Wednesday, June 4, 2014

ஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்…

முஸ்லிம்களுக்கு ஊடகங்கள் வாய்ப்புகளை மறுக்கினறன என்ற ஏக்கம் ஒரு காலத்தில் இருந்தது. அதைத் தீர்க்கும் வகையில்… ஃபேஸ் புக் எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கியது.
முஸ்லிம்கள் அதில் அதிகமாக பங்கேற்றனர். ஆனால் அது சமுதாயத்திற்கு நன்மை தருவதற்கு பதில் தீமைகளையும், ஆபத்துகளையும் உருவாக்கி வருகிறது.

குறிப்பாக, சிலர் தங்களை மாவீரர்களாக காட்டிக் கொள்வதற்கும் ‘அளப்பரிய” சமுதாய உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கும் ஃபேஸ் புக்கை பயன்படுத்துகிறார்கள்.

அனைவரும் கவனிக்கும் பொது தளத்தில் எழுதுகிறோமே… என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்கள் எழுதும் கருத்துக்கள் நடுநிலையாளர்களை முகம் சுழிக்க வைக்கிறது.

பிடிக்காத அரசியல் தலைவர்களை ஒருமையில் திட்டுவது; கேவலமாக விமர்சிப்பது; காவி அமைப்புகளை சேர்ந்தவர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவது; என நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது.

ஒரு முஸ்லிம் பெயரில் இவையெல்லாம் வெளிவரும்போது அது வேறுவிதமான எதிர் மன நிலைகளை பிறரிடம் உருவாக்குகிறது.

மதவாத சிந்தனைகள் இல்லாதவர்கள் கூட ஏன் முஸ்லிம்கள் இவ்வளவு மூர்க்கத்தனமாக இருக்கிறார்கள்? என வேதனைப்படுகிறார்கள்.

இன்னும் சிலர் ‘இவங்க இப்படியெல்லாம் பேசுறதும் எழுதுறதாலும் தான் ஆர்.எஸ்.எஸ்.காரன் இவனுங்கள எதிர்க்கிறான் போல” என்றெல்லாம் பேசுகிறார்கள்.

இந்து மதத்தின் குறைகள் குறித்து திராவிடர் கழகத்துகாரரோ, தி.மு.க.காரரோ, கம்யூனிஸ்டுகாரரோ பேசினால் அது வேறு. அதை ஒரு முஸ்லிம் பேசக்கூடாது. பேசினால் அது வேறு திசைக்கு போய் விடும் என்ற அடிப்படை அறிவுக்கூட… ‘ஃபேஸ் புக்’ மாவீரர்களுக்கு இல்லை.

இன்னும் பல அக்கிரமங்கள் அரங்கேறுகின்றன. புர்கா அணிந்த முஸ்லிம் பெண்ணின் படத்தையும், புர்கா அணியாத இந்து பெண்ணின் படத்தையும் அருகருகே பிரசுரித்து; இந்து பெண்ணை ஆண்கள் காதல் பார்வையோடு அணுகுவது போலவும்; முஸ்லிம் பெண்ணைப் பார்க்காதது போலவும்; வாசகங்களைப் போட்டு தங்களின் ‘அறிவை” வெளிக்காட்டுகிறார்கள்.

இதைப் பார்க்கும் முஸ்லிம் அல்லாதவர்கள் கோபத்தில் முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தி ‘கமெண்ட’ கொடுக்கிறார்கள்.

இது தேவையா? வீண் வம்பை ஏன் உருவாக்க வேண்டும்?
முன்பு ‘பம்பாய்’ படத்தில் மனிஷா கொய்ராலா புர்காவை கழற்றிவிட்டு ஓடும் காட்சியை இப்போது எடுத்துப் போட்டு ‘ஓடு காலி” எனப் போடுகிறார்கள். என்றோ முடிந்துப் போன ஒரு நிகழ்வை இப்போது நினைவுப்படுத்தி புதுப் பிரச்சனைகளை ஏன் உருவாக்க வேண்டும்?

ஒரு ஊரில் யாராவது ஒரு பெண் வீட்டை விட்டு, பிற ஆணோடு ஓடிவிட்டால் அதை ஏன் ஃபேஸ் புக்கில் போட வேண்டும்?

இதனால் தனிநபர் கண்ணியம் பாதிக்கப்படுவதோடு, சமூகத்தின் மானமும் கப்பலேறுகிறது என்பதை ஏன் இவர்கள் புரிவதில்லை? அந்த கூட்டிக் கொண்டுபோன ஆடவரை கடுமையாக தாக்குவதை ஏன் படமாகப் போட்டு சாதனையாக எழுதவேண்டும்? இது யாரை கேவலப்படுத்துகிறது என யோசிக்க வேண்டாமா?

தனிநபர் கண்ணியத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் பதிவேற்றம் செய்யாதீர்கள்.

குர்பானி கொடுக்கிறோம் என்ற பெயரில் ஆடு, மாடுகளை அறுத்துவிட்டு ரத்தக் காட்சிகளோடு கத்திகளை தூக்கிக் காட்டிக்கொண்டு, ஏதோ போருக்குப் போய் வந்தது போல் படங்களைப் போட்டு, ஃபேஸ் புக்கில் பரப்பி மகிழ்கிறார்கள்.
ஏற்கனவே முஸ்லிம் சமூகம் ஒரு முரட்டுத்தனமான கூட்டம் என விமர்சிக்கப்படும் நிலையில் கத்தி, ரத்தம் என காட்சிகளைக் காட்டி மகிழ்வது எந்த வகை மார்க்கப் பண்புகளில் சேரும்?

இதையெல்லாம் எல்லோரும் பார்க்கும் ஃபேஸ் புக்கில் ஏன் போட வேண்டும்?

இது மட்டுமின்றி…

‘யுனைடெட் இஸ்லாமிக் ஸ்டேஸ்ட் ஆஃப் இந்தியா’ என ஒருவர் போடுகிறார். 25 கோடி பேர் இருந்துகொண்டு இந்தியாவை இஸ்லாமிய நாடு என்று வாதிட்டால், 90 கோடி பேரைக் கொண்ட இந்துக்கள் தரப்பிலிருந்து இது ‘யுனைடெட் இந்து ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’ என எழுத மாட்டார்களா? நீங்கள் ஏன் அந்த சிந்தனையைத் தூண்டி விடுகிறீர்கள்?

ஃபேஸ் புக்கில் சிலர் எழுதும் தான்தோன்றித்தனமான கருத்துக்களால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள் தான். ஒரு கிராமத்தில் 20 குடும்பங்கள் மட்டுமே வாழும் ஊரில், அவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அலுவலகங்களில் ஓரிருவராகப் பணியாற்றும் முஸ்லிம்கள் தனிமைக்கு ஆளாகிறார்கள். நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம் பீதிக்கு ஆளாகிறது.

வேலை வெட்டி இல்லாவிட்டால் பயனுள்ள வகையில் புத்தகங்களைப் படிக்கலாம். வெளிநாட்டில் 10 மணி நேரம் போக சும்மா இருப்பவர்கள் பயனுள்ள வகையில் நேரத்தை செலவழிப்பது குறித்து சிந்திக்கலாம்.

குளிர் சாதன அறையில் இருந்துகொண்டு எதையாவது… ஃபேஸ் புக்கில் ‘சமுதாய உணர்வைக் காட்டுகிறோம்’ என்ற பெயரில் சமுதாயத்திற்கு நாசத்தை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும். யாரோ எதையாவது எழுத, களத்தில் உள்ளவர்கள் அதை சுமக்க வேண்டியுள்ளது.

தமிழ் முகநூல் உலகில் நடுநிலையாளர்கள் பலர் பா.ஜ.க. பக்கம் சென்றதில் இதுபோன்ற ‘பேஸ்புக் மாவீரர்கள்தான்’ காரணம். இதுவும் ஒரு வகை சமூதாய துரோகமாகும். வேறு எந்த சமூகமாவது இப்படியெல்லாம் எழுதுகிறதா? செயல்படுகிறதா?

இயக்க சண்டைகளும், சமுதாயத் தலைவர்கள் மீதான கடும் விமர்சனங்களும் அசிங்கமாக எழுதப்படுகின்றன. ஒருவர் மீதான குற்றச்சாட்டு அவரிடம் விளக்கம் கேட்காமலேயே எழுதப்படுகிறது.

தயவு செய்து இனியாவது ஒரு கருத்தை… பேஸ்புக்கில் பதிவிறக்கும் முன்பு ஒன்றுக்கு 5 முறை நின்று நிதானமாக யோசியுங்கள். நினைத்ததை எல்லாம் உடனே பதிவு செய்யாதீர்கள்.

எதை எழுத வேண்டும்?
எதை எழுதக் கூடாது?

எதை எழுதினால் அது சமுதாயத்திற்கு நன்மையை தரும்?
எதை எழுதினால் அது நடுநிலையாளர் களை கோபப் படுத்தாது?
எதை தவிர்த்தால் அது நல்லது?

ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளை விமர்சிக்கும் போது அது சாதாரண இந்துக்களைக் காயப்படுத்தாமல் எப்படி எழுதுவது?
பிற மக்களும் ஏற்கும் வகையில் நமது நியாயங்களை எப்படி எழுதுவது?
என்பதை பற்றி கூர்ந்து சிந்தித்து எழுத வேண்டும்.

எல்லாவற்றையும் ஷேர் செய்வதை தவிர்க்க வேண்டும். சர்ச்சைகுரியவர்களை முகநூல் நட்பிலிருந்து துண்டித்துவிட வேண்டும்.

இது ஃபேஸ்புக் துறைக்கு மட்டுமல்ல… ட்விட்டர், வாட்ஸ்அப், இணையதளம் என அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும்.
இப்படி எல்லாம் எங்களால் முடியாது? என பேசுபவர்களுக்கு என்ன பதில் கொடுப்பது?

அவர்கள் மவுனமாக இருந்தாலே அது சமுதாயத்திற்கு நன்மையை தரும் என்பதைத் தவிர வேறு பதில் இல்லை.

இறைவன் எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்ற வேண்டும் என பிரார்த்திப்பது போல, ‘இந்த சமுதாயத்தில் இருக்கும் முரட்டு -அரை வேக்காடுகளிடமிருந்தும் சமுதாயத்தைக் காப்பாற்று’ என கூடுதலாகப் பிரார்த்திப்போம்.

சமுதாயத்தை உணர்ச்சிகரமாக அல்லாமல், அறிவு சார்ந்து உருவாக்குவோம்.

Thamimun Ansari
https://www.facebook.com/m.thamimunansari?fref=nf

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails