Friday, April 18, 2014

போடுங்கம்மா ஓட்டு பண்பாளரைப் பார்த்து !

------ ஹாஜியா K. கமருன்னிஸா M.A.,B.T.,
 
நமது இந்திய திருநாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும், நாட்டை ஆளும் நன்மக்களைத் தேர்வு செய்ய வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்பழம்பெரும் நாட்டில் சமயத்தால், மொழியால், நிறத்தால், இனத்தால், கலாச்சாரத்தால், வேறுபட்டு மக்கள் பரவலாக வாழ்ந்தாலும், ஒரு தாய் மக்கள் போல் ஒருங்கிணைந்து வாழ்ந்து வருகிறோம். இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவருக்கும், அவரவர் மார்க்கத்தை பேணும் உரிமையும், வழிபடும் உரிமையும், பேச்சுரிமையும், எழுத்துரிமையும், கலாசாரத்தை மேம்படுத்தும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று வாக்குரிமையும் உண்டு. இவ்வுரிமையை செம்மையான முறையில் பயன்படுத்த ஒவ்வொரு ஆண்மகனும், பெண்மணியும் தெரிந்திருக்க வேண்டும்.

  இவ்வாண்டு மே திங்களுக்குள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், ஓட்டு வேட்டை மிக மும்முரமாக நடந்து வருகிறது. தேர்தல் களத்தில் தலைவர்களும், தொண்டர்களும் மக்களை எப்படி எல்லாம் வசப்படுத்த முயலுமோ, அத்தனையையும் செய்து வருகிறார்கள். பதவி மோகம் தலைக்கேற, துப்பு கெட்டவர்கள் கூட தப்பு தப்பான வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார்கள். பேச்சுத்திறத்தால் ஈர்க்கும் கில்லாடித்தனம், பணம், போதை பொருட்கள், வீட்டிற்கு இலவசப் பொருட்கள், ஆடைகள், பாத்திரப் பண்டங்கள், விலை குறைந்த உண்டிகள், பிரியாணி பொட்டலங்கள் போன்றவை தேர்தல் களத்தில் புகுந்து விளையாடி வருகின்றன.

  இவை தவிர, ‘ஊழலை முழுவதுமாக ஒழிப்போம், இலஞ்ச லாவண்யங்கள் குழி தோண்டி புதைப்போம். வேலைவாய்ப்புகளைப் பரவலாக்குவோம். கல்விக்காக விவசாய பெருக்கத்திற்காக உதவுவோம் இணையதளங்கள், மடிக்கணினிகள், முக நூல்கள், (Face Book) போன்றவற்றையும் தந்து வளம் கொழிக்கச் செய்வோம். ஆலைகள் அமைப்போம், உயர் கல்வி நிலையங்களை உருவாக்குவோம், தொழிற்புரட்சி, பசுமைபுரட்சி, வெண்மைபுரட்சி என பல புரட்சிகளை செய்வோம். மின் சக்தி, எரிசக்தி, சூரிய சக்தி, நீராதார சக்தி என எல்லா சக்திகளையும் பெருக்கும் சக்தி, எங்கள் கட்சி தலைமையிடத்தில்தான் உள்ளது’ என கத்தி கத்தி பேசி, ‘முடியாததை எல்லாம் முடிக்கும் சக்தி எங்கள் கட்சிக்கே உள்ளது’ என தம்பட்டம் அடிப்பதையும் பார்க்கிறோம்.

  இதற்கிடையே கட்சி தாவல்கள், கோஷ்டி மோதல்கள், இனக்கலவரங்கள், ஏசல்கள், (திட்டுதல்) பூசல்கள், எதிர் கட்சியினரை சாடுதல், அவர்களின் குறைகளை கூர்வாள் போன்ற வார்த்தைகளால் விளாசித்தல் என இவையாவும் கட்சிகளின் அலங்கோலத்திற்கு சாட்சியாகக் காட்டப்படுவதும் உண்டு. தலைமை தேர்தல் அதிகாரி பல கட்டுப்பாடுகள், விதிமுறைகள் அறிவித்தும் எந்த பயனும் இல்லை. எல்லா வேட்பாளப் பெருமக்களின் பிரச்சாரக் கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூடுகிறது ஏன்? எனில் அவர்களை எடை போட்டு நல்லோரை, வல்லோரை தேர்ந்தெடுத்தால்தான் நாடு நலம் பெறும், மக்கள் நிம்மதியாக வளமோடு வாழ இயலும் என்பதற்காகத்தான், முஸ்லிம் பெண்மணிகளே, ‘இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன’ என வாளாவிலிருந்து விடாதீர்கள். நாட்டில் விடுதலை போராட்டத்தில் வீறு கொண்டு பங்கேற்றது இஸ்லாமிய சமுதாயம். எனவே வாக்குரிமையை புறக்கணிக்காதீர்கள். பண்பாளர்களுக்குத்தான் நமது வாக்கு என சபதமெடுத்துக் கொண்டு செயல்படுங்கள்.

  “எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வளிக்கிறானோ, அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போலாவான்” (5:32) என்ற திருக்குர்ஆனின் திருவசனத்தை உள்ளத்தில் ஊன்றி செயல்படுங்கள். பதவிக்காக ஏங்குபவர்களையும், பதவியை அடைய முயல்பவர்களையும் பதவியில் அமர்த்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருங்கள். ‘மனிதர்களில் சிறந்தவர்கள் பதவி தானாகவே அவர்களை வந்தடையும் வரை, அதனை அறவே விரும்ப மாட்டார்கள்’ என்ற நபிமொழியை பின்பற்றுபவர்களை மட்டும் தேர்வு செய்யுங்கள்.

  “பதவிக்குத் தகுதியானவர்கள் இருக்க, அவர்களை புறக்கணித்து தகுதியற்றவரிடம் பொறுப்பை ஒப்படைப்பவர், இறைவன், இறைதூதர், இறை நம்பிக்கையாளர்கள் ஆகியோருக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தவர் ஆவார்” என்ற நபிமொழி ஹாசிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கவனத்தில் கொள்ளத்தக்கது. நமது நாற்பெரும் கலீஃபாக்களின் ஆட்சி நம் உள்ளத்தில் ஊற்றெடுக்கட்டும். நமது சமுதாயத்திற்கு யார் துணையாக நின்று, சம நோக்கோடு சமநீதி செலுத்தும் நல்லோரை நாம் தேர்வு செய்வோம். வெற்றி காண்போம், அல்லாஹ் போதுமானவன்.

 நன்றி : நர்கிஸ் – ஏப்ரல் 2014

தகவல் முதுவை ஹிதாயத்
Muduvai Hidayath

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails