Tuesday, February 9, 2016

மெளலானா அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ,பி.டி.ஹெச்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய வாழ்க்கைச் சரிதத்தோடு ஒட்டித் திருக்குர்ஆனில் புதைந்துள்ள பல கருத்துக்களையும் அக்கருத்துகளின் விளக்கம் போன்ற சரிதங்களையும் தமது நூலான "தித்திக்கும் திருமறை"யை இப் பாருலகுக்கு அளித்தவர் தான் மெளலானா அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ,பி.டி.ஹெச். அவர்கள்.

கல்வியின் பெருமையை ஓர் அறிஞனின் பேனாவில் உள்ள துளி மை, வீரமரணம் எய்தியவனுடைய இரத்தத்தை விடத் தூய்மையானது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.



திருக்குர்ஆன் பூவுலகில் இறங்குவதற்குக் காரணமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்பண்புகள் இருந்தன. மிருதுவான சுபாவம், புன்முருவல் பூத்த முகம், இரக்க சித்தம், இரைந்தே பேசாத குணம், தீய சொல் கூறாமை ஆகியவை அவர்களின் இயல்பான குணங்கள் என்று அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எடுத்துக்கூறியுள்ளார்கள்.

இந்த நாளில் இறைவனின் பெயரைப் பற்றியும் அதை ஓதி உய்த்துணர்வதில் உள்ள இன்பத்தைப் பற்றியும் இறைவனின் கட்டளைப்படி நடந்து உயர்ந்தவர்களின் விவரங்களுடன் இறைவனுக்கு விரோதமாக நடந்து கொண்டவர்கள் அழிந்த விதத்தையும் எழுதுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் கடைசி வரை குறையாமல் இருப்பதை இந்தத் தித்திக்கும் திருமறையின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் காண்கிறோம்.

செங்கோட்டையில் 29.05.1920 ஆம் ஆண்டு பிறந்த மெளலானா அப்துல் வஹ்ஹாப் திருவனந்தபுரம் சயன்ஸ் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து, சென்னையில் அந்த நாள் முஸ்லிம் கல்லூரியில் பி.ஏ. (இஸ்லாமிய வரலாறு, பொருளாதாரம், அரசியல்) முடித்துப் பின்னர் அரபி மொழியிலும், சமயத் துறையிலும் பயின்று பட்டம் பெறுவதற்காக அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து யாரும் பெறாத எம்.ஏ., பி.டி.ஹெச். பட்டங்கள் பெற்றவர். பேச்சுத்துறையில் ஆர்வம் கொண்ட இவருடைய சமயப் பிரசங்கங்களை வடக்கே மும்பையிலிருந்து தெற்கே இலங்கை வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் கேட்டு ரசித்துள்ளார்கள்.

அரபி, மலையாளம், ஆங்கிலம், உர்தூ, தமிழ் கற்றுணர்ந்த பன்மொழிச் செல்வர். இவர் எழுதிய திருக்குர்ஆன் பொன்மொழிகள் (1955), நன்மணிகள் நால்வர் (1959), சுவர்க்கத்துக் கவிஞன் (1960) ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. எம்.ஏ., துராப், பாரூக், ஸித்திக், கொடை, முபீன், பிலால் போன்ற பல புனைப் பெயர்களில் பல சிறு கதைகளையும், கட்டுரைகளையும், வாழ்க்கை அனுபவத் துணுக்குகளையும், புத்தக விமர்சனங்களையும் எழுதி வந்தார் அறிஞர் அப்துல் வஹாப் சாஹிப். இவருடைய பொழுதுபோக்கு புத்தகங்கள் படித்தல், நண்பர்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளல், நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதுதல் ஆகியவை ஆகும்.

உங்களுடைய இந்த சமய விளக்க நூல் ஒரு புது முயற்சி என்று எந்த விதத்தில் கூறலாம் என்று கேட்டபோது, இன்றைய அணுசக்தி, இயந்திர உலகம் அசுர வேகத்தில் சுழல்கிறது. ஓய்வில்லாமல் மனிதனும் அவற்றுடன் இயங்க வேண்டியவனாகிறான். மனித உள்ளத்தில் ஏற்பட்டு வரும் சலனத்தின் மூலம் சமயக் கோட்பாடுகளும் அவற்றின் பாற்பட்ட ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை, பிறர் நலம் பேணல், நேர்மை, உண்மை போன்ற நற்குணங்களும் தேய்ந்த கனவாய் – பழங்கதையாய் மாறி வருகின்றன. இப்போக்கு சரியில்லை. எனவே சமயக் கோட்பாடுகளை இன்றைய மக்கள் நன்கறிந்து பின்பற்ற தற்கால எழுத்து உத்தி முறைகளைக் கடைப்பிடித்துச் சுவையான, புதுமையான ஒரு விளக்கம் தர வேண்டும் என்பது எனது நெடு நாளைய விருப்பமாகும் என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

நீங்கள் தாம் உருவ வழிபாட்டை எதிர்ப்பவர்கள் ஆயிற்றே! அல்லாஹ்வின் முகம் (வஜ்ஹு ரப்பி) அல்லாஹ்வின் கரம் என்றும், அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடங்கள் (5:8) என்றெல்லாம் வருகிறதே பொருள் என்ன? என்று கேட்டபோது, என் நண்பன் எனக்கு ஆபத்தில் கைகொடுத்தான். அக்காட்சியைக் கண்டதும் அவன் முகம் கறுத்தது. என்று கூறும்போது, ஆபத்தில் உதவினான், மகிழ்ச்சி தரவில்லை என்ற பொருளில் தானே பயன்படுத்துகிறோம். அல்லாஹ்வின் கரம் என்பது அவனுடைய அருள், ஆதரவு என்ற பொருளில் தான் வழங்குகிறது என்ற அறிவார்ந்த முறையில் கூறினார்கள். எத்தனை எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது இந்த உயர்ந்த விளக்கம்! இதே போன்று தெளிவான சிந்தனை இந்த நூல் முழுவதும் விரவிக்கிடப்பதைப் படிப்பவர்கள் உணர்வார்கள் என்று மகரம் சொன்னது போற்றுதற்குரியதாகும்.

அவரது இஸ்லாமிய இலக்கியத் திங்கள் இதழ் மணிவிளக்கு இதழுக்கு ஒப்பாக பல ஆண்டுகள் வெளிவந்தது. துவக்கத்தில் அப்துஸ் ஸமது ஸாஹிப் நடத்திய மணிவிளக்கிலும் பொறுப்பு வகித்து எழுதி வந்தார். மாநபியின் மகளார் அன்னை ஃபாத்திமா என்ற அரிய நூலையும் எழுதி வெளியிட்டார். இவரின் பெற்றோர்கள் முஹம்மது இஸ்மாயீல் – மரியம் பீவி ஆவார்கள். இவர்களுக்கு அப்துல் வஹாப், சாராள் பீவி என்ற இரண்டு குழந்தைகள். இவர் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் போன்ற பிற இதழ்களிலும் எழுதி வந்தார். தபால் தந்தித் துறையில் கணக்காய்வாளராகப் பணியேற்று 36 ஆண்டுகளாகச் சேவை செய்தார். 1978 இல் ஓய்வு பெற்றார்.

பல ஆண்டுகளாக தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார். இந்திய நூலாசிரியர் சங்கத்தில் இருமுறை துணைத் தலைவராகவும் மாநில வக்ஃபு வாரியத்தில் உறுப்பினராகவும் திகழ்ந்தார். தத்துவ-மத இயல் நூல்களில் சிறந்ததாகத் தித்திக்கும் திருமறை தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசின் சிறப்பு விருதுகளைப் பெற்றார். சென்னை வானொலி நிலையம் வஹாப் சாஹிப் பேச்சாற்றலை அறிந்து ஒரு மணி நேரம் பேச வாய்ப்பைத் தொடர்ந்து அளித்து வந்தது.

குமுதம் இதழில் தாஜ்மஹாலைப் பற்றிய ஒரு தொடர் கட்டுரையில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டபோது தாஜ்மஹால் ஷாஜஹான் கட்டியதுதான் என்று ஆணித்தரமாக தொடர் கட்டுரை எழுதி முறியடித்தார். அவர் பண்பாட்டுப் பயணமாக சிங்கப்பூர், மலேசியா, இலங்கை அரபு நாடுகளுக்குச் சென்று வந்தார்.

திருக்குர்ஆனுக்கு அவர் எழுதிய தர்ஜமா உரையும் (தமிழில்) நானூறுக்கு மேற்பட்ட விளக்கக் குறிப்புகளும் சிறப்புக்குரியனவாகும். இத்தகைய சிறப்புக்குரிய பெருந்தகை 26.12.2002 ஆம் நாள் இறையடி சேர்ந்து விட்டார். கண்ணீர் வடிக்காத கண்களே இல்லை. வேதனைப்படாத நெஞ்சங்களே இல்லை. செயல்களுள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது அவற்றை (நன்மையை)த் தொடர்ந்து நிலையாகச் செய்வதே என்ற நபி மொழிப்படி வாழ்ந்து காட்டிய அறிஞர் பெருந்தகை மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் ஆவார்.

நன்றி : இனிய திசைகள் ஏப்ரல் 2013
http://www.nidur.info

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அறிஞர் அப்துல் வஹாப் சாஹிப் பற்றிய பல விவரங்களைத் தெரிந்துகொண்டேன்.

//அவரது இஸ்லாமிய இலக்கியத் திங்கள் இதழ் மணிவிளக்கு இதழுக்கு ஒப்பாக பல ஆண்டுகள் வெளிவந்தது.//

"அவரது 'பிறை' என்கிற இஸ்லாமிய இலக்கியத் திங்கள் இதழ் மணிவிளக்கு இதழுக்கு ஒப்பாக பல ஆண்டுகள் வெளிவந்தது."

LinkWithin

Related Posts with Thumbnails