Sunday, April 27, 2014

வீண் விரயமே… உனது மறுபெயர்தான் இன்டர்நெட் சாட்டிங்கா?

ஓலை உலகம் எப்போதோ ஓடிப் போய் விட்டது! புத்தக உலகம் இன்னும் சில வருடங்களில் புதைந்து விட காத்திருகின்றது. இதோ,  இப்போது இன்டர்நெட் உலகம், நம் அனைவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துக்கொண்டு – மன்னிக்கவும் அசுரத்தனமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது!

இது நல்ல பழக்கம்தானா?

காலையில் எழுந்ததும் face ஐ கழுவுவதற்கு பதில், facebook இல் கழுவி குடிக்கின்றோம். டிஃபன் பட்டர் ஐ அசை போடுவதற்கு முன் ட்விட்டெரை அரைக்கின்றோம்! அரைமணி நேரம் ரோட்டில் ஒடுகின்றோமோ இல்லையோ, அரை நாள் முழுவதும் சாட்டிங்கில் ஒட்டுகின்றோம்.

கண் டியூப்கள் வெடிக்கும் அளவிற்கு யு டியூபைக் கண்டு களிக்கின்றோம். இது நல்ல பழக்கம்தானா? சிந்தித்துப் பார்க்கவும்!  வேலைக்கு உலை வைக்காதா? சில வருடங்களுக்கு முன் வேலை போக மீதி நேரம் கிடைத்தால் சாட்டிங் என்ற நிலை மாறி, இப்போது சாட்டிங் போக மீதி நேரம் கிடைத்தால் வேலை என்ற நிலையல்லவா இருக்கின்றது!

வேலை ஒன்றும் நடப்பதில்லை என்று உணர்ந்த கம்பனிகள் இதற்கு இரும்புக் கோட்டை கொண்டு தடை விதித்தாலும், நாமும் கொஞ்சமும் அசராமல் மொபைலில் தட்டிக்கொண்டிருக்கின்றோமே? இது நம் வேலைக்கு உலை வைக்காதா? வியாபாரிகளும் இதற்கு சளைத்தவர்களாக இல்லையே? கடை திறந்ததும் பில் புக்கை  நிரப்புவதை விடை கூடுதல் ஃபேஸ் புக்கைத்தானே நிரப்புகின்றார்கள்? இது நம் வியாபாரத்திற்கு பூட்டு போடாதா? புக் ரீடிங்கை விட அதிகம் நெட் பிரவ்சிங்க் செய்யும் நம் பிள்ளைகளின் கல்விக்கு இது குழி பறிக்காதா?

இது போதையல்லவா?

குடிப்பது மட்டும்தான் போதையா? உடலாலும் மனதாலும் எந்தப் பழக்கத்திற்கும் அடிமையானால் அதுவும் போதைதானே? விட நினைத்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றதே? உலகப் பொறுப்பை எல்லாம் மறந்து பல மணிநேரங்கள் நம்மை இது அடிமை ஆக்குகின்றதே? சினிமா, சிகரெட்டை நாம் போதை என்று சொல்லும்போது இதை மட்டும் விட்டுவிடலாமா?

இதில் நமக்கு பல நன்மைகள் இருக்கின்றன என்று நினைத்து “நல்ல விஷயங்களை” மட்டும்தான் நாங்கள் சொல்கின்றோம் என்னும் மேதாவிகள் சில நன்மைகள் இருக்கும் மதுவைத் தடை செய்த இறைவசனத்திற்கு என்ன சொல்வார்கள்?  நல்ல விஷயங்களையே அனுப்புகின்றோம், நல்ல விஷயங்களையே பார்க்கின்றோம் என்னும் சாக்கில் நாள் கணக்காக நெட்டில் இருக்கும் போக்கை என்ன சொல்வது?

நன்மையா? தீமையா? என்று வாதம் செய்யும்போதும், நேரம் வீண் விரயம் ஆவதை யாரும் மறுக்க முடியாதே? ஓய்வு நேரத்தை உருப்படியாக பயன்படுத்தலாமே?

கம்ப்யூட்டரும் கையுமாக இருக்கும் கனவான்களை ஒரு முக்கியமான வேலைக்காக அழைத்தால், “எனக்கு கொஞ்சம் கூட நேரமே இல்லை” என்று மலர்வார்கள்! அவர்களின் கம்ப்யூட்டரை ஒருநாள் பிடுங்கிப் பாருங்கள்! “இப்போது நேரமே போவதில்லை” என்று ஆதங்கம் வரும்.

அவர்களின் நேரக் கொலைக்கு எது காரணம் என்று இப்பொது புரிகிறதா? இதில் நன்மையா? தீமையா? என்று நாள் கணக்கில் வாதாடுபவர்கள் கூட இது நேர விரயம் என்பதை ஒத்துக்கொள்ளத்தானே செய்வார்கள்? கால விரயம் செய்வதைப் பற்றி நாம் கேட்கப்பட மாட்டோமா?

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: மறுமையில் நமக்கு அருளப்பட்ட 5 விஷயங்களை எப்படி பயன் படுத்தினோம் என்பதைப் பற்றி கேள்வி கேட்கப்படுவோம். அவற்றில் முக்கியமானவை ஆரோக்கியமும், ஓய்வு நேரமும். (இப்னு மாஜா)

நமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தை இன்னும் உருப்படியாக பயன்படுத்தலாமே?

M.J. ஹபீப் ரஹ்மான் M.Arch.
Source:http://www.thoothuonline.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails