Saturday, February 27, 2016

'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு - என் பார்வை

முன்பெல்லாம் பரிசளிக்கும் சூழல் வரும்போதெல்லாம் ஆயிரத் தெட்டு குழப்பங்கள்  நிலவும். கடிகாரம் வாங்கி கொடுப்போமா, பூ ஜாடி வாங்கி கொடுப்போமா என்றெல்லாம் விழி பிதுங்கும்வரை   மனதோடு பட்டிமன்றம் நிகழ்த்தியதுண்டு. புத்தகங்களோடு நட்புறவு பலமான பின், எந்த விசேஷ தருணமென்றாலும் பரிசுக்கு முதலும் இறுதியுமான முடிவு 'புத்தகம் தான் டாட்' என்ற நிலைக்கு மாறியது.

இதிலும் ஓர் குறை இருந்துவந்தது. இந்திய முஸ்லிம்கள் குறித்து திரிக்கப்பட்ட வரலாறுகளையே படித்து பதிந்து பழக்கப்பட்ட மனம் கொண்டோர்க்கு, அதை தகர்த்தெறியாவிடினும்,  ஓரளவுக்கேனும் உண்மையை புரிந்துகொள்ள ஏதுவான  வரலாற்று புத்தகங்களை பரிசளிக்கவோ பரிந்துரைக்கவோ நிறைவான புத்தகம் + நம்பகமான புத்தகம் பரிசளிப்பதற்காக, தேடுவதில் அதிகமே மெனக்கெட்டதுண்டு. "ஏன் இஸ்லாமியர்கள்  வரலாற்றுப் பகுதியில் கவனம் செலுத்துவதில்லை என்ற நெடுங்கால குறையை செ.திவான் தீர்த்து வைத்ததில் ஓரளவு திருப்தியிருந்தது. இதோ அதே வரிசையில்  அதிரைநிருபர் தளத்தில் தொடராக வெளிவந்து சென்னை சாஜித புக் செண்டர் பதிப்பகத்தாரின் வெளியீடாக என் கைக்கு வந்து சேர்ந்தது அந்த பொக்கிஷம் "மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு".



ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிரைநிரூபர் தளத்தில் வாசித்திருந்ததால் ஓரளவு பரிட்சயமிருந்தது. நூல் வடிவில் கொண்டு வரப்போவதாக ஒருவருடம் முன்பு தகவல் வந்த போதே அத்தளத்தின் நிர்வாகியிடம் ஓர் கோரிக்கை வைத்தேன் "தயவு செய்து கனமான அட்டை போட்டு புத்தகம் வெளியிடுங்கள். ஏனெனில் அவையெல்லாம் அடிக்கடி பார்க்கும் சூழலை உருவாக்கும் புத்தகம்" என்றேன். வெளியீட்டு விழா நிகழ்ச்சி  பற்றி சொன்ன போது நான் கேட்ட முதல் கேள்வியும் அதுவேதான். சின்ன ஏமாற்றம் எனினும் ஹைர்..!

அழகான வடிவமைப்புடன் கூடிய புத்தகத்தில் இரு பிரதிகள் என் கைக்கு சேர்ந்ததுமே அதில் ஒரு பிரதியை  நான் எடுத்துக்கொண்டு இன்னொரு பிரதியை   தெரிந்த பிறமத நண்பர் ஒருவருக்கு பரிசளித்துவிட்டு தான் வாசிக்கத் தொடங்கினேன். நன்கு தெரியும், என்  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் புத்தகம் என்றபடியால் வாசிக்காமலேயே, பரிசளித்தேன்! எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் முடிந்த பின்னே  சாவகாசமாய் வாசிக்கத் தொடங்கினேன். அல்ஹம்துலில்லாஹ்,  என் எண்ணம் தவறல்ல என்பதை ஆசிரியரின் உரையே எடுத்துகாட்டியது.

பெரும்பாலும் புத்தகத்தின் பதிப்புரையோ முன்னுரையோ எந்த உரையாகினும் அவையெல்லாம் எளிதாக கடந்த முதல் அத்தியாயத்துக்குள் நுழையும் என் வாசிப்பு  பழக்கத்தில் சற்று மாறுதலை கொண்டுவந்தது இந்த புத்தகம். ஆசிரியரின் உரையே, இப்புத்தகம் ஏன் காலத்தின் கட்டாயம் என்பதை எடுத்தியம்பியது. பாடபுத்தகங்களில் இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் வந்ததை இஸ்லாமிய படையெடுப்பு என்றும், ஆரியர்கள் வந்ததை ஆரியர் வருகை என்றும் குறிப்பிட்டுள்ளதை சுட்டிகாட்டிய இடத்தில் புத்தகத்தை மூடிவைத்து யோசிக்க ஆரம்பித்தேன். ஆம்! பள்ளிபாடங்களில் இப்படியாக தான் நஞ்சு விதைக்கப்பட்டவர்களாக  வளர்க்கப்பட்டிருக்கிறோம். அதை மெல்லிய உதாரணத்தில் சொல்லி    அதிகம் சிந்திக்க வைத்தார் ஆசிரியர். புத்தகம் முழுதும் இப்படியாக பல விஷயங்களில் நம்மை நாமே கேள்வி கேட்க வைத்திருக்கிறார்.

31 தலைப்புகளின்  கீழ் பலதரப்பட்ட வரலாற்றுக்களின் மறுபக்கத்தை நமக்கு எடுத்துகாட்டியுள்ளார் ஆசிரியர்.  ஒவ்வொரு தலைப்பிலும் நமக்கே நம் சமுதாயம் பற்றி தெரியாத தகவல்களை தந்து, இத்தனை நாளாக இதுபற்றி அறியாமல் என்ன செய்து கொண்டிருந்தோம் என கேள்வி கேட்க வைத்துள்ளார். ஒவ்வொரு தகவலும் கொடுக்கப்பட்ட விதம், இக்கட்டுரைகளை உருவாக்குவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், தேடலும் , உழைப்பும் பறைசாற்றுவதோடு உண்மை தன்மையை  எடுத்தியம்புகிறது. ஆம்,  தகவல்கள் ஆண்டுவாரியாக மட்டுமல்லாமல்  எந்தந்த நாட்களில் சம்பவம் நடந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின்  பங்கு என்ன என நம்மை நோக்கி கேள்வி கேட்போருக்கு பதிலை புத்தகமாக கொடுத்ததோடு அல்லாமல் " சுதந்திர போராட்டத்தின் போது சாவர்க்கரை போல் இந்திய மண்ணுக்கு துரோகம் செய்த ஒரு முஸ்லிமையாவது ஆதாரத்துடன் காட்ட முடியுமா " என எதிர்கேள்வியையும் கேட்க வைத்துள்ளார்.

இன்னும் இன்னும் ஏராளதகவல்கள் கொட்டி கிடக்கின்றன.

* திப்புவின் வீரம் தெரியும் திப்பு இறந்த பின் அவர் அரண்மனைக்குள் கைப்பற்றப்பட்ட பொக்கிஷங்கள் புத்தகங்களும், ராக்கெட் ஆய்வு கட்டுரைகளும் தான் என்பது தெரியுமா?

* காந்தி நாட்டுக்காக பாடுபட்டது பாடபுத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலயர்களின் ஆட்சிமன்றத்தில் அங்கத்தினராக காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதற்கான காந்தி கொண்டு வந்த  'டொமினியன் அந்தஸ்து' தீர்மானத்தை முட்டாள்தனமானது என்றும் ஆங்கிலேயர்களை விரட்டி இந்தியாவை நமதாக்க வேண்டும் என்பதை   எடுத்துக்கூறிய மௌலானா ஹஜ்ரத் மொஹானியின் அறிவார்ந்த தீர்மானத்தை காந்தி புறந்தள்ளியதை படித்திருக்கிறோமா?

* மருதுபாண்டியர் பற்றி தெரியும். அந்த  வம்சமே தூக்கிலிடப்பட்ட போது சின்ன வயது காரணமாக இளையமருதுவின் மகன் துரைச்சாமியை விட்டு வைத்ததும்,  அவருடன் சேர்ந்து நாடுகடத்தப்பட்ட  72 பேரில் துரைச்சாமிக்கும், படைத்தளபதி ஷேக் உசேன்க்கும் மட்டுமே இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தனர் என்ற வரலாறெல்லாம் குறைந்தபட்சம் கேள்விபட்டிருக்கிறோமா?

* அலி சகோதரர்கள் பற்றி ஓரிரு வரியில் படித்திருப்போம்.  அவர்கள் வீட்டுப் பெண்கள் அக்காலத்திலேயே 30 லட்சம்  சுதந்திர போராட்ட நிதியாக கொடுத்தது அறிவோமா? இல்லை " என் மகன்கள் ஆங்கில அரசிடம் மன்னிப்பு கேட்டால் நானே அவர்களின் குரல்வளையை நெறித்துக்கொள்வேன்" என சொன்ன அவர்களின் வீரத்தாய் பீவிமா பற்றியேனும் தெரிந்துவைத்துள்ளோமா?

* ஒத்துழையாமை பற்றியும்,  சத்தியாகிரகம் பத்தியும் சொல்லிகொடுக்கப்பட்ட நமக்கு சப்பாத்தி திட்டம் பற்றி சொல்லப்பட்டுள்ளதா? சப்பாத்திக்குள் துண்டு பிரசூரம் வைத்து   புரட்சிக்காக மக்களை அழைத்ததும், இன்னும் பல வழிகளில் ஆங்கிலேயர்க்கு குடைச்சல் கொடுத்ததன் விளைவாக   ,  உயிருடன் பிடித்துகொண்டு வந்தால் 50 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் என ஆங்கிலேயர்களால் அறிவிப்பு செய்யப்பட்ட மௌலவி அஹமது ஷா பற்றி அறிந்திருக்கிறோமா?

இன்னும் பக்கத்திற்கு பக்கம் பல சுவாரசியங்களும் அதிர்ச்சிகளும் காணக்கிடைக்கின்றன. கண்ணீர் துளிகளும் குறைந்தபட்சம் உடல் சிலிர்க்காமலும் இப்புத்தகத்தை முடிக்க உங்களால் முடியாது.  ஓர் சமுதாயம் கேள்வி கணைகளால் தொடுக்கப்படும் பொழுதும், தனிமைபடுத்தப்பட  விஷம பிரச்சாரங்கள்  கட்டவிழ்க்கப்படும் பொழுதும் அதனை எதிர்க்க  பதிலை தெரிந்து வைத்திருப்பது அவசியம். எதிர்த்து பதில் சொல்வதற்கான சூழலை இப்புத்தகம் வாயிலாக தந்துள்ளார்கள். நிச்சயம் முஸ்லிம்கள் வாசிக்க வேண்டிய நூல். தம் நண்பர்களுக்கும், இஸ்லாமியர்கள் குறித்து தவறான புரிதலில் உள்ளோர்க்கும் பரிசளிக்க ஏதுவான நூல்.

வரலாறுகளை திரித்து விட்டார்கள் என சொல்லிக் கொண்டே இருப்பதை விடுத்து உண்மைகளை அறிவதும், அறிந்ததை ஆதாரங்களுடன் மற்றவர்களுக்கு  எத்தி வைப்பதும்  மகத்தான பணி.  இப்பணியை சிறப்பாக செய்த  அதிரைநிருபர் தளத்திற்கும் இந்நூல் ஆசிரியருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு' இன்னும் பல பாகங்களாக தொடரவும் பல பதிப்புகளாக வெளிவரவும் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஆமினா முஹம்மத்
நன்றி Source:http://adirainirubar.blogspot.in/2016/02/blog-post_28.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails