Monday, February 8, 2016

எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா !!



எத்தனைக்கோடி இன்பம்
இத்தரணியில் வைத்தவன் !
அத்தனையும் அனுபவிக்க
ஆன்மாவைத் தந்தவன் !

பூவுக்குள் தேனை
புகுத்தியே வைத்தவன் !
சாவுக்கு நேரத்தை
சரிபார்த்து வைத்தவன் !

பாலையும் குருதியும்
பசுவுக்குள் பிரித்தவன் !
பால்வீதி கோள்களை
பாதையில் வகுத்தவன் !


பாறைக்குள் தேரைக்கும்
பசிக்குணவு ஈந்தவன் !
சாறை எறும்புக்கும்
சங்கேதமொழி தந்தவன் !

எழும்பிவரும் அலைகளுக்கு
எல்லைக்கோ டிட்டவன் !
இளநீரில் சுவைநீரை
இதமாக வைத்தவன் !

செங்கதிரோன் உதிப்பதற்கு
சமயத்தைக் குறிப்பவன் !
அங்கத்தின் உறுப்புகளை
ஆற்றலோடுபடைத்தவன் !

புலர்பொழுதில் மலர்களுக்கு
புன்சிரிப்பைத் தந்தவன் !
மலர்களுக்கு ஒவ்வொன்றாய்
மணம்தன்னை பிரித்தவன் !

கடல்நீரை மேலேற்றி
கார்முகிலுள் நிறைத்தவன் !
இடம்பார்த்து கனிமங்கள்
வளம்பொங்க கொடுத்தவன் !

குயிலுக்கும் காக்கைக்கும்
குரல் மாற்றம் தந்தவன் !
மயிலுக்குத் தோகையை
மனங்கவர படைத்தவன் !

வண்ணக் கலவையினை
வானவில்லில் கலந்தவன் !
எண்ணங்கள் சிறகடிக்க
இதயத்தை விரித்தவன் !

கண்ணுக்குள் பார்வையை
காட்சிக்காய் அளித்தவன் !
மண்ணுக்குள் வைரத்தை
மறைத்துனக்கு வைத்தவன் !

இரவையும் பகலையும்
இருகூறாய் பிளப்பவன் !
மரங்களை விதைகளால்
மண்ணிலே துளிர்ப்பவன் !

ஞாலத்தை படைத்து
காலத்தை வகுத்தவன் !
மூலவன் பேராற்றல்
நாம் உணர வைத்தவன் !

குரல்வளைக்குள் குரலையும்
எறும்புக்கு நுகர்ச்சியும்
கரும்புக்கு இனிமையும்
கலீலியோவே தந்து பாரும்!
சாட்சாத் நீர் கடவுளென – நான்
சாட்சியம் தருகிறேன் !

அண்டம் வேண்டாம்
ஆகாயம் வேண்டாம்.
அற்பக் கொசுவை நீர்
உண்டாக்கித் தாரும்
ஐன்ஸ்ட்டீனே! உமக்கே
அடிமையாகிப் போகிறேன்.!

தாயில்லை அவனுக்கு – ஆனாலும்
தாயுமானவன் அவன் !
தந்தையில்லை அவனுக்கு
தந்தையாய் நம்மை அரவணைப்பவன்!

உருவமில்லாததால்தான் அவன்
உள்ளத்திலும் குடியிருக்கிறான் !

நாளைய நடப்பை
நாளும் அறிந்த
நம்பிக்கைக்குரிய ஜோதிடன்!

விஞ்ஞானத்தையே கண்டுபிடித்த
விஞ்ஞானி அவன் !
மெஞ்ஞானியை உருவாக்கும்
மெஞ்ஞானி அவன் !

அண்டங்களின் எடையையும்
ஆட்டின் வாலையும்
அளந்து வைப்பது
அவன் செயல்தானே !

அவனது தொழிற்பேட்டையில்
சிறிய பொருள் பெரிய பொருள்
சிறிதளவும் பாகுபாடு இல்லை !

அள்ளி வழங்கும் அவனாற்றலில்
சிறியவன் பெரியவன்
வேறுபாடு இல்லை !

அழைத்தவர் குரலுக்கும் செவிமடுப்பான்!
அழைக்காதவர்க்கும் அருள் புரிவான் !

நன்மார்க்கம் இணைந்தவர்க்கும்
நாத்தீகம் உரைப்பவர்க்கும்
நற்கிருபை புரிபவனை
நீதமின்றி மறுக்கின்றீர் !

அவன்தான் பெரியவன் என்பதில்
அணுவளவும் ஐயம் இல்லை.
அதனால்தான் “அல்லாஹு அக்பர்” என
அடிக்கடி மொழிகிறோம் !

“ஆகுக” என்றால்
ஆகி விடுவது
அவன் ஆணையிட்டால் மட்டுமே !

ஆணையிட்டுப் பாருங்களேன்
அவனன்றி அணுவும் அசையாது !

எங்கும் இருப்பவனை
எங்கே இருக்கிறான்? என
எதிர்க்கேள்வி கேட்கிறீரே …
என்ன நியாயம்?

எல்லாமே இயற்கையெனில்
இயற்கையை படைத்தவனை
ஏனய்யா மறுக்குறீர்?

உளமதனில் உணர்ந்தாலும்
உதட்டளவில் எதிர்க்கின்றீர்
போதுமிந்த பொய்வேஷம்
புரிதலுக்கு இடங்கொடுப்பீர் !


– அப்துல் கையூம்
https://nagoori.wordpress.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails