தங்கைக்கோர் மடல்
நர்கிஸ் அண்ணா எம். சேக் அப்துல்லா
அருமை தங்கைக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கருத்துக்களை பிறர் மனதில் எளிதாக இடம் பெறச் செய்வதற்கு, உவமை சிறந்த உபகரணமாகும். ஈடு இணையற்ற திருக்குர்ஆன் உவமை படைப்பதிலும் உயர் இடத்தை வகிக்கிறது. இவ்வுலக வாழ்க்கையில் பிரச்சனைகள் தோன்றும் போது, தீர்வு காண இறைவனையே அணுக வேண்டும். அதை விடுத்து இவ்வுலகத்தோரையும், உலக வஸ்துகளையும் அணுகுவோர்க்கு அல்லாஹ் தனது அருள் மறையில் சிலந்திப் பூச்சியையும், அதன் வீட்டையும் உவமையாக தந்திருக்கிறான்.
தங்கையே ! சிலந்தி பூச்சி தன்னைச் சுற்றி வலை பின்னிக் கொள்கிறது. அதில் சிக்கும் பூச்சிகளை – வலையில் உள்ள பசை போன்ற பொருள் மீள விடாது பிடித்துக் கொள்கிறது. சிக்கிய பூச்சி, சிலந்திக்கு உணவாகிறது. அது போன்று இவ்வுலகம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாய வலையை விரித்து வைத்திருக்கிறது. அதில் சிக்குண்டு விடும் மனிதர்களும் அதற்கே இரையாகி விடுகின்றனர். மனிதன் தனக்கேற்பட்ட பிரச்சனையில் தீர்வுகாண இவ்வுலகமெனும் மாயவலையில் வீழ்ந்து விடுகிறான். அல்லாஹ் தனது திருமறையில் – “அல்லாஹ்வையின்றி பிற பாதுகாவலர்களை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களுக்கு உவமை, வலை பின்னியுள்ள சிலந்திப் பூச்சியைப் போன்றதாகும். அவர்கள் புரிந்து கொள்வார்களானால், வீடுகளிலேயே மிக்க பலவீனமான வீடு சிலந்திப் பூச்சியின் வீடே” என எச்சரிக்கின்றான்.
வரலாற்றில் ஒரு சம்பவம் கேள் ! மூஸா நபி (அலை) அவர்கள் ஒரு சமயம் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டபோது, இறைவனிடம் தன் நிலை குறித்து முறையிட்டார்கள். இறைவனும் ஒரு வகை பச்சிலையைச் சாப்பிடும்படி உத்தரவிட்டான். அவர்களும் அதனை உண்டு நலமடைந்தார்கள். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர்களுக்கு வயிற்று வலி கண்டது. உடனே முன்பு இறைவன் காட்டித் தந்த பச்சிலையைத் தேடி உண்டார்கள். ஆனால் நோய் நீங்கவில்லை. முன்பை விட அதிகமானது. அதன் பின்னர்தான் இறைவனிடம், “இறைவா ! எனக்கு மீண்டும் தாள முடியாத வயிற்று வலி ஏற்பட்டு விட்டது. நீ முன்பொரு முறை உண்ணச் சொன்ன தழையை உண்டேன். ஆனால் வயிற்று நோவு குணமடையவில்லை” என முறையிட்டார்கள். அதனைச் செவியுற்ற இறைவன், “மூஸாவே ! முன்பு வலியால் நீ பாதிக்கப்பட்ட போது என்னை அணுகினீர். ஆனால் இப்போது நீர் என்னை அணுகாமல், முறையிடாமல் நேராக பச்சிலையைத் தேடிச் சென்று விட்டீர். மூஸாவே ! அறிந்து கொள்வீராக ! இந்த உலகம் – உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் நஞ்சு கலந்ததே. எனது பெயரே அதன் நஞ்சுத் தன்மையைப் போக்க வல்லது” என்று கூறினான்.
தங்கையே ! மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ‘நூலாம் பூச்சி’ (அன்கபூத்) அத்தியாயத்தில் மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறான். “மனிதர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றோம் என்று கூறுகின்றனர். எனினும் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வழியில் ஏதும் துன்பம் ஏற்பட்டால், ஜனங்களால் ஏற்படும் அத்துன்பத்தை, அல்லாஹ்வுடைய வேதனையைப் போல் (மிகப் பெரிதாக) ஆக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்(ள விரும்பு) கின்றனர். உம் இறைவனிடமிருந்து ஏதேனும் உதவி கிடைக்கும் பட்சத்தில் “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருந்தோம்” என்று கூறுகின்றனர். “ உலகத்தாரின் இருதயங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தோனல்லவா” – என்பதாக.
313 பேர்களை மட்டுமே அழைத்துச் சென்று பத்ரு போர்களத்தில் இறங்கியபோது “அல்லாஹ் ஒருவனே உதவி செய்யக் கூடியவன்” என பெருமானார் (ஸல்) அவர்கள் இறை சன்னிதானத்தில் ஸஜ்தாவில் விழுந்தார்கள். வெற்றியும் பெற்றார்கள். ஓர் திருப்புமுனையாகவும் இருந்தது. எந்த சோதனைகளோ, பிரச்சனைகளோ ஏற்படின் அதில் வெற்றியைத் தர இறைவனையே கேட்க வேண்டும் என்ற நியதியினை இந்த சிலந்தி வலை உவமை உணர்த்தியது சரியானது தானே !
நன்றி
நர்கிஸ் – மே 2014
http://mudukulathur.com/?p=25966
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>
No comments:
Post a Comment