் வந்தன. ஆனால் அதை நளினமாகத் தவிர்த்துவிடுவேன்.
அந்த சிங்கை ஏர்போர்ட் அனுபவம் ; சகோதரர் பாரி அவர்களின் சமயோசிதமான பெருந்தன்மை - ஊர்ப்பாசம் ; அமைச்சரின் குறுக்கீட்டால் ஏற்பட்ட ஏமாற்றம் - அதனால் ஏற்பட்ட வலி - அது தந்த பாடம் - அய்யம்பேட்டையில் ஆலிமான் ஜியாவுதீன் வழியாக அல்லாஹ் தந்த ஒத்தடம்... ஒரு களப்பணி ஊழியனைப் புடம் போட்ட மறக்க முடியாத அனுபவங்கள் அல்லவா..?
நன்றி: சிந்தனை
Source :http://chittarkottai.com
1 comment:
மயிலாடுதுறை மன ஏமாற்றம், அய்யம்பேட்டை ஆறுதல். இனிய நினைவலைகளில் மிதக்க விட்டீர்கள் டாக்டர்.
பகிர்வுக்கு நன்றி!
Post a Comment