Tuesday, May 27, 2014

கற்றது மற

அமெரிக்கர் ஹிதாயத் சொன்ன ஒரு வார்த்தை அழுத்தமான அர்த்தத்துடன் மனத்தினுள் பாய்ந்தது. ஏதோ அப்பொழுதுதான் முதன்முதலாக அந்த

வார்த்தையைக் கேட்பதுபோல் ஓர் உணர்ச்சி. ““ஐ அம் அன்லெர்னிங் வாட் ஐ லேர்ண்ட்”” என்ற வாக்கியத்தின் இடையில் சிக்கிக் கொண்டிருந்தது unlearn என்ற அந்த வார்த்தை.

இந்தோனிஷியாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணைத் திருமணம் புரிந்துள்ள ஹிதாயத் வெள்ளைக்கார அமெரிக்கர். கிறித்தவக் குடும்பத்தில் பிறந்து அதன் கோட்பாடுகளில் தீவிரமாக இருந்தவருக்கு எங்கிருந்தோ அந்த மாற்றம் வந்தடைந்து, ஒரு தருணத்தில் இஸ்லாமியராகிவிட்டார். அப்படியானவரை முதன் முதலாகச் சந்திக்கும்போது ஆர்வமாய் எழும் வழக்கமான கேள்வி எழுந்தது.

“எப்படி?”

பலரும் பகிர்ந்துள்ள பரிச்சயமான பதிலைத்தான் அவரும் சொன்னார். கிறித்துவத்தைத் தீவிரமாகப் பயில பயில, Trinity எனப்படும் திரித்துவத்திற்கு மட்டும் அவருக்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. மதகுருவினர் அளித்த பதில்களும் திருப்தி அளிக்க மறுத்தன. எனில் ‘யார்தான் அந்த இறைவன்’ என்ற தேடலில் இருந்தவருக்கு சூரா அல்-இஃக்லாஸ் அறிமுகமாகியுள்ளது.

““(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.””

அந்த இறை வசனங்கள் மனத்தைத் தாக்கி, “‘குர்ஆனா? அல்லாஹ்வா? முஸ்லிம்களா? என்னதான் அது?’” என்று தேடித்தேடிப் படித்தவர், ‘‘ஆஹா, இதான் அது’’ என்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். கிடைத்த ஹிதாயத் அவரது பெயராகவே ஆகிப்போனது. அடுத்து தொடர்ந்து இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்பதற்காக அவர் மேலும் மேலும் பயிலும்போதுதான் அந்தச் சிக்கல் எழுந்தது. அதுவரை அவர் கற்றிருந்த ஞானம் குறுக்கிட்டு இடறியது. ‘‘ம்ஹும்! இது சரிப்படாது. தெளிவாய்க் கற்று அறிய வேண்டுமெனில் தேவை க்ளீன் சிலேட்’’ என்று அவர் எடுத்த முனைப்புதான் unlearning. கற்றதை மற என்று தோராயமாகச் சொன்னாலும் அதையும் தாண்டியது அது. கற்றதை கல்லாததாக ஆக்கிக் கொள்வது. எளிதா அது?

இதென்ன முரண்? ஏன்? ஏதற்கு? எப்படி? என்று ஏகப்பட்ட கேள்விகுறிகள் எழுகின்றன அல்லவா?

கவிதையோ கதையோ எழுதி எழுதிப் பார்த்து ஒன்றும் சரிப்படாமல் பிறகு விஷயம் சரியாக அமைந்ததும் பழைய தாள்களைக் கசக்கி எறிந்து விட்டுப் புதிதாக ஒரு தாளை எடுத்து எழுதத் தொடங்குவோமே அப்படி மெய் கல்வி கற்க, தெளிவான ஞானத்தைப் பயில மனத்தில் படிந்திருக்கும் பழையதை அவர் அழிக்க வேண்டியிருந்தது. முரண்பட்ட பழைய கல்வி ஞானத்தை மகா இடைஞ்சலாக உணர்ந்திருக்கிறார்.

இது நம்மனைவருக்கும் பொது. தவறான கல்வியால் விளையும் முன் முடிவு, தத்துவம், கோட்பாடுகள், நிலைசார்பு போன்றவை தூய கல்விக்கு இடைஞ்சல்கள் மட்டுமின்றி, பெரும் கவனச் சிதறல்கள். அதன் பக்கவிளைவான தீமை என்னவென்றால் கற்கும் கல்வியை முன்முடிவுகளுக்கு ஏற்ப வளைத்துப் புரிந்துகொள்வது. பால் தயிராக மாற துளி தயிர் உறை போதாது?

இந்தச் சிக்கலில்தான் சிக்கிக் கிடக்கிறது மனித சமூகம், குறிப்பாக இஸ்லாமியச் சமூகம். இன்று நாகரிகம் என்ற பெயரில் கட்டுப்பாடற்ற சுதந்தரத்துடனும் தகவல் நுட்பத்தின் மேன்மையினாலும் வளர்ந்து நிற்கும் உலகக் கல்வியை அணுகுவதில் நமக்குப் பெரும் சவால் நிறைந்துள்ளது. எது கல்வி என்று தேர்ந்தெடுத்துக் கற்பதற்கு எது கல்வி இல்லை என்ற தெளிவு முக்கியம்.

ஆயிரத்து நானூற்று சொச்ச ஆண்டுகளுக்குமுன் மக்காவில் தோன்றிய ஏகத்துவ மீளெழுச்சி கற்பித்த வாக்கியத்தின் முதல் பகுதி என்ன? ‘வணக்கத்திற்குரியவன் யாருமில்லை’’ என்ற மறுப்பு. பிறகுதானே ‘அல்லாஹ்வைத் தவிர’ என்ற கற்பித்தல். ““ஓதுவீராக!”” என்று தொடங்கிய இறை அறிவிப்பில் மீளெழுச்சியுற்ற இஸ்லாமிய சமூகத்திற்குக் கல்வியானது கடமை. ஆண், பெண் பாகுபாடு அற்ற சம உரிமை போதனை. ஆனால் எது மெய் கல்வி என்பதை இனம் காண்பதில்தான் சூட்சமம் அடங்கியுள்ளது.

சமகால உலகில் கோலோச்சும் நாகரிகம் வரையறுப்பதும் கை காண்பிப்பதும்தான் கல்வித் திட்டத்தின் அடிப்படை என்று நம்மிடம் விரவியுள்ளதே ஒரு மனப்பான்மை அது பாமரம். ஏக இறைவனுக்கு மாறான, எதிரான, புறம்பான ஞானம் விளைவிக்கும் எதுவுமே கல்வியிலேயே சேர்த்தியில்லை என்ற அடிப்படை விழிப்பு உணர்வு முக்கியம். உலகக் கல்வியானது எந்த ஞானத்தின் மேல் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற தெளிவு ஏற்பட வேண்டியது அதைவிட முதல் முக்கியம். பணத்தை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று அடித்தளத்தை நிராகரித்துப் பல அடுக்குக் கட்டடம் கட்டித்தர முன்வரும் பொறியாளரை என்னவென்று சொல்வோம்?

கல்வி விழிப்புணர்வும் இகலோகப் போட்டியும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மார்க்கக் கல்வியை உபரி பாடமாகக்கூட கற்கத் தோன்றுவதில்லை. ஆழமான அழுத்தமான இறை கல்வி இல்லையெனில் என்னவாகும்? ஹார்வார்டு பட்டதாரியாகவே இருந்தாலும் கோமாளிகளைத்தான் உருவாக்கும். இந்தியாவிலேயே அதற்குச் சிறப்பான உதாரணம் உண்டு.

இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடு இருப்பின் நமது வரலாற்றை நாம் திரும்பிப் பார்ப்பது நலம். மக்காவில் தாருல் அர்கம் எனும் வீட்டிலும் மதீனாவின் மஸ்ஜிதுந் நபவீ திண்ணையிலும் என்று பாடம் பயின்ற மாணவர்கள்தாம், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைந்து வெறும் பதின்மூன்றே ஆண்டுகளுக்குள் வல்லரசுகளான ரோமர்களையும் பாரசீகர்களையும் வென்றார்கள்.

பாலையில் பாடம் பயின்றவர்கள் முந்தைய வல்லரசின் ஊர்களில், நகரங்களில் கல்விச்சாலைகள் அமைத்தார்கள், வளர்த்தார்கள். இருளில் கிடந்த மேற்குலகிற்கு விடிவெள்ளிகள் கிடைத்தன. அதற்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன் அந்த இரு பெரும் வல்லரசுகளின் நாகரிக உச்சம் எங்கே? பெண் குழந்தைகளை உயிருடன் புதைந்து வாழ்ந்த சமூகம் எங்கே? பிறகு எப்படி நிகழ்ந்தது அந்த மாயாஜாலம் போன்ற புரட்சி?

கல்வியறிவு என்பது சர்ச்சைக்கே இடமற்ற கடமை. ஆனால் அதற்குமுன் உலகம் இன்று நம் மனத்தினுள் கற்பித்து வைத்திருப்பதை நீக்கிய கல்லாத மனம் முக்கியம்.


-நூருத்தீன்

சமரசம் 16-31, மே 2014 இதழில் வெளியானது

அச்சு வடிவில் வாசிக்கஇங்கே க்ளிக்கவும்

நூருத்தீனின் இதர கட்டுரைகள்

நன்றி http://darulislamfamily.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails