Monday, April 13, 2015

உலக வாழ்வு உல்லாசமே!

உலக வாழ்வு உல்லாசமே!
Written by N. B. அப்துல் ஜப்பார்

உலக சரித்திரத்தில் நடக்கிற சிற்சில ஆச்சரியமான அதிசய நிகழ்ச்சிகளுக்கு எவருமே எக்காரணமும் சொல்ல முடிகிறதில்லை. அப்படிப்பட்ட பேரற்புத வைபவங்களைச் சிந்தித்துப் பார்க்கும்போதுதான் இறைவனென்பான் ஒருவன்

இருக்கிறான்; அவன் நாடியபடியேதான் எல்லாம் நடக்கும்; நம் கையிலே ஒன்றுமில்லை என்பது மிகத்தெளிவாய்ப் புலனாகின்றது. நீங்களே சொல்லுங்கள் : நெப்போலியன் ஏன் வாட்டர்லூ போரில் தோல்வியடைய வேண்டும்? முதல் உலக யுத்தத்தில் கெய்ஸர் ஏன் ஜெயிக்கவில்லை? சமீபத்தில் நடந்த மஹா யுத்தத்தின் ஆரம்பத்தில் ஹிட்லர் வெற்றிக்குமேல் வெற்றியடைந்து மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கைப்பற்றியிருந்தும், ருஷ்யாவுடன் ஜெர்மனி ஆதியில் சினேகமாயிருந்தும், கிரேட் பிரிட்டன் என்னும் இங்கிலாந்தைக் கவளீகரம் பண்ணிவிட்டு மறுவேலை பார்ப்பதென்று அவன் வீரக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தும், டன்கர்க்கிலிருந்து விழுந்தடித்துக்கொண்டு புறமுதுகிட்டோடிய பிரிட்டிஷாரைத் துரத்திக்கொண்டே ஹிட்லர் ஏன் இங்கிலாந்தின்மீது அதுகாலைப் படையெடுக்கவில்லை? அப்படி அவர் படையெடுத்துச் சென்றிருந்தால், அந்த நேரத்தில் பிரிட்டிஷார் நிபந்தனையற்ற சரணாகதியையே யடைந்திருப்பரல்லவா? இருந்தும் அவணை, இங்கிலீஷ் கால்வாயைக் கடக்காமல் தடுத்து நிறுத்திய சக்தி எது? இவ்வுதாரணமும் இருக்கட்டும். அன்று உஹத் யுத்தத்தில் குறைஷிகளைத் தக்க தருணத்தில் பின்னிடையச் செய்தது எது? இது போகட்டும்; ஹிஜ்ரத்தின்பொழுது தவ்ர்க்குகை வாயில்வரை சென்று துருவிய மக்கத்துமறமாக்களை உள்ளே எட்டிப்பார்த்து அல்லாஹ்வின் திருநபியையும் (சல்) அபூபக்ரையும் (ரலி) பிடிக்கவொட்டாது தடுத்து நிறுத்திய சக்தி எது?
இவ்விதமாகப் பலப்பல உதாரணங்களை உலக சரித்திரத்திலிருந்து நாம் எடுத்துக் காட்டமுடியும். ஆனால், அந்த ஒவ்வோர் உதாரணத்திலும் இறுதிவேளை நெருங்கியபொழுது, இறைவன் அநியாயக்காரர்களுக்கும் அக்கிரமம் புரிந்தவர்களுக்கும் முன்னோக்கிச் செல்வும் அறிவைத் தக்க தருணத்தில் மழுங்கச் செய்து விட்டானென்பதையே நாம் கண்டுகொள்கிறோம். ஆண்டவனின் அந்த மாயாசக்தி அக்கிரமக்காரர்களின் கண்களில் திரையைப் போட்டுவிடுவதுடனே, அவர்களை வேறு பாதையிலேயே திருப்பிவிட்டு விடுகிறது. ஏன் இப்படி நடக்கிறதென்று எவராலும் கூறமுடியாது. இதற்குத்தான் இறைவன் திருவிளையாடல் என்று பெயர். அம் மாயா சக்தியை எவருமே மீறவோ, அல்லது மாற்றியமைக்கவோ அறவே இயலாது. இஃது இயற்கை நியதி.

தமீதாவைக் கைப்பற்றிக் கொண்ட “சிலுவை யுத்தக்காரர்கள்” கண்களிலும் அவ் வெல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா இத்தகைய மாயத் திரையையே இறக்கி மறைத்து வைத்தான். அந்தக் கிறிஸ்தவர்கள் மட்டும் அச்சமயத்தில் ஆண்டவனின் அருளைப் பெற்றிருப்பாராயின், அல்லது அப்படிப்பட்ட அருளைப் பெறுதற்கு அருகதையை வாய்க்கப் பெற்றவர்களாய் இருந்திருப்பராயின், தமீதாவைக் கைப்பற்றிய அதே வேகத்தில் உள்ளே நுழைந்திருப்பார்கள். நீல நதியின் வாயிலிலே இருந்த தமீதாவையே ஒரு சொட்டிரத்தமும் சிந்தாமல் பிடித்துக்கொண்ட அவர்கள் சற்றும் முன்பின் யோசியாமல் விருவிருவென்று கடிய வேகத்தில் உள்ளே துளைத்துக்கொண்டு சென்றிருந்தால், எவரே அவர்களைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்? அதுசமயம் சுல்தான் சற்றேறக்குறைய எல்லாப் படைகளுடனுமே திமிஷ்கில் இருந்தார்; காஹிரா வென்னும் தலைநகரிலோ, அனுபவமில்லாத ஒரு பெண்மணியின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது; மிஸ்ரின் வேறு பகுதிகளோ, கொஞ்சமும் பாதுகாப்பின்றி இருந்தன. இவற்றைவிட இன்னம் வேறு தக்க தருணமும் வேண்டுமோ? லூயீயும் அவருடைய படைகளும் நியாயமான யுத்தத்துக்கு வந்திருப்பார்களேயானால், அவர்களுடைய அறிவு இப்படி மழுங்கிக் கழுந்தாய்ப் போயிருக்காது. ஆண்டவனிட்ட சோதனையைப் பாருங்களே!

தமீதாவைப் பிடித்து இரு மாதங்கள் முடிய, அக் கிறிஸ்தவர்கள் அப்பக்கம் இப்பக்கம் அசையவேயில்லை. வழக்கப்படியே அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடி யெல்லாம் துஷ்ட வாழ்க்கையை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். அப்படையிலிருந்த கோமகன்களும் எஜமானர்களான மேலதிகாரிகளும் தத்தம் மிருகவாழ்க்கையில் ஒருவரையொருவர் மிஞ்சத் தலைப்பட்டார்கள். சாதாரணப் போர் வீரர்களோ, மிக மிகக் கீழ்த்தரமான கெட்ட நடத்தைகளிலெல்லாம் இழியத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் நடத்திய நரசோர நாடகங்கள் எவ்வளவு மிதமிஞ்சிப் போயினவென்றால், அரசராகிய லூயீயாலே கூட அந்த நாற்றம் பிடித்த கெட்ட நடத்தைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த மன்னரைப்பற்றி யென்றாலோ, அவர் உலகவாழ்க்கையின் லீலா விநோதங்களில் மூழ்காவிட்டாலும், தமீதாவின் மஸ்ஜித்களையெல்லாம் மாதா கோவில்களாக மாற்றிவிட்டு, தம்முடைய இருப்பிடத்தையும் ஒரு மஸ்ஜிதுக்குள்ளே அமைத்துக்கொண்டுவிட்டார்.

மிஷாடென்னும் சரித்திராசிரியர் அவர்களைப் பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்:- “சூது விளையாடுவதில் அவர்களுக்கு எவ்வளவு தணியாத மோகம் இருந்து வந்ததென்றால், தத்தம் சொத்தையெல்லாம் இழந்த பின்னருங்கூடத் தங்கள் குதிரைகளையும் ஆயுதங்களையும் பணயம் வைத்து விளையாடி இழந்தார்கள். இயேசுநாதரின் நிழலடியில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருந்த சமயத்தில்கூட அச் சிலுவை யுத்தப் பேர்வழிகள் வரம்பு கடந்த வியபிசார வாழ்க்கையைத் தாராளமாய் அணுஷ்டிக்க முற்பட்டார்கள்; அவர்களுள்ளிருந்த எல்லா இனத்தவரிடையேயும் மிக மிக ஆபாசமான அத்தனை துஷ்கிருத்ய செயல்களும் முகடு முட்டிப் போயவிட்டன. வரம்பிகந்த பேராசைப் பேய்பிடித்த அம் மூர்க்கர்களின் மிருக இச்சையையும், டாம்பிக வாழ்க்கையையும், கேளிக்கை விளையாட்டுக்களையும் திருப்திப்படுத்திக் கொள்வதற்காக எல்லாவிதமான அக்கிரம அநியாய வழிகளும் கைக்கொள்ளப்பட்டன. படைத்தள கர்த்தர்கள் நகரத்திலும் போர் முகாம்களிலும் வர்த்தகம் புரிந்துகொண்டிருந்த வியாபாரிகளைக் கொள்ளையடித்து படுகொலை புரிந்தார்கள்; அவ்வர்த்தகர்களால் சுமக்க முடியாத வரிப்பளுவை அச் சிலுவை யுத்தக்காரர்கள் வலியத் திணித்துவிட்ட காரணத்தால், பண்டங்களுக்குப் பஞ்சம் வந்துவிட்டது. அவர்களுள் மிகவும் பொல்லாதவர்களோ, வெகு தூரம் வரையில் சென்று, சுற்றித் திரிந்து, போகிற வருகிற கார்வான் கூட்டங்களை வழிமறித்துக் கொள்ளையிட்டு, நகரங்களையும் நிலபுலங்களையும் பாழ்படுத்தி, தமீதாவைத் தலை சிறந்த நகரமாய்ச் செய்யும் சக்தி பெற்றிருந்த நிரபராத முஸ்லிம் பெண்களை விரட்டி யடித்தார்கள்.”

ஜாயின் வில்லி என்னும் மற்றொரு கிறிஸ்தவ சரித்திராசிரியர் ஒரே வாக்கியத்தில் அச் சிலுவை யுத்தக்காரர்களின் யோக்கியதையை அழகாகக் கூறியிருப்பதைப் பாருங்கள்:- “மிகச் சாதாரணமான ஓர் அற்ப ஸோல்ஜருங்கூடக் கன்னிப் பெண்களிடத்தும் பிறரின் மனைவியரிடத்தும் மிகமிகக் குரூரமான பலாத்காரத்தைப் பிரயோகித்தான்.”

மேலே கூறிய யோக்கியதை வாய்க்கப்பெற்ற கொள்ளைக் கூட்டத்தினருக்கும், சூதாடிகளுக்கும், சோர நாயகர்களுக்கும், கொலை பாதகர்களுக்கும், அக்கிரமக்காரர்களுக்கும் சர்வ தயாபரனாகிய ஏகவல்லோன் எங்ஙனம் உதவி புரிவான்? தானே குழியைத் தோண்டித் தன்னையே புதைத்துக் கொண்டவன் கதைக்கும் இச் சிலுவை யுத்தக்காரர்களின் நடத்தைகளுக்கும் என்ன வித்தியாசத்தை நாம் கற்பிக்க முடியும்?

மேற்கு ஐரோப்பாவிலும், ஜெர்மானி பிரதேசத்திலும் குளிரால் நடுங்கி உடல் நலிந்துபோயிருந்த அக் கிறிஸ்தவப் படையெடுப்பாளர்களுக்கு மத்தியதரைக் கடலின் மிருதுவான சீதோஷ்ண நிலைமை அதிகமான குஷாலையே உண்டுபண்ணி விட்டது. தமீதாவைப் பிடித்துக்கொண்ட அவர்களுக்கு அப்போதே சுவர்க்கத்துள் உயிருடனே புகுந்துவிட்டதைப் போன்ற திவ்விய உணர்ச்சி பிறந்துவிட்டது. உலகத்தில் இதைவிடப் பேரானந்தப் பெருவெளியின் பெருமை மிக்க திருப்தியுள்ள வாழ்க்கையை வேறெங்குமே பெற்றுக்கொண்டு விடமுடியாதென்று அவர்கள் உள்ளங் குளிரத் தொடங்கிவிட்டார்கள். வந்த வேலையை மறந்தார்கள். தமீதாவைப் பிடித்துக்கொண்டதுடன் தாங்கள் நாடிவந்த அத்தனை அலுவல்களும் சித்தியடைந்து விட்டதாக மனப்பால் குடித்தார்கள. அகில உலகுக்கும் தாங்களே ஏக சக்ராதிபதியாய் உயர்ந்து விட்டதாக அம்மனப்பாலைக் குடித்தார்கள். அந்நகரிலுள்ள முஸ்லிம்களையும் அவர்கள் சொத்தையும் சூறையாடியதனாலேயே எல்லா உலக முஸ்லிம்களையும் கொன்று குவித்துவிட்டுத் தரணியில் சிலுவைக் கொடியை நட்டுவிட்டதாக எண்ணிக்கொண்டு விட்டார்கள். அற்பர்களுக்கு வாழ்வு கிடைத்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்களாம்!

லூயீ மன்னருக்குத் தம்மடைய சைன்னியத்தினமீது வெறுப்புத் தோன்றாமலில்லை. அவர் போட்டுவந்த திட்டமென்ன? போப்பாண்டவரிடம் கொடுத்து வந்த வாக்கென்ன? நாடிவந்த நாட்டமென்ன? அவற்றுக்கெல்லாம் நேர்மாற்றமாக இங்கு நடப்பதென்ன? தற்காப்பில்லாமல் தனித்து நின்ற தமீதாவைமட்டும் கைப்பற்றியதனால் யாருக்கென்ன பயன்? மிஸ்ர் தேசம் முழுதையும், மத்திய கிழக்கிலுள்ள முஸ்லீம் கிலாபத் சாம்ராஜ்யத்தையும் சேர்த்துக் கிறிஸ்தவ ஆட்சிக்கு அடிமைப்படுத்துவதென்றும் ஜெரூஸலத்தை வெற்றிகொள்வதென்றும் பெருந் திட்டமிட்டுப் புறப்பட்டு வந்த அச்சிலுவை யுத்தக்காரர்கள் தமீதாவிலேயே மல்லாந்து படுத்துக்கொண்டு, பொல்லாத வாழ்க்கை நடத்துவதைக் கண்டு லூயீ மனந் துளங்கினார்.

“ஏ ஸ்ரீமான்களே! வீரர்களே! நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? எதிரிக் கோட்டையைப் பிடிப்பதற்குத் துள்ளிப் பாய்ந்து துடித்துச் சென்ற வீரனொருவன் அக் கோட்டை வாயிலை யெட்டியவுடன் அங்கேயே படுத்துக் கொண்டு குறட்டை விட்டுத் தூங்கிய கதை போலல்லவா இருக்கிறது நீங்கள் செய்கிற செய்கை! அந்த முஹம்மதிய மன்னன் சிரியா நாட்டில் வேறு ஜோலியாயிருக்கிற தக்க தருணம் பார்த்து எகிப்து தேச முழுதையுமே கைப்பற்ற வந்த நாம், கேவலம் ஒரு தமீதா கிடைத்த மாத்திரத்திலே மெய்ம்மறந்து உலக வாழ்வே உல்லாசமென்று சுகபோகத்துள் சிக்கி மூழ்கிவிடலாமா? தேவனின் பரலோக ராஜ்யத்தைப் பூமியெங்கும் பரத்தவென்று கொடி பிடித்து வந்திருக்கும் நாம் இப்படி அனாசார துஷ்கிருத்ய வியபிசார வாழ்க்கை நடத்தலாமா? நாம் நாடிப் புறப்பட்ட நாட்டம் என்ன? நீங்களெல்லாரும் இங்குப் புரிகிற பாதகங்கள் என்ன? நம் நாட்டின் பெருமைகளையும், நமது வீரத்தையும், நமது கண்ணியத்தையும் இப்படித் தலைகீழாய்க் கவிழ்த்துத் தொலைப்பதற்காகவோ நான் உங்களையெல்லாம் கூப்பிட்டுக்கொண்டு இங்குப் படையெடுத்து வந்தேன்? உங்களுடைய இந்த வரம்புகடந்த அக்கிரமங்களால் நாம் வெற்றியா பெறுவோம்? படுநாசத்துக்குப் படுகுழி தோண்டிக் கொள்கிறீர்களே! நம் ஞான பிதாவாகிய போப்பாண்டவருக்கு நாம் உறுதிமொழி கூறிவந்திருக்க, வந்த காரியத்தை முடிப்பதைவிட்டு இங்ஙனம் தமீதாவிலேயே வேரூன்றி விட்டீர்களே! புறப்படுங்கள்; புறப்படுங்கள். போவோம் காஹிரா நோக்கி.

"ஒரு பெண்பிள்ளையின் தலைமையில் நடக்கிற இந்த முஹம்மதிய ராஜ்யத்தை நிமி­ஷத்தில் பிடுங்கிக் கொள்வோம். அவளையும் சிறைபிடிப்போம். காஹிராவை நாம் பிடித்து விட்டாலே இத்தேச முழுதையும் பிடித்தவராய் விடுவோம். அப்பால் தரைமார்க்கமாக அரேபியாவுள் நுழைந்து எல்லா முஹம்மதியர்களையும் கொன்று தீர்ப்போம். முஹம்மதிய மார்க்கம் தோன்றிய நாட்களாக நம்முடைய முன்னோர்கள் அந்த அஞ்ஞானிகளிடம் படாத பாடெல்லாம் பட்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் பழிவாங்க வேண்டிய இச் சிறந்த சந்தர்ப்பத்தைக் கைந்நழுவ விடாதீர்கள். உறக்கத்திலிருந்து விழியுங்கள். காலந் தாழ்த்துவதில் பயனில்லை. நாம் வீணே செலவிடுகிற ஒவ்வொரு வினாடியிலும் நம் எதிரிகள் எவ்வளவோ உஷாராகி விடுவார்கள். நாம் தமீதாவைக் குபீரென்று பாய்ந்து கைப்பற்றியதுடன் நம் வேலை முற்றுப் பெற்றுவிடவில்லை; இப்பொழுதுதான் நம் திட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. ஏ, பாடுபட்ட சொரூபத்துக்காகக் கொடி தாங்கி வந்திருக்கும் தோழர்களே! அநியாயம் பண்ணாதீர்கள்; அக்ரமம் புரியாதீர்கள். போப்பாண்டவருக்கும் தேவனுக்கும் மாசு விளைக்காதீர்கள். எழுங்கள்; புறப்படுங்கள். என் பொறுமையை மேலும் சோதிக்காதீர்கள். வந்த காரியத்தைக் குந்தகப் படுத்தாதீர்கள்!” என்று பலமுறை லூயீ தம் படையினர்க்கு எச்சரிக்கை விட்டு, நயமாகவும் பயமாகவும் கேட்டுப் பார்த்தார். இவ்வுலக வாழ்க்கையே இனிய சுவர்க்க போக மென்று இறுமாந்து மெய்ம்மறந்திருந்த அப்படையினர் காதில் எதுவுமே ஏறவில்லை. அவர்கள் தங்கள் இழிய மிருக வாழ்க்கையை மேலும் பெருக்கிக்கொள்ளத் தலைப்பட்டனரேயன்றி, படையயடுப்பைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை.

“நமக்காகச் சிலுவையிலேறி இரத்தம் சிந்திய தேவ குமாரன் மீது ஆணையாக! ஏ, துரதிருஷ்டம் பிடித்தவர்களே! நிங்களெல்லீரும் இனி எதிர்காலமெல்லாம் அந்தப் பரம விரோதிகளாகிய முஹம்மதியர்களுக்கு நிரந்தர அடிமைகளாக இருப்பதற்காகவே என் பேச்சைக் கேட்க மறுக்கிறீர்கள் போலும்! நம் பரிசுத்த ஆலயத்துக்கும், நம் பரிசுத்த மதத்திற்கும், நம் பரிசுத்த வேதத்துக்கும் இந்த அஞ்ஞானிகள் இதுவரை இழைத்திருக்கிற பாதகங்கள் உங்கள் உதிரத்தைக் கொதிக்கச் செய்யவில்லையா? பழிவாங்க வந்த நீங்கள் இப்படிப் படுத்துக் கொண்டது நேர்மையாகுமா? உங்கள் சொந்தக் கையாலேயே நம் சிலுவைக்கு ஊறு விளைக்கிற உங்களைத் தேவன் காப்பாற்றுவாரா? உங்கள் முன்னோர்கள் இதேமாதிரி இழைத்த கெடுமதியால் தானே இதுவரை ஏழுமுறை சிலுவை யுத்தங்களில் அடியோடு நாசமாகி வந்தார்கள்? அத்தகைய கேடுகாலத்தையே நீங்கள் வலிய வரவேற்றுக் கொள்கிறீர்கள்! போராடவென்று கவசந்தரித்த நீங்கள் இங்கு வந்தவுடன் சூதாடத் தொடங்கி விட்டீர்களே! மதாவேசங் கொண்டு மார்தட்டி எழுந்து வந்த நீங்கள் காமா வேசங்கொண்டு கட்டிப் புரள ஆரம்பித்து விட்டீர்களே! சிலுவை மதத்தைப் பரத்த வந்த நீங்கள் அச் சிலுவையையே முறிக்கிறீர்களே! உங்களுக்கு ஞானமில்லையா? அறிவில்லையா? ரோஷமில்லையா? வீரமில்லையா? வெட்கமில்லையா?

"என் பேச்சைக் கேட்டு நடப்பதாக நம் நாட்டிலே வாக்களித்த உங்கள் நெஞ்சம் இப்போது ஏன் இப்படித் துரோகச் செயல்புரிகிறது? என்னை இந்த மாதிரியான அவமானத்துக்கெல்லாம் ஆளாக்கிக்கொள்ள நாடியா நான் உங்களையெல்லாம் இப்புனித யுத்தம் புரிய இங்கு அழைத்து வந்தேன்? உங்களையெல்லாம் கண்டு நான் அவமானமடைகிறேனே! எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு இனி நான் போப் பாண்டவர் முகத்தில் விழிப்பேன்? இப்போதாவது நம் மானத்தைக் காப்பாற்ற, நான் உபதேசிக்கிற மொழிகளைக் கேட்க மாட்டீர்களா? நிங்கள் இதுவரை புரிந்த தீமைகள் ஒழியட்டும். இனியாவது புறப்படுங்கள். நீங்கள் இத்தனை நாட்களாக இங்கே படுத்து உறங்கிக்கொண்டிருப்பதற்குள் அந்த சுல்தான் காஹிராவுக்குத் திரும்பி வந்து விட்டானாம். இருந்தாலும், ஒன்றும் மிஞ்சி விடவில்லை. உங்கள் உடலுக்குள் வீர ரத்தம் ஓடுவதாயிருப்பின், இயேசு கிறிஸ்துநாதரை நீங்கள் நிஜமாக விசுவாசிப்பதாயிருப்பின், இக்கணமே எழுங்கள். நம் மதபக்தியால் பெற்றுள்ள மாபெரும் சக்தியை நேருக்கு நேரே அம் முஹம்மதியர்களுக்குக் காட்டிவிட்டு வருவோம்!”

தமீதாவைக் கைப்பற்றிய முதல் மாத இறுதியில் லூயீ புரிந்த இறுதி உபதேசம் இது. நாம் முன்னம் குறிப்பிட்ட ஆண்டவனின் மாயா சக்தி அக்கிறிஸ்தவர்களின் கண்களுக்கு மட்டும் திரையிட்டு முத்திரையிட்டிருக்கவில்லை. இப்பால் அம்முத்திரை அவர்களுடைய செவிக்குள் இறங்கி விட்டிருந்தபடியால், முனிவர் லூயீ கூறிய அத்தனை ரோஷமூட்டும் சொற்களும் பாலைவனத்தில் பெய்த பெருமழையாகப் போய் முடிந்தன.

இவ்விதமாக, தலைவர் உபதேசத்தைக் கேட்காத அறிவிலிகளைக் கண்டு அத்தலைவரான லூயீ மனம் புழுங்கினார். சேனா வீரர்களோ, தாங்கள் பூவுலகில் அனுபவிக்கிற அத்தனை சுகபோக பாக்கியங்களையும் தட்டி விடுகிற இழிகுணமுள்ள ஒருவரைத் தலைவராகக் கொண்டுவர நேர்ந்ததையுன்னி வருந்தினார்கள். லூயீக்குத் தம் திட்டம் நிறைவேறவில்லையே என்ற கவலை; அவரின் கீழிருந்தோருக்கோ, தாங்கள் இன்னம் அதிகம் அனுபவிக்க முடியாதபடி இப்பாவி தடுத்துத் தொலைக்கிறானே என்ற ஏக்கம். இவ்விதமாக, அச்சிலுவை யுத்தம் புரிய வந்த யோக்கியர்களின் பொழுது தமீதாவிலே கழிந்துவந்தது.

“பரலோக ராஜ்யமாம், பரலோக ராஜ்யம்! நாம் இப்போதுதான் அந்தப் பரலோக ராஜ்யத்துக்கும் மேலான சுவர்க்கலோக ஆனந்தத்தை அனுபவித்து வருகிறோமே! லூயீக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது! சீதள பூமியைத் துறந்து, பூமத்திய ரேகைக்குப் பக்கத்திலுள்ள நாட்டுக்கு நாம் வந்திருப்பதால், வெயிலின் வெப்பம் தாங்க மாட்டால் அவருடைய மூளை உருகிக் கொண்டு போகிறது!”என்று சிலர் பேசிக்கொண்டனர்.

“முஹம்மதிய ராஜ்யம் முழுதிலும் இருக்கிற அத்தனை இன்ப சுகங்களையும் தேவன் ஒன்றாய்த் திரட்டி இந்த ஒரு நகரிலே வைத்து நமக்கு ஊட்டி வரும்பொழுது, வேலையற்றுப் போய் ஊரூராய்த் திரிந்து உயிரைத் தியாகம் செய்யவேண்டுமாம்! நாம் புத்திகெட்டுப் போய் இந்த லூயீயை நம் தலைவராகக்கொண்டு வந்தோம். அது கிடக்கிறது! நாம் இன்னும் இவ்வூரிலேயே அனுபவிக்க வேண்டிய அப்ஸரஸ்கள் ஆயிரக்கணக்கில் பாக்கி இருக்கிறார்களே” என்று வேறு சிலர் சமாதானப்படுத்திக் கொண்டனர்.

“கானான் மணத்தில் நீரைத் தேனாய்த் தேக்கிய தேவத்துவன் திருவருளால் நமக்கு எல்லா இலாபமும் கிடைத்து விட்டன. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து! இந்த உருப்படாத லூயீயின் உபதேசத்தைக் கேட்டுக் காஹிரா மீது பாய்ந்தால், சென்ற ஆறாவது சிலுவை யுத்தத்தின் இறுதியில் நம்முன்னோர்கள் நீலநதியின் வெள்ளத்தில் மாண்டார்களே, அதே கதிதான் நமக்கு வாய்க்கும்!” என்று வேதாந்தம் ஓதினர் மற்றும் சிலர்.

எல்லோரையும் சேர்த்து வைத்து உபதேசித்தால் கேட்க மாட்டோமென்கிறார்களே என்று மனங் கலங்கிய லூயீ தனித்தனியாகப் பலரைச் சந்தித்துப் பேசி, தாங்கள் நாடி வந்த காரியத்தை நினைப்பூட்டி ஊக்கி விட்டார். அப்படியும் அவர்கள் கேட்கவில்லை. இறுதியாக, தேவன் விட்ட வழியே நடக்கட்டுமென்று வாளா இருந்துவிட்டார் லூயீ மன்னர். இன்னம் சற்று அதிகமாக ஏதும் உபதேசித்தால், தம் உயிருக்கே அவர்கள் உலைவைத்து விடக் கூடுமோவென்று அவர் ஐயுற்றார்; அஞ்சினார்.

எட்டாவது சிலுவை யுத்தம் புரிதற்கென்று மார்தட்டிக் கொண்டு வந்த லூயீ மன்னரும் அவர்தம் படைகளும் தமீதாவை விட்டு அப்பால் இப்பால் அசையவே இல்லை!

தொடரும்...

-N. B. அப்துல் ஜப்பார்
நன்றி : http://www.darulislamfamily.com/family/

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வல்லோனின் ஆற்றல் கொண்டு.
அவன் நாட்டப்படியே நிகழ்ந்திட்ட
வரலாற்றுச் சம்பவங்களை மிகுந்த
சுவைமிகு நடையில் படித்து மகிழ்ந்தேன்.

அடுத்த பகுதி எப்போது?

LinkWithin

Related Posts with Thumbnails