Saturday, October 12, 2013

மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1


இந்தியாவில் இன்றைய அரசியல் சூழ்நிலைகள், பிரச்சாரங்கள் யாவும் துவேஷத்தை வளர்க்கும் வகையில் திட்டமிடப் பட்டு  முஸ்லிம்களுக்கும் சிறுபான் மையினருக்கும் எதிரான திசையில் திருப்பிவிடப் பட்டு இருக்கிறது. இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் இயக்கம் எதிர்கால இந்தியாவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்து கொடுத்து இருக்கிறது. இப்படி தேர்வு செய்யப் பட்டவர் முஸ்லிம்களை கொத்துக் கொத்தாய் கொலை செய்த பாதககரங்களுக்கு சொந்தக்காரர்.   தனது ஆட்சியின் கீழ் இருக்கும் அனைத்து மக்களுக்கும் நீதி வழங்குவதே அரசநீதி என்று அவர் நம்பும் நீதி நூல்களிலேயே கூறப்  பட்டிருக்க,  உயிரிழந்த தனது ஆளுகைக்குட்பட்ட குடிமக்களை காரில் அடிபட்ட குட்டி நாய்களுக்கு ஒப்பிட்டுப் பேசிய உயர் குணம் படைத்தவர். இந்தியாவின் பணம் படைத்த பெரும் பணக்காரர்கள் நிறைந்த குஜராத் மாநிலத்தின் வட்டிக்கடை அதிபர்கள், தங்கக்கடை அதிபர்கள், சேட்டுகள் என்று அழைக்கப் படும் இந்தியப் பொருளாதாரத்தை தங்களது கை பொம்மலாட்டமாக்கி வித்தை காட்டும் உயர் சாதியினர் அடங்கிய கார்ப்பரேட் முதலாளிகளும் இந்தியாவில் இந்து தேசியத்தை அமுல்  படுத்தி சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பறித்து இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்க வேண்டுமென்று ஆர்ப்பரித்துத் திரியும்     ஆர் எஸ் எஸ்  , சங்க பரிவார் , முன்னாள் ஜனசங்க மற்றும் இந்நாள் பி ஜெ பி யினரும் கை கோர்த்து பெரும்         சதித்திட்டத்தின் அடிப்படையில் காய்களை விளம்பரங்கள் மூலமும் பார்ப்பன ஊடகங்கள் மூலமும் நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த சமுதாய நரபலியை நிறைவேற்ற அவர்கள் கண்டுபிடித்த முன் அனுபவமுள்ள பூசாரிதான் நரேந்திர மோடியாகும். இந்த சதித்திட்டத்திற்கான காய்களை இவர்கள் நகர்த்தத் தொடங்கி வெகுநாட்கள் ஆகிவிட்டன. இவர்களே தீவிர வாதிகளின் செயல்களை செய்துவிட்டு பழியை சிறுபான்மையினர் மீது போடுவதில் இருந்து தன்  கட்சிக்காரனை தானே விளம்பரத்துக்காக கடத்திவிட்டு பிறகு விடுவிப்பதுவரை, தன் வீட்டின் மீது தானே பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு பழியை மற்றவர் மீது போட்டது வரை இவர்களது சதிச்செயல்கள் அம்பலமாகி இருக்கின்றன .  இவர்களின் சிறு தவணைத் திட்டங்கள் இவை என்றால் பெரும்பான்மை மக்களான இந்து சகோதரர்களின் மனதில் சிறுபான்மையினர் மீது வெறுப்பு உண்டாக்கும் வண்ணம் செயல்களை அமுல்  படுத்துவது பெருந்  தவணைத் திட்டமாகும். அதில் ஒன்றுதான் பல்வேறு அரசுத்துறைகளிலும் குறிப்பாகக் கல்வித் துறையில் தனது விஷ வேர்களைப் பாய்ச்சி, வளரும் இளம் தலைமுறையை துவேஷமும் வன்மமும் பிளவு மனப்  பான்மையும்  உள்ளவர்களாகவும் உருவாக்குவது என்கிற அவர்களின் திட்டமாகும்.   இவர்களின் இந்த விஷ வித்து விதைக்கப் பட்டு வளர்ந்திருப்பதற்குக்கு இவர்கள் பாய்ச்சி இருக்கிற நீர் வரலாற்றை திரிப்பதும் மறைப்பதுமாகும்.

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா என்ற தலைப்பிட்ட எனது நூலின் “ காலாவதியான மனுநீதி’ என்கிற  தலைப்பிட்ட எட்டாவது அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிட்டு இருக்கிறேன்.

“மனு நீதிக்கு வக்காலத்து வாங்கும் ஆர் எஸ் எஸ் , சங்க பரிவார் போன்ற அமைப்புகளால்  இந்தியாவில் 28,861 கல்வி நிலையங்கள் நடத்தப்படுகின்றன. இதில் 32,33,337 மாணவர்கள் பயிலுகிறார்கள். 1,57,741 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்குத் தனியாக பாரதிய சிக்ஷா மண்டல் என்ற அமைப்பும் உண்டு.

இவையன்றி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை எல்லா வற்றிலும் மனு மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன..

முழுக்க முழுக்க இந்துத்துவா வெறி என்னும் நஞ்சு ஊட்டப்படுவதோடு, சிறுபான்மை மதங்கள் மீது குரூரமான முறையில் வெறுப்பு விதைகளும் தூவப்படும் அபாயமும் உண்டு.

இவ்வாறு பயிற்சி பெறும் மாணவர்கள் வெளியே வருவார்களேயானால், நாட்டில் அமளி துமளிகளும், வன்முறைகளும், அமைதியற்ற தன்மையும்தானே தலை விரித்தாடும்? இதற்கான பயிற்சிதானே அவர்களுக்குத் தரப்படுகிறது?

ஆசிரியர் தினம் என்று அரசு அறிவித்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக வியாச முனிவர் பிறந்த நாள் என்று ஜூன் 25 ஆம் தேதி கடைப் பிடிக்கப்படுகிறது.

குழந்தைகள் தினம் என்று அரசு அறிவித் துள்ள நேருவின் பிறந்த நாளை இவர்கள் ஒப்புவதில்லை. மாறாக இந்துக் கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாள் என்று கோகுலாஷ்டமியைத்தான் கொண்டாடச் செய்கிறார்கள்.

பாடத்திட்டங்கள் எப்படி இருக்கும்? எடுத்துக் காட்டாக ஒன்று. உத்தரப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்புப் பாடத்தில் இடம் பெற்றிருப்பதாவது : முலாயம் சிங் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்? பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்? (அவுட் லுக் 10.5.1999)

இந்திய வரலாற்றுக் குழுவை மாற்றி அமைத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அதில் திணித்தது பி.ஜே.பி. ஆட்சி.

இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bom Mahib Factories) மாற்றப்பட்டுவிட்டது பா.ஜ.க. ஆட்சியில்என்று ஃப்ரன்ட் லைன் ஏட்டில் கட்டுரையாளர்கள் பார்வதி மேனன், டி.கே.ராஜ லட்சுமி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.”   ( பக்கம்  77 & 78  ) .

இத்தகைய பள்ளிகளில்  மதச்சாயம் பூசப்பட்டு மறைத்து மாற்றி கற்பிக்கப் படும் வரலாற்றுச் செய்திகளை , அனைவரும்  அறிவதற்காகத் தருவதே இந்த வரலாற்றுப் பதிவுத்தொகுப்பின் நோக்கமாக அமையும். இப்படி ஒரு அநியாயம் நடைபெறுகிறது என்பதை இந்து மதச் சகோதரர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு உயர்சாதியினரின் கட்சி என்று கருதப் படும் கட்சி, தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை மாற்றி மறைத்து திரித்து சமுதாயத்தில் துவேஷத்தைப் பரப்ப செய்யும் முயற்சியை வேரோடு பிடுங்கி ஏறிய வேண்டும். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முதலாவதாக இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் மீது ஆர் எஸ் எஸ் மற்றும் அவர்களின் ஆளுமைக்குட்பட்ட கட்சிகள் மற்றும் இயக்கங்கள் எடுத்துவைக்கும் குற்றச்சாட்டு என்ன வென்றால் இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்து நாட்டின் செல்வங்களை     கொள்ளை யடித்தவர்களே முஸ்லிம்கள் என்பதும்  கொள்ளையும் அடித்துவிட்டு பிறகு இங்கேயே தங்கி, இந்த நாட்டில் சகல உரிமைகளையும் அரசியல் சட்டரீதியாக அனுபவிக்கிறார்கள் என்பதுமாகும்.

வெளிப்படையாகப் பார்க்கப் போனால் வரலாற்று நூல்கள் அப்படித்தான் திரித்து கூறுகின்றன. ஆனால் உண்மை வரலாற்றை ஆராய்ந்து பார்ப்போமானால், இன்று முஸ்லிம்களை  அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து சுரண்டும் நோக்கத்தோடு குடியேறியவர்கள்தான் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும்.

வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் பாரசீகத்தில் இருந்து படைஎடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரியர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் காட்டும்  இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கினார்கள். இதற்காகவே இந்த மண்ணின் மைந்தர்களை மடையர்களாக்க மனுநீதி எனும் சாஸ்திரத்தையும் உண்டாக்கினார்கள்.

One of the most interesting puzzles in archaeology, and one that hasn't been completely solved yet, concerns the story of the supposed Aryan invasion of the Indian subcontinent. The story goes like this: The Aryans were a tribe of Indo-European-speaking, horse-riding nomads living in the arid steppes of Eurasia. Sometime around 1700 BC, the Aryans invaded the ancient urban civilizations of the Indus Valley, and destroyed that culture. The Indus Valley Civilization were far more civilized than any horse-back nomad, having had a written language, farming capabilities, and led a truly urban existence. Some 1,200 years after the supposed invasion, the descendants of the Aryans, so they say, wrote the classic Indian literature called the Vedic manuscripts. (K.K.Hirst) இதுதான் உண்மை வரலாறு. ஆனால் நமது பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படும் வரலாற்று நூல்கள் இவற்றை பறைசாற்றுகின்றனவா?

ஆக, இன்று குற்றம் சாட்டும் ஆரியர்கள் நிறைந்த ஆர் எஸ் எஸ் எஸ் மற்றும் அதன் அடிவருடிகள் அனைவரும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இந்த நாட்டில் புகுந்தவர்களே என்பதே உண்மைச் சரித்திரம். இப்படி தன் முதுகில் அழுக்கை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை குறை சொல்ல இவர்களுக்கு அருகதை உண்டா? மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்கிற கதையைப் போல  பிராமண வரலாற்று ஆசிரியர்கள் அல்லது அவர்களது ஜால்ராக்கள்,  ஆரியர்கள் இந்த நாட்டுக்குள் வரும்போது “ஆரியர் வருகை” (Arrival of Aryas) என்று குறிப்பிடுகிறார்கள். அதே நேரம் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குள் வந்ததை  அதை  “இஸ்லாமியர் படை எடுப்பு” (Islamic Invasion) எனக் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பாகுபாடான சரித்திர விபச்சாரத்தை சாடாத வரலாற்று ஆசிரியர்களோ நடுநிலை எழுத்தாளர்களோ இல்லை எனலாம்.  பாட நூல்களில் இப்படிப் பதிவு செய்வது  பிஞ்சு மனங்களில்  வகுப்பு வாதம் எனும்  நஞ்சைத் தடவும் நயவஞ்சகம் இல்லையா?

ஆரியர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலை ஆட்டிப் படைத்த ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான்.  சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வெளியுலகில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள்தான். ஆனால் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் முஸ்லிம்களை மட்டும்  மட்டும் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று பழிதூற்றுவது  நியாயமற்ற விவாதம்ஆகும்.

நாடுகளைத்  தேடிப்  புறப்பட்ட இனங்கள் உலக வரலாற்றில் எத்தனையோ உள்ளன. கொலம்பசில் இருந்து, வாஸ்கோடாகாமா  வரையும், அலெக்ஸான்டரில் இருந்து நெப்போலியன் வரையிலும் கூட இந்த வரலாறு உலகம் முழுதும்  நீளும். ஆனால் முஸ்லிம்கள்  கொள்ளையடிக்க வந்தார்கள் என்று பொருள்பட வரலாற்றில் பதிந்து வைத்திருப்பது வரலாற்றுக்கே செய்யும் அடிப்படை துரோகம். இது பற்றி ஆதாரங்களுடன் விவாதிக்கலாம்.

மேலும் இந்தியாவில் இன்று கிருத்துவ மற்றும் இஸ்லாத்தைத் தழுவிய மக்கள்   இந்த நாட்டின் மண்ணிலே பிறந்து வளர்ந்து சமுதாயக் கொடுமைகளை சாதி ஒடுக்குமுறைகளை நீக்கிக் கொள்வதற்காக   மதம் மாறியவர்கள்தான். இந்தக் காரணத்துக்காகவே இவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கவேண்டும் . மீண்டும் இந்து தேசிய கலாச்சாரத்தைப் பின்பற்றவேண்டும் அல்லது அவர்களைக்  கொன்று ஒழிக்க வேண்டுமென்று ஒரு கூட்டம் காவி உடைகட்டி அதற்காக ஒரு தளபதியை நியமித்துப்  பொய்யும் புரட்டும் சொல்லும் காவிக்கொடி பறக்கும் ஊடகங்களின் தேரில் ஏறி புறப்பட்டிருப்பது நாட்டில் அமைதியற்ற சூழ்நிலையே உருவாக்கும். அன்று அயோத்தியை நோக்கிப்  போன அத்வானியின் தேர் கணக்கற்ற உயிர்களைப் பலி கொண்டது. இத்தகைய வேண்டத்தகாத நிகழ்வுகளை நாடெங்கும் மீண்டும் இன்னும் தீவிரமாக அரங்கேற்றவே பாம்புக்குப் பரிவட்டம்  கட்ட அரைக்கால் டவுசர்கள் ஆட்டத்தை மீண்டும் ஆரம்பித்து இருக்கின்றன.   

உண்மையான வரலாற்றின் பக்கங்களை ஆராயப் போனால் ,  முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்தது வணிகத்துக்காக. வணிகம் செய்ய வந்தவர்கள் தங்களின் வணிக வசதிக்காக இங்கேயே தங்க ஆரம்பித்தார்கள். இங்குள்ளவர்கள் முஸ்லிம்களின் நல்ல நாணயமான நடத்தைகளைப் பார்த்து அவர்களுடன் வணிகம் செய்ய விரும்பினார்கள். அதே நேரம் பல இஸ்லாமிய மத போதகர்களும் இங்கு வர ஆரம்பித்தனர் . அவர்களின் நாணயமான நடத்தை, ஒழுக்கம், போதனை மற்றும் வழிகாட்டுதல்களால் ஈர்க்கப்பட்டவர்கள் பெருகியதால்  இஸ்லாம் இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. பல்வேறு திசைகளிலும் இந்த அழைப்புப் பணி வெற்றிகரமாக நடந்தது. தங்களின் பிறவியின் களங்கத்தை துடைக்கும் புனித நீராக இஸ்லாத்தைக் கண்ட மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர். இந்த முறையில்தான் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது.  இதனால்தான் இந்திய முஸ்லிம்களை “இஸ்லாமானவர்கள்” என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இஸ்லாமிய வரலாறு இப்படித்தான் தொடங்குகிறது. 

பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வருகைதந்த அரபி வணிகர்களும் இஸ்லாமிய பிரச்சாரகர்களும் தம் வருகைகளைக் குறிக்கும் சில ஆவணங்களை இங்கு விட்டுச் சென்றனர் என்பது உண்மையேயாகும். அவைகள் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அன்று கட்டிய பள்ளிவாசல்களிலும் சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன. 

இளைஞர்களும் பொதுமக்களும், படித்தவர்களும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து தங்களின் கவனத்தைத் திருப்பி வகுப்பு வெறிக்கு பலியாவதற்கு முஸ்லிம்கள் பற்றி மதவெறியர்களாலும், பத்திரிகைகளாலும், கல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் வரலாற்றுக் கட்டுக் கதைகள் முககியப் பங்கு வகிக்கின்றன. எனவே இந்தக் கட்டுக் கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது ஜனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்த நிலையில் வரலாற்று ஆதாரங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம்.

பொருளாதார ரீதியில் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரின் வளர்ச்சி அப்படியொன்றும் பொறாமைப் படத்தக்க அளவில் இல்லை என்பது சச்சார் கமிட்டியின் அறிக்கையின் மூலம் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் அரசியல் ரீதியில் முஸ்லிம்களும் இதர சிறுபான்மையினரும் மதசார்பற்ற சக்திகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் அவர்களை அழித்து ஒழிக்க அவதூறுகளை அரங்கேற்றத் திட்டமிட்டுத்துவங்கி இருக்கிறது காவிக்கூட்டம். காரணம் சிறுபான்மையோரின் ஆதரவு இல்லாமல் எந்தக் கேடியையும் எண்ணூறு குட்டிக் கரணம் அடித்தாலும் பதவியில் அமரவைக்க முடியாது. ஆகவேதான்  காழ்ப்புணர்ச்சி கொண்டு முஸ்லிம்களை அழித்தொழிக்க பெரும்பான்மை மக்களை உணர்வு பூர்வமாக தூண்டும் வேலைகளுக்கு தூபம் போட்டுக் கொண்டு இருக்கிறது காவிக் கூட்டம்.

மேலும் இவர்கள் ஆண்டாண்டுகாலமாக செய்து வந்த பகீரத முயற்சிகள் யாவும் வெற்றிபெறவில்லை. மக்கள் விழித்துக் கொண்டனர்.

    முதலாவதாக பிரம்மா             படைத்தவற்றில் நாங்கள்தான் உயர் படைப்பு என்று பீத்திக் கொண்டிருந்த இவர்களின் ஆட்டங்களை ஆடவிடாமல்  தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்காரும் இவர்களின் இடுப்பை ஒடித்துப் போட்டுவிட்டனர்.

    நாட்டில் அனைவரும் சமம் என்கிற கோட்பாட்டை அரசியல் சட்டமாக்கிய தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்து மற்றவர்களை பயமுறுத்திப் பார்த்தார்கள்.  பலிக்கவில்லை.

    தேவதாசி முறைகள் என்று ஒரு ரீல் ஓட்டிப் பார்த்தார்கள். அதுவும் தடை செய்யப் பட்டுவிட்டது.

    உடன்கட்டை ஏற வேண்டும் என்று ஒரு படுபாதகத்தை அரங்கேற்றப் பார்த்தார்கள். அதுவும் தனது மூச்சை விட்டது.

    குலக்கல்வி முறையைக் கொண்டுவந்து  அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டுமென்று ஆட்டம் காட்டிப் பார்த்தார்கள் அண்ணாவும் காமராசரும் அதைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார்கள்.

    மதமாற்ற தடை சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இதனால் இதைக் கொண்டுவந்தவரின்  அரசியல் வாழ்வே அஸ்தமிக்கும் நிலைக்குத்தள்ளப் பட்டு தோற்கடிக்கப் பட்டதால் வெற்றிபெற்ற கருணாநிதி அந்த சட்டத்துக்கு மூடுவிழா நடத்தினார்.

    புனித ஹஜ் மாதத்தின் குர்பானியை  தடை செய்ய கோயில்களில் ஆடு மாடுகள் பலி கொடுக்கக் கூடாது என்று ஒரு தடைச் கட்டம் கொண்டுவந்தார்கள் அந்த சட்டம் கொண்டுவந்தவர்களையே  குர்பானி கேட்டது. 

    முஸ்லிம்களின் பெயருக்கு களங்கம் கற்பிக்க பல இடங்களில் இவர்களே வெடிகுண்டுகளை வைத்து இழி பெயர் சூட்ட  சதி செய்தார்கள். சட்டம் இவை அனைத்தையும் முறியடித்து முகத்திரையை கிழித்தது.

வேறு என்னதான் செய்வது என்றுதான் இப்போது பெரும்பான்மை மக்களின் உணர்ச்சிகளை மத ரீதியாகத் தூண்டிவிட்டு அரசியல் இலாபம் பெற, வரலாற்றை திரித்துக் கூறி காலம் காலமாக சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ள இந்தியாவை மத ரீதியாக துண்டாடி அமைதியைக் குலைக்க திட்டமிட்டு  நரபலி நாயகனை முன்னிறுத்துகிறார்கள்.

வரலாற்று ரீதியாக இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் வரலாற்றின் ஆதாரங்களோடு இந்தத்தொடரில் பதில் தருவோம்.  இவர்களது முதலாவது குறியும் முக்கியக் குறியும் அவுரங்கசீப் மீதாகும். பல வரலாற்றுக் களங்கங்களை இவர்கள் மன்னர் அவுரங்கசீப் மீது தேவைக்கும் அதிகமாகவே பூசிவைத்து இருக்கிறார்கள்.

அப்படி என்ன செய்தார் அவுரங்கசீப்? அதைத்தான் அடுத்துப் பார்க்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
தொடரும்
இப்ராஹீம் அன்சாரி
பதிப்புரிமை : அதிரைநிருபர் பதிப்பகம்
நன்றி : http://adirainirubar.blogspot.in/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails