மக்கா -
மயில்கள்
தோகை விரிக்காத
மணல் காடு !
குயில்கள் வந்து கூவாத
மலைகளின் கூடு !
அது -
சூரியன் மட்டுமே
குளிக்க வருகின்ற
வெயில் நீர் தேக்கம்
சுடு கதிர்கள் மட்டுமே
வேர் விடுகின்ற
கானல் தேசம் !
குழுமையின்
செழுமையே தெரியாத
அந்தத்
தணல பூமியில்தான்
ஹாஜராத் தாயோடு
குழந்தை இஸ்மாயிலையும்
தனிமையில் விட்டு விட்டு
தன் வழியே
திரும்பிச் சென்றார்
நபி இப்ராஹீம் !
தாகத்தால் துடித்த
குழந்தை இஸ்மாயில்
ஒருநாள்
மணல் பெண்ணின்
மார்பை
காலால் மிதித்தது !
அதற்காகவே காத்திருந்த
பாலை மடி
பால் மடியாகிச் சுரந்தது !
குழந்தையின் தாகத்தை
தண்ணீரால் தீர்த்தது !
அத்தனை தண்ணீரும் தீர்ந்து விட்டால் ...
அடுத்த வேளை நீர் ?
அச்சம் வந்த
ஹாஜரா அம்மையார்
" நில் ...நில் .. " என்றார் !
பாலைவனக் கடல்
தனக்குத்தானே வேலியிட்டுக் கொண்டு
" ஜம் ஜம் " கிணறாகி விட்டது !
ஓரிரு வருடங்கள்
ஓடிப்போக
மகன் இஸ்மாயில் கழுத்தை
தானே அறுக்கும்
காட்சி ஒன்றை கண்டு
முதியவர் இப்ராஹீம்
துயில் கலைந்தார் !
இறைக் கட்டளை இதுவென உணர்ந்து
கனவை நனவாக்க
மக்கா நோக்கி நகர்ந்தார் !
அங்கே -
" மகனே !
அல்லாஹ்
உங்கள் உயிரை நேசிக்கிறான்
அதனால் உங்கள்
கழுத்தை அறுத்து
பலியிடச் சொல்கிறான் .... "
என்றார் !
பேசும் பருவமும்
படைத்தவன் பற்றிய
ஞானமும் பெற்ற பிள்ளை...
திருவாய் மலர்ந்து
" இறைவனே கேட்டால்
இன்னுயிரும் தருவேன் ..." என்றது !
கொற்றவனுக்கு
குர்பானியாகத்
தன்னையேத்தரத் தயாரான
தனயனின் சொல் கேட்டு
பெற்றவர் சிந்தைக் குளிர்ந்து !
கத்திக்கும்
கழுத்துக்கும்
நடந்தப் போராட்டத்தில்
இஸ்மாயிலின்
கழுத்தை அறுக்க முடியாமல்
கல்லை உடைத்து
ஆத்திரம் தீர்த்தது கத்தி !
ஆண்டவன்
அங்கே அருளை ஆட்சி செய்து
இப்ராஹீமின்
அன்பு மகனுக்கு பதிலாய்
ஒரு ஆட்டை
அறுக்கச் சொன்னான் !
ரத்தமோ மாமிசமோ
தனக்குத் தேவையில்லை
தனக்காக செய்யும்
தியாகமே
தன்னைச் சேரும் என்றான் !
அன்று -
இணையற்ற இறைவனுக்காக
இனிய மகனையே
பலியிடத் துணிந்த
இப்ராஹீம் நபியின்
தியாகத்தைப் போற்றும்
திருநாள்தான்
நாம் கொண்டாடும்
ஈதுல் அள்ஹாப் பெருநாள் !
***********
ஐயாயிரம் ஆண்டுகளாய்
அறுக்கப்பட்ட பிறகும்
ஆடுகளின் இனமும் அழியவில்லை
நபி இப்ராஹீமின்
வம்ச வளர்ச்சியும்
குறையவில்லை !
இறைவனுக்காக
தியாகம் செய்தால்
இனமும் அழியாது ...
இஸ்லாமும் அழியாது
என்பது
இறைவன்
கற்றுத் தருகின்ற வேதம் !
by
No comments:
Post a Comment