Wednesday, February 24, 2016

ஞானப் பயணம் - 03

WRITTEN BY நூருத்தீன்.
போய் படி என்று சொன்னதும் புகழ்பெற்ற பல்கலைக் கழகமொன்றில் விண்ணப்பித்து, விரும்பிய பாடமொன்றைத் தேர்ந்தெடுத்துச் சேர்வது சாத்தியப்படாத காலம் அது. தேட வேண்டும். ஆங்காங்கே பரவியிருந்த தாபியீன்கள், அறிஞர்கள் ஆகியோரை

முதலில் இனங்காண வேண்டும். அப்படியானவர்கள் வாயிலாகத்தான் கல்வியில் ஞானம் பெற முடியும்.  அடிப்படையிலிருந்து தொடங்கி தெளிவான கல்வியைக் கற்க முடியும்.  கல்வி, ஞானம் என்ற பெயரில் மற்றவர்களிடம் நிறைந்திருந்தவை வாதங்களும் மெய்ஞானத்திற்கு எதிரான முரண்களும்தான் என்பதை உணர்ந்தார் அபூஹனீஃபா (ரஹ்).



அக்கால கட்டத்தில் கல்வியில் மூழ்கியிருந்தவர்கள் மூன்று முக்கியப் பிரிவுகளில் தனித்தனிக் குழுக்களாக கவனம் செலுத்தி வந்தனர். ஒரு குழு இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை விவாதித்து வந்தது. இரண்டாவது குழு முஹம்மது நபிமொழிகளை மனனம் செய்வதும் கற்பதுமாக இருந்தது. மூன்றாவது, குர்ஆனிலிருந்தும் நபியவர்களின் வழிமுறையான சுன்னாஹ்விலிருந்தும் ஃபிக்ஹு எனப்படும் மார்க்கச் சட்டங்களைப் பெற்று, நிகழ்வுகளுக்கேற்ப மார்க்கத் தீர்ப்பு வழங்கி வந்தது.

மார்க்கக் கல்வி பயில வேண்டும் என்று மட்டும் அபூஹனீஃபாவின் மனத்தில் முடிவு ஏற்பட்டுவிட்டதே தவிர, அதில் எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது, எது சிறப்பானது என்பதில் தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை. ஞானப் பாதையை நோக்கிய அவரது பயணத்தை பிற்காலத்தில் அவரே தெரிவித்திருக்கிறார். அவரது மனஓட்டத்தையும் அனுபவத்தையும் அது நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது.

தம்மைச் சுற்றியும் பார்த்தார். ‘கலாம்’தான் சிறப்பு என்று அவருக்குத் தோன்றியது. அதில் மூழ்கத் தொடங்கினார். இதரக் குழுக்களுடன் வாக்குவாதம் புரிவது, மல்லுக்கட்டி நிற்பது போன்றவையே அதில் முக்கியப் பணியாக இருந்தது. இதற்காகவே பலமுறை பஸ்ரா நகருக்குச் சென்று தங்கியிருந்து, அங்கிருந்த காரிஜீக்கள், இபாதீக்கள் போன்றோருடன் பெரும் வாக்குவாதம் புரிந்தார். பிறகுதான் ஒருகட்டத்தில் இது சரியே இல்லை என்பது அவருக்குப் புரிந்தது.

குர்ஆன் இறைவனால் உருவாக்கப்பட்டது என்று கருதிக்கொண்டு  வாக்குவாதத்திலும் விவாதப் போரிலும் ஈடுபட்டிருந்த கலாம் கொள்கையாளர்களை ஊன்றிக் கவனித்தார்.

‘நமக்கு முன் வாழ்ந்து மறைந்த மேன்மையாளர்கள், இறை நம்பிக்கையாளர்களின் வழிமுறை இதுவாக இருந்ததில்லையே. வாக்குவாதம் புரியும் இவர்களின் இதயம் இறுகிப்போய், தோல் தடிமனாகி விடுகிறது. விவாதம் என்ற பெயரில் அல்லாஹ்வின் அருள்மறையுடனும் நபியவர்களின் சுன்னாஹ்வுடனம் ஸலஃபுகளின் வழிமுறையுடனும் தாங்கள் மோத நேரிடுவதைக் குறித்து இவர்கள் வருந்துவதில்லை. இவர்களிடம் மதி நுட்பமும் இல்லை; இறையச்சமும் இல்லை.’

‘நபியவர்களின் தோழர்களும் சரி, தாபியீன்களும் சரி, மெய் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் அவர்கள் எவ்வளவு மேம்பட்டவர்கள்! அவர்களெல்லாம் வாக்குவாதங்களிலா திளைத்திருந்தார்கள்? இல்லையே! இன்னும் சொல்லப்போனால் அவற்றைத் தவிர்த்துக்கொண்டார்கள்; தடுத்து எச்சரித்திருக்கிறார்கள். அவர்கள் கற்றதும் கற்பித்ததும் வேறு எனும்போது நான் மட்டும் ஏன் இதில் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறேன்?’ என்றவாரெல்லாம் அவரது சிந்தனை ஓடியது. முடிவு? அந்தத் துறையிலிருந்து கழன்று வெளியே வந்தார் அபூஹனீஃபா (ரஹ்).

இலக்கியம், இலக்கணம் சார்ந்த துறை சிறப்பானதாக இருக்கும் போலிருக்கிறதே என்று அடுத்து அதில் அவரது கவனம் குவிந்தது. அதுவும் நெடு நாள் நீடிக்கவில்லை. சில காலம்தான். ‘இத் துறையில் அடையும் முதிர்ச்சி எதில் போய் முடியும்? சுற்றிலும் பிள்ளைகளை அமர வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பாடம் நடத்தலாம். அதைத் தாண்டி என்ன நடந்துவிடப் போகிறது?’ என்று யோசித்தார். ம்ஹும்! நமக்கு இது சரிப்படாது என்று அதிலிருந்தும் வெளியே வந்துவிட்டார்.

அடுத்து அவரது மனம் கவிதையை நோக்கிப் பாய்ந்திருக்கிறது. அத் துறையில் புகுந்து ஆராய்ந்து பார்த்தால் புகழுரையும் வசைப்பாடலும் பொய்களுமாகக் கலந்து கட்டி அவை மார்க்கத்தையே கிழித்துக் கொண்டிருந்தன.

குர்ஆனை அழகிய குரலில் ஓதும் காரியாகவே இருந்து விடுவோம் என்றால் அதிலும் அவரது மனம் திருப்தியுற மறுத்தது. நபியவர்களின் ஹதீஸ்களைச் சேகரிப்போம் என்றால் அதைக் கற்று, சேகரித்து அக்கலையில் மக்களுக்குப் பயன்படுபவராக மாறுவதற்கு நமது ஆயுளே போதாது போலிருக்கிறதே என்று தோன்றிவிட்டது.

இறுதியாக, மார்க்கச் சட்டத்தை நோக்கி அவரது மனம் நகர்ந்து, அதன் நுணுக்கங்களை அறியத் தொடங்கியபோதுதான் அவருக்குப் பளிச்செனத் தோன்றியது. ‘இது! இதுதான் எனக்குச் சரி!’

அலை கடலில் அங்கும் இங்கும் தத்தளிக்கும் கலம் தகுந்த கரையை அடைந்ததும் நிதானமடைவதைப் போல் மார்க்கச் சட்டக் கலையைக் கண்டதும் அவரது மனம் அதில் நங்கூரம் இட்டது.

அறிவுத் தாகம் மிகுந்த மக்கள் மார்க்கச் சட்டங்களில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் கவனித்தார் அபூஹனீஃபா. அறிஞர்களுடனும் மார்க்க வல்லுநர்களுடனும் தேர்ந்த ஆசிரியர்களுடனும் அமர, அவர்களிடம் கற்க, தம்மைத் தாமே சீராக்கிக்கொள்ள அதுவே உதவும்; அதை அறிவதன் மூலமே மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியும்; இறை வழிபாடுகளைச் சரியான முறையில் நிலைநிறுத்த முடியும் என்று அவருக்கு உறுதியானது. மார்க்கச் சட்டங்களின்படி அமைந்த இறை வழிபாடே மறுமைக்குச் சிறந்த வழி என்று புரிந்தது.

அவரது இந்தக் கருத்துக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது ஒரு நிகழ்வு. ஹம்மாத் பின் அபீசுலைமான் என்றொரு மார்க்க அறிஞர். அவர் தம்முடைய மாணவர்களுடன் அமர்ந்திருந்தார். அவரது குழுவுக்கு அருகில் மற்றொரு குழுவுடன் அமர்ந்திருந்தார் அபூஹனீஃபா. அப்பொழுது ஒரு பெண்மணி அபூஹனீஃபா அமர்ந்திருந்த குழுவிடம் வந்து, மணவிலக்குத் தொடர்பான ஒரு பிரச்சினைக்கு மார்க்க விளக்கம் கேட்டார். அபூஹனீஃபா அந்தப் பெண்மணியிடம், “ஹம்மாத் அங்கு அமர்ந்திருக்கிறார். அவரிடம் சென்று கேளுங்கள். அவர் என்ன பதில் சொல்கிறார் என்று எனக்கும் தெரிவியுங்கள்” எனக்கூறி அனுப்பிவைத்தார்.

அப்பெண்மணி ஹம்மாத்  பின் அபீசுலைமானிடம் சென்றார்; விளக்கம் கேட்டார். ஹம்மாத் அதற்குப் பதில் அளிக்க, தெளிவு பெற்றார். வந்து அபூஹனீஃபாவிடம்  ஹம்மாத் உரைத்த விளக்கத்தைத் தெரிவித்துவிட்டுப் போய்விட்டார்.

அவ்வளவுதான். எழுந்தார் அபூஹனீஃபா. தமது காலணியை அணிந்துகொண்டார். ஹம்மாத் பின் அபீசுலைமானின் குழுவில் சென்று ஐக்கியமானார். தொடங்கியது ஃபிக்கை நோக்கி அபூஹனீஃபாவின் (ரஹ்) அவர்களின் பயணம்.

எடுத்த பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுக்க மூழ்குவது அபூஹனீஃபாவின் இயல்பு. வாக்குவாதம் புரிவதில் எப்படி கச்சைக் கட்டிக்கொண்டு இயங்கினாரோ அதைப்போல் மார்க்கச் சட்டக் கலையில் அவரது கவனம் முழுக்க வேரூன்றியது. கூஃபா நகரம் மார்க்க அறிஞர்களின் வாசஸ்தலமாக இருந்த காலம் அது. மார்க்கச் சட்டத் துறையில் புழங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் அங்கு நிறைந்திருந்ததால் அவர்களுடன் அமர்வதும் பயில்வதும் உரையாடுவதும் அவருக்கு எளிதாகிப் போனது.

இது தவிர மற்றொன்றும் வாய்த்தது. அதிகமதிகம் ஹஜ் பயணம் மேற்கொண்டவர் அபூஹனீஃபா. அச்சமயங்களில் மக்காவிலும் மதீனாவிலும் தாம் சந்திக்கும் மார்க்க அறிஞர்களிடமும் தாபியீன்களிடமும் ஹதீஸ்களைக் கற்பதும் மார்க்கச் சட்டங்களை விவாதிப்பதும் அவர்களுடைய கல்வி முறையைப் பயில்வதுமாக அந்தப் பயணங்களையும் தம்முடைய ஞானத் தேடலுக்கான வாய்ப்பாக ஆக்கிக் கொண்டார்.

கூஃபா நகரிலும் மக்கா, மதீனாவிலும் மார்க்கச் சட்டப் பாடவகை பலவாறாகக் குவிந்திருந்தது. அவற்றுள் முக்கிய நான்கு வகையான மார்க்கச் சட்டக் கலையைத் தெளிவாக அறிந்துகொள்வது அபூஹனீஃபாவின் இலக்காயிற்று. முதலாவது உமர் (ரலி) அவர்களின் ஃபிக்ஹ். இதை இப்னு உமரின் சேவகராக இருந்த நாஃபீ என்பவரிடமிருந்து பயின்றிருக்கிறார். இரண்டாவது அலீ (ரலி) அவர்களின் ஃபிக்ஹ். மூன்றாவது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஃபிக்ஹ். நான்காவது இப்னு அப்பாஸ் அவர்களின் குர்ஆன் ஞானம். இதை அதா பின் அபீரபீஆ என்பவரிடம் மக்காவில் பயின்றிருக்கிறார்.

அதற்குச் சான்றாக அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். “உமர் (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம், அலீ (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம் ஆகியவற்றை அவர்களுடைய தோழர்களிடமிருந்து நான் கற்றுள்ளேன்.”

இவை தவிர, நபியவர்களின் வழித்தோன்றல்களில் ஸைது இப்னு அலீ, முஹம்மது அல்-பாகிர், அப்துல்லாஹ் இப்னுல் ஹஸன் ஆகியோரிடமும் பயின்றிருக்கிறார். ஸைது இப்னு அலீயின் விரிவான ஞானத்தைப் புகழ்ந்து, “நான் ஸைது இப்னு அலீயையும் அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் சந்தித்திருக்கிறேன். அவரது காலத்தைச் சேர்ந்த அறிஞர்களில் ஸைது இப்னு அலீயைவிட மேன்மையானவரை நான் கண்டதில்லை. ஐயங்களுக்கான பதில்களை அவரைப் போல் யாரும் உடனடியாக அறிந்திருந்ததில்லை. அவரைப் போல் வேறெவரும் தெளிவான விளக்கம் அளித்ததில்லை. அவருக்கு இணையானவர் இருந்ததில்லை” என்று கூறிருக்கிறார்.

இப்படியாகப் பல அறிஞர்களிடம் பயின்றாலும் அவருக்கு முதன்மையான ஆசிரியராக ஹம்மாத் இப்னு அபீஸுலைமான் இருந்தார். கற்றார், பயன்றார் என்றதும் மூன்று ஆண்டுகள் இளங்கலைப் பட்டம், அடுத்து இரண்டு ஆண்டுகள் முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம் என்பது போலன்றி அபூஹனீஃபா அவர்களின் வாழ்நாளின் பெரும்பகுதி கல்வியிலேயே கழிந்தது. பதினெட்டு ஆண்டுகள் ஹம்மாதிடம் நெருக்கமாக இணைந்திருந்து கற்றிருக்கிறார்.

(தொடரும்)

- நூருத்தீன்

சமரசம் பத்திரிகையில் டிசம்பர் 16-31, 2015 இதழில் வெளியானது
http://darulislamfamily.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails