இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களில் ஆண்களைப் போன்று பெண்களும் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.
அவர்களில் சிலரது குறிப்புகள் மட்டும் இங்கே.
பேகம் சாஹிபா
திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. ஐதர் அலி அவர்களின் தங்கை பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். அவர மனைவியும் ஐதர் அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13 ஆம் தேதி (கி.பி.1772) குழந்தை பிறந்து ஏழாம் நாள் காலமானார். போர்க்களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக போராடியவர். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னபள்ளபட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது பேரையும் நியமித்துள்ளார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.
இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசல்களையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021,ஆர் 8275 ஆகும்.
ஹஸன் மஹ்பர் பேகம்
ஜான்சிராணியுடன் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கியவர்களில் மஹ்பர் பேகமும் ஒருவர். 1858ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தியதி குவாலியர் யுத்தத்தில் ஜான்சியுடன் வீரமரணம் அடைந்தார்.
அமாதுல் ஸலாம்
1938 ஆம் ஆண்டு இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்திஜியும் முஹம்மதலியும் சந்தித்துப் பேசும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஜின்னாவை சந்திக்க காந்திஜியுடன் ஒரு பெண்ணும் வந்திருந்தார். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது பத்திரிக்கை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் காந்தி கூறியதாவது, என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண் ஒருத்தி இருக்கிறாள். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் உயிரையும் இன்முகத்தோடு கொடுப்பாள் என்றார். அந்தப் பெண் தான் அமாதுல் ஸலாம்.
கதர் என்ற பெயருக்கு காரணமான ஆலாஜிபானு
அலி சகோதர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற பீபியம்மாள் தன்னுடைய கையால் கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடையை காந்திஜிக்கு அளித்தார். அப்போது இந்த ஆடையை கதராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். கதர் என்றால் கௌரவம் என்று பொருள்படும். அன்றிலிருந்து கதர் ஆடை என்ற பெயர் வந்தது. சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு "கதர்" என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் பெண்மணி ஆவார். கதர் என்பது சாதாரண துணி போல இரண்டு இழைகளால் நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இவ்வாறாக நெய்வது அரிதானதாகும்.
இளையான்குடியில் பீபியம்மாள்
என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன் என்று வீரசபதம் பூண்டவர் தாயார் பீபியம்மாள்.
1922 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், கதர் ஆடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்டவும் இளையான்குடியில் உள்ள அலங்காரத்தோப்பிற்கு அருகே தென்புறம் பேரூராட்சியில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கே குடிநீர் தொட்டி ஒன்றும் இருந்தது. அந்த குடிநீர் தொட்டி அருகாமையில் ஏ.எஸ்.டி.இப்ராகிம் ஷாவுடைய பங்களா இருந்தது. அந்த பங்களாவில் சுதந்திர போராட்டம் குறித்த நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பீபியம்மாள், மீன்பஜார் முதல் காதர் பிச்சை தெருவரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.
இதே போல தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உருதுமொழியில் பேசி நிதி திரட்டினார். அவர் பேசியதை தமிழில் திருச்சியைச் சேர்ந்த முர்தஸா சாகிப் மொழி பெயர்த்தார். இவ்வாறு சுதந்திர வேட்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924 ஆம் ஆண்டு 72வது வயதில் காலமானார். பீபியம்மாள் விருப்பபடி அவரது பூதவுடல் கதர்துணியால் சுற்றப்பட்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.
கண்ணனூர் ராணி பீபி
கேரளாவின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கண்ணனூரை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணி பீபி. மைசூர் திப்பு சுல்தானின் ஆதரவாளராக இவர், பிரிட்டீஷ் படை வீரர்கள் கண்ணனூர் வழியாகச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் இவர் மீது போர் தொடுத்தனர். 1783 ஆம் ஆண்டு திடீரென கண்ணனூரை ஆங்கிலேயர்கள் தாக்கினார்கள். அந்த திடீர் தாக்குதலில் ராணி பீபியின் படை தோல்வியடைந்தது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆங்கியேலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்தவுடன் ராணியின் எல்லைப்பகுதியை தாங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்குவது போல போலி ஆவணம் தயாரித்து ராணியிடம் படித்துக் காண்பிக்காமல் ஒப்பந்தம் வாங்கி ஆங்கிலேயர் தங்களுடைய ராணுவ முகாமிற்கு பயன்படுத்திக்கொண்டனர். அதன் பின்னர் ராணி விடுதலை செய்யப்பட்டார். 1784 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கண்ணனூரில் ஆங்கியேலயரின் முகாம் செயல்படத்தொடங்கியது. மீண்டும் 1790 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்து கைnழுத்திடுமாறு ராணி பீபியை நிர்பந்தம் செய்தனர். ஆனால் ராணி பீபி மறுத்ததுடன் திப்பு சுல்தான் படைக்கு ஆதராவாக செயல்பட போவதாக பகிரங்கமாக அறிவிப்பும் செய்தார். இதன் காரணமாகவே மீண்டும் ராணி கைது செய்யப்பட்டார்.
உமர்பீபி
இவர் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்.இ.ஹெச்.டயர் என்பவன் தலைமையில் துப்பாக்கி சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரம் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் எனவும் அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் உமர்பீபியும் பலியானார். இவர் 1864 ஆம் ஆண்டு அமிர்தசரவில் பிறந்தவர். இவரின் கணவர் பெயர் இமாமுதீன் ஆகும்.
மரியம் பீவி
திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவருடைய கணவர் பெயர் அப்துல் கரீம். பெண் என்றும் பாராமல் ஆங்கில ஆட்சி மரியம் பீவிக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை வழங்கி கடலூர் சிறையில் அடைத்தது.
பேகம் அயிஜாஸ் ரசூல்
உத்திரப் பிரதேசத்தில் சாண்டிலா என்ற ஊரில் 1909 ஆம் ஆண்டு நவார் சர்ஜூல்பிகாரின் மகளாகப் பிறந்தவர். நவாப் அயிஜாஸ் ரசூல் என்பவரைத்; திருமணம் செய்து கொண்டார். இவர் 1937 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்டலேவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்ட இவர். 1969 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை உத்திரப்பிரதேச அமைச்சராக பதவி வகித்தார்.
பியாரி பீவி
கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரது மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேர்களும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்திருக்கிறார். அவரது மனைவி பியாரிபீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சிறை சென்றார்.
ஆதார நூல்கள்:
1.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும்...மறைக்கப்படும் உண்மைகளும், சென்னை
2.விடுதலை போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை
3.மறுக்கப்பட்ட உண்மைகளும்..மறைக்கப்பட்ட நியாயங்களும், அனிஸ்தீன், அகமதுநிஸ்மா பதிப்பகம், சென்னை
கட்டுரையாளர் : வைகை அனிஷ்
source : http://www.inneram.com/
No comments:
Post a Comment