Saturday, May 24, 2014
தாவூத் நபி செய்த தவறு
தாவூத் நபியவர்கள் செய்த ஒரு தவறை இறைவன் சுட்டிக்காட்டிய போது அவர் திருந்திக் கொண்டார் என்ற செய்தியை மட்டும் தான் இறைவன் இங்கே குறிப்பிடுகிறான். படிப்பினை பெறுவதற்கு இதுவே போதுமானதாகும்.
தாவூத் நபியவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பது பற்றி திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. ஆயினும், அவர்கள் எத்தகைய தவறு செய்தார்கள் என்பதை இவ்வசனங்களே நமக்கு உணர்த்துகின்றன.
இரண்டு பேர் ஒரு வழக்கைக் கொண்டு வருகிறார்கள். "இவருக்கு 99 ஆடுகள் உள்ளன. என்னிடம் ஒரு ஆடு தான் உள்ளது. அந்த ஒன்றையும் இவர் எடுத்துக் கொள்ளப்பார்க்கிறார்'' என்று அவர்களில் ஒருவர் தாவூத் நபியிடம் முறையிடுகிறார்.
இதற்கான தீர்ப்பை தாவூத் நபியவர்கள் அளித்த பிறகு, "இவ்விருவரும் நமது தவறைச் சுட்டிக்காட்டி உணர்த்த இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்கள்'' என்பதை தாவூத் நபி புரிந்து கொண்டு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கிறார்.
இந்த வழக்கின் தன்மையிலிருந்து அது தன்னைத்தான் குறிக்கிறது என்று தாவூத் நபியே புரிந்து கொண்டிருப்பதால் அவர் செய்த தவறு இந்த வழக்கிலுள்ள தவறு போன்றதாகத்தான் இருக்க முடியும்.
அதிகமாக வைத்துள்ள ஒருவர் குறைவாக வைத்துள்ளவரின் அற்பமான பொருளையும் கையகப்படுத்த முயல்கிறார். இது தான் இந்த வழக்கின் தன்மை.
தாவூத் நபியவர்கள் தம்மிடம் ஏதோ ஒன்று அதிகமாக இருந்தும், அதே பொருளை மிகக் குறைவாக வைத்திருந்த ஒருவரிடமிருந்து எடுத்துக் கொண்டிருக்காவிட்டால் இந்த வழக்கிலிருந்து தனது தவறை அவரால் புரிந்து கொண்டிருக்க முடியாது.
பொதுவாக மன்னர் என்ற அடிப்படையில் செய்யும் சில காரியங்கள் இது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தி விடுவதுண்டு.
தாவூத் நபியவர்கள் மன்னராக இருந்ததால் அரசுப் பணிகளுக்காக சாதாரண மக்களின் நிலத்தை முறைப்படி கையகப்படுத்துதல், அல்லது தமது படையில் அதிகமான போர்க் குதிரைகள் இருந்தும் ஒரு குடிமகன் வைத்திருக்கும் ஒரேயொரு குதிரையை படைக்காக முறைப்படி எடுத்துக் கொள்ளுதல், பெரும் நிலப்பரப்புக்கு ஆட்சியாளராக இருந்து கொண்டு ஒரு குறுநில மன்னனின் நாட்டைக் கைப்பற்றுதல் போன்ற செயல்களில் ஏதேனும் ஒன்றாக இருக்க முடியுமே தவிர..... இழிசெயலாக அந்தத் தவறு ஒரு போதும் இருக்க முடியாது.
நன்றி
http://www.onlinepj.com/quran-pj-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment