Saturday, October 12, 2013

இறைவழிபாடு - இஸ்லாம் கூறுவதென்ன?

 தொழுகை உடல் சார்ந்த வழிபாடு; உண்ணா நோன்பும் அவ்வாறுதான். 'ஸகாத்' எனப்படும் கட்டாயக் கொடை ஒரு பொருளாதார வழிபாடு. புனித ஹஜ் உடல், பொருள் இரண்டும் சார்ந்த வழிபாடு.

இந்த வழிபாடுகள் மூலம் இறைக்கட்டளையை நிறைவேற்றும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கின்ற அதே வேளையில், தமக்கும் தம்முடன் வாழும் சகமனிதர்களுக்கும் அவர் நன்மை செய்கிறார்.

தொழுகையால் உடல் தூய்மையும் உளத்தூய்மையும் அடைகிறார். தாம் செய்த குற்றங்களை எண்ணி இறைமுன் அழுகிறார். இனிமேல் குற்றமிழைக்கமாட்டேன் என்று சபதம் ஏற்கிறார். குற்றங்களிலிருந்து விடுபடுவது அவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மையல்லவா?.

உண்ணா நோன்பால் குடலுக்கு ஓய்வு; அதனால் உடலுக்கு ஆரோக்கியம். மதிய வேளையில் பசியும் தாகமும் அவரைவாட்டும்போது, பட்டினியின் கொடுமையை அனுபவிக்கிறார். ஏழை எளியோருக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று உந்தப்படுகிறார்.

'ஸகாத்' எனும் கட்டாயக் கொடை, சுயநலத்தையும் கருமித்தனத்தையும் செல்வர்களிடமிருந்து அகற்றுவதற்கான அருமையான வழிபாடு. உன்னை அண்டி வாழும் ஏழைகளுக்கு உன் செல்வத்தில் பங்கு உண்டு என்று சொல்கின்ற இறைக்கட்டளைதான் ஸகாத். ஆண்டுக்கு இரண்டரை விழுக்காடு தொகை ஏழை எளியோருக்கு ஒவ்வொரு செல்வரும் கட்டாயமாக வழங்கிவந்தால், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பார்கள்.

புனித ஹஜ் யாத்திரை இறைவனுக்குச் செய்யும் மாபெரும் வழிபாடு ஆகும். உயர்ந்தவன் - தாழ்ந்தவன், வலியவன் - எளியவன், கறுப்பன் - வெள்ளையன் என்ற எந்தப் பாகுபாடுமின்றி அனைவரும் ஒரே வகை வெள்ளாடை அணிந்து, தலை திறந்து, இறைவா! இதோ வந்துவிட்டேன் (லப்பைக்க) என்ற ஒரே முழக்கத்தை எழுப்பியவர்களாக பல நாட்டினர் அங்கே சங்கமம் ஆகும் காட்சி மெய் சிலிர்க்கவைக்கும்.

இவ்வாறு வழிபாடுகள் இறைவனுக்குச் செய்யும் வணக்கங்களாக ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் அன்பு, இரக்கம், மனித நேயம் பிறர் துயர் துடைத்தல், பொதுச் சேவை ஆகிய உயர் கோட்பாடுகளாகவும் அவை திகழ்கின்றன.

எந்த வழிபாடும் இரண்டு அடிப்படை அம்சங்களைக் கொண்டதாக இருந்தால்தான், இறைவனிடம் அது அங்கீகரிக்கப்படும்.

    • இறைவனின் அன்பைப் பெறும் ஒரே நோக்கத்தில் அவ்வழிபாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

    • அந்த வழிபாட்டு முறை மார்க்கம் காட்டிய வழியில் அமைய வேண்டும்.


எனவே, பெயர் புகழுக்காகச் செய்யப்படும் வழிபாடுகளோ அவரவர் விருப்பத்திற்குப் புதிய உருவில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகளோ இறைவனின் ஒப்புதலைப் பெற இயலாது. சில வேளைகளில், அத்தகைய வழிபாடுகளால் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் இலக்காக வேண்டிவரலாம்.

    (நபியே!) கூறுவீராக: என் இறைவன் நீதியையே (கடைப்பிடிக்குமாறு) கட்டளையிட்டுள்ளான். (எனவே, நீதி செலுத்துங்கள்.) தொழுமிடம் ஒவ்வொன்றிலும் உங்கள் முகங்களை (அல்லாஹ்வை நோக்கியே) திருப்புங்கள். அவனை மட்டுமே உளத்தூய்மையோடு வழிபட்டு அவனிடமே பிரார்த்தியுங்கள். (7:29) என்று திருக்குர்ஆன் கூறகிறது.

நன்றி : Source : http://khanbaqavi.blogspot.in/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails