Saturday, February 27, 2016

விமர்சனங்களை வென்றவர்


கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்த முஹம்மது (ஸல்) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த உலகில் மனிதராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது.

சமயம், , சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம், வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறது. இன்றும் நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாக இடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கான அவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன. சட்டம், நீதி, நிர்வாகம் மற்றும் பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிற துறைகளாகும். அந்தப் பாலைவனச் செல்வர் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை.



மூன்றாம் உலகம் யுத்தம் ஒன்று வருமென்றால் அதற்கு தண்ணீர் தான் காரணமாக இருக்கப் போகிறது என ஐ நா மன்றம் எச்சரித்துள்ளது. நீர் பங்கீடு மற்றும் நீர்ப்பாசனம் குறித்து முஹம்மது நபியின் வழிகாட்டுதல்கள் ஏற்றுக் கொள்ளப் படுமானால் அந்த அச்சத்திற்கு வழியே இருக்காது.

இந்த துறைகளிலெல்லாம் முஹம்மது (ஸ்ல்) அறிவுரைகள், அல்லது கருத்துக்களை கூறினார் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியாது. இத்துறைகள் அத்தனையும் அவர் பரிசோதனை முயற்சிகளை செய்து அதில் பெரும் வெற்றி கண்டார் என்று சொன்னால் அது கூட அவரை பற்றிய முழு அறிமுகமாகிவிடாது. தான் உருக்கொடுத்த அத்தனை சிந்தனைகளையும் வழிவழியாக பின் பற்றி நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிச் சென்றார், அந்த சமூகம் இன்றளவும் மட்டுமல்ல இனி உலகம் வாழும் காலம் வரையும் அவரது சிந்தனைகளை ஆலோசனைகளை உத்தரவுகளாக தலைமேற் கொண்டு செயல்படக் காத்திருக்கிறது.

அவர் மறைந்து இன்றும் அவரைப் பற்றியும் அவர் விட்டுச் சென்ற தத்துவங்கள் நடைமுறைகள் குறித்தும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை பத்ரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் உலகம் கொண்டாடும் மற்ற தலைவர்களுக்கும் இடையே மிக முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறது. இயேசு. புத்தர், ஆதி சங்கரர் விவேகானந்தர், காந்தி, போன்ற பலரும் அனைத்து மக்களாலும் பாராட்டப்படுகிறவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் இன்றைய நவ நாகரீகத்தின் அழுத்த்தை தாண்டி இவர்களை பின்பற்றுகிற ஆட்கள் உண்டா என்பதும் அப்படியே இருந்தாலும் அவர்களின் சதவீதம் எத்தனை என்பதும் கேளிவிக்குரியதாகும். முஹம்மது நபி (ஸல்) பாராட்டப்படுகிறவராக மட்டுமில்லாது இன்றளவும் கண்டங்கள் அத்தனையிலும் பின்பற்றப்படுகிறார் என்பதை கூர்ந்து யோசிக்க வேண்டும்.

இராக் நகரின் ஒரு வீதியில் திடகாத்திரமான ஒரு இளைஞனை முதியவர் ஒருவர் நியாயமின்றி அடிக்கிறார். அவன் அதை தடுக்காமலும் திருப்பி தாக்காலும் நிற்கிறான். ஏனென்று கேட்டால் பெரியவர்களை மதிக்க்காதவர் என்னை சார்ந்தவர் அல்ல என்று முஹமது கூறியுள்ளார். நான் அந்த பழிக்கு ஆளாக விரும்பவில்லை என்கிறான்.

வாஷிங்டன் தெருக்களில் முகத்தை மறைத்த படி இளம் கல்லூரி மாணவி நடந்து கொண்டிருக்கிறாள். ஏன் இப்படி என்று கேட்டால். இது முஹம்மது நபியின் உத்தரவு என்கிறாள்.

ஆஸ்திரேலியாவின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சாக்லேட் வேண்டும் என்று சிறுவன் அடம் பிடிக்கிறான். அதை எடுத்துப் பார்த்த தந்தை இது ஹலால் அல்ல என்கிறார். சிறுவனின் அழுகை நின்றுவிடுகிறது. என்ன என்று விசாரித்தால் முஹம்மது (ஸல்) என்று பெயர் சொல்லப்படுகிறது.

சோவியத் ஆக்ரமித்த பால்டிக் நாடுகளில் ஒன்றில் ஒரு இளைஞன் தொழுகைகான அழைப்பு பாங்கு வாசகங்களை கூறுகிறான். காவலர்கள் அடித்து உதைக்கிறார்கள், அவன் பாங்கை நிறுத்தவில்லை. அவனை சிறையிடைக்கிறார்கள் அங்கும் அவன் பாங்கு சொல்வதை நிறுத்தவில்லை. சொல்லனா தொல்லகளுக்குப் பிறகும் அவன் பாங்கு சொல்கிறான், கிருக்கன் என்று கூறி அவனை விடுதலை செய்கிறார்கள்.எதற்காக இப்படி என்று கேட்டால் முஹம்மது (ஸல்) கற்றுக் கொடுத்த அற்புதமல்லவா அது என்று அவன் பதிலளிக்கிறான்.

காஷ்மீரின் பனிப்பொழிவுகளின் அடர்த்திக்கு இடையேயும் மதுவின்றி வாழும் ஒரு சமுதாயம், வெட்கத்தை விலை பேசி விற்று விட்ட டென்மார்க்கிய நிர்வாணப் பிரதேசத்திலும் வரன்முறைக்கு உட்பட்டு வாழும் ஒரு சமுதாயம். பாரிஸ் நகரின் வீதிகளில் பர்தாக்களுக்களோடு உலாவருகிற ஒரு சமுதாயம். இன்றைய வால்ஸ்ட்ரீட்ளின் சாம்ராஜயத்தில் வட்டிக்கும் முறையற்ற வர்த்தகங்களும் எதிராக எப்போதும் கொடிபிடித்துக் கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் அமரிக்க விமானங்களில் இன்னும் தாடிகளுடன் பயணம் செய்கிற ஒரு சமுதாயம். நேட்டோ நாடுகளின் ஆக்ரமிப்பு குண்டு வீச்சுக்களுக்கு நடுவேயும் தொழுகைக்காக துண்டுவிரிக்கிற ஒரு சமுதாயம், சர்வதேச அளவில், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அன்றாடம் அணுகுண்டுகளை வீசிக் கொண்டிருக்கிற ஊடகங்களை தாண்டி உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் முஹம்மது என்ற பெயரை இன்னும் எத்தகைய உயிர்த்துடிப்போடு உச்சரித்துக் கொண்டிருக்கிறது என்பதை நியாயமாக யோசித்துப் பார்க்க வேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.

இத்தகைய ஆகர்ஷணம் கொண்ட ஒரு சக்தி எத்தகைய சத்திய வெளிச்சத்திற்குரியது என்பதை அறிஞர்கள் அளவிட வேண்டும். அற்பத்தனமாக் குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசுவதை விட்டுவிட்டு அவர் விசயத்தில் நியாயாமான ஒரு பரிசீலனைக்கு மக்கள் தயாராக வேண்டும்.

முஹம்மது நபியை களங்கப்படுத்தும் முயற்சியை அணு அளவிலும் விட்டுவைக்காத முஸ்லிம் சமுதாயம் அவரைப் பற்றிய கருத்து விவாதங்களுக்கு எப்போதும் தயாராக இருக்கிறது.

அவரை தீவிரமாக எதிர்தவர்கள் அந்த சத்திய தரிசனத்தை நேரிட்டுக் கணட நிமிடச் சருக்கில் சரணாகதி அடைந்தனர் என்பதுதான் வரலாறு. உமர் ஒரு உதாரணம் போதாதா? ஒரு கவிஞன் சொன்னது போல் முஹம்மது என்ற நன் மலரை வெட்ட வந்த விரல்களே அந்த மலருக்கு காம்பாக மாறிவிடவில்லையா? எதிர்ப்பு எங்கே வலுவாக இருக்கிறதோ அங்கே பலமான தளத்தை அமைத்துக் கொண்டது தான் முஹம்மது நபியின் தனிச்சிறப்பு.

முஹம்மது நபி (ஸல்) தனது ஊர் மக்களிடம் “உங்களது உறவினன் நான். அந்தக் காரணத்தினாலேனும் என் வழியில் செல்ல என்னை அன்மதியுங்கள் என்று கோரிய போது அதைக் கூட ஏற்க மறுத்தனர் அம்மக்கள். ஆயினும் முஹம்மது நபி (ஸ்ல்) அவர்களது வாழ்வில் குற்றம் கண்டு பிடித்து அவரை தரம் தாழ்த்திட அவர்கள் முறசிக்கவில்லை.

முஹம்மது (ஸல்) தனது பிரச்சாரத்தின் தொடக்க முயற்சியாக கஃபா ஆலயத்தின் அருகே இருந்த சபா குன்றின் மீதேறி சப்தமிட்டு “பஹ்ர் குடும்பமே! அதீ குடும்பமே! கஃபு குடும்பமே ! இந்த மலைகனவாயினூடே உங்களை தாக்குவதற்கு ஒரு படை வரப்ப்போகிறது என்று நான் சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார். அதற்கு அம்மக்கள் சொன்ன வார்த்தையை வரலாறு பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறது. “நஅம்! மா ஜர்ரப்னா அலைக்க இல்லா சித்கன்” ஆம்! நம்புவோம்! நீர் உண்மையாளர் என்பது தான் எங்களது அனுபவம்” என்று அம்மக்கள் கூறினர். தனது சொல்லை ஏற்கச் செய்வதற்கான பீடிகியை அமைத்துக் கொண்ட பிறகு முஹம்மது ஸல்) தனது பிரச்சாரத்தை எடுத்துரைத்த போது “இதற்குத்தானா எங்களை அழைத்தாயா என்று கடிந்து கொண்ட அம்மக்கள் கடைசி வரை நபிகள் நாயகத்தின் நம்பகத் தன்மையில் குறை பேசவே இல்லை.

வரலாற்றில் ஒரு பேரதிசயமாக முஹம்மது நபியின் பிரதான எதிரியாக இருந்த அபூஜஹ்ல் “ நீ பொய் சொல்கிறாய் என்று கூறமாட்டேன்! ஆனால் உன்னை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என்று நபிகள் நாயகத்திடம் கூறினான். முஹம்மது நபி வாழ்ந்த காலத்தில் அவரை சூழ்ந்திருந்த சமுதாயம் அவரது வாழ்வின் மீது எந்தப் பழிச் சொல்லையும் சொல்லவில்லை.

இறைத்த்தூதர்களைப் பற்றி அனுபவமின்மை காரணமாக மக்காவின் மக்கள் நபி (ஸல்) பற்றி, கவிஞராக இருப்பாரோ! மந்திரவாதியோ! ஒரு வேலை இதுவும் ஒரு வகை சித்த பிரமையே! என்றெல்லாம் பேச முற்பட்டார்கள் என்றாலும் அப்படிக் கூட அவர்களால உறுதியாக பேச முடியவில்லை.

மக்காவின் செல்வாக்கு மிக்க செல்வந்தர் வலீது பின் முகீரா நபிகள் நாயகத்தை குறை சொல்லும் வார்த்தைய கண்டுபிடிப்பதற்காகவே தன்னுடைய வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நபிகள் நாயகத்தின் எதிரிகள் ஒன்று கூடினர். “கவிஞர்” “மந்திரவாதி” “சித்தபிரமை பிடித்தவர்” என் ஒன்றன்பின் ஒன்றாக பழிச் சொற்கள் கூறப்பட்டன. வலீது அவை ஒவ்வொன்றையும் மறுத்தார். முஹம்மதுவிடம் இந்தக் குறை இல்லை. இதை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அனைத்தையும் நிராகரித்தார்.. கருத்துச் சொன்னவர்கள் கடுப்படைந்தனர், நீங்களாவது ஒன்றை சொல்லுங்கள் என்றனர். வலீது சொன்னார். முஹம்மது விசயத்தில் நீங்கள் எதைச் சொன்னாலும் அது எடுபடாது. பொய்யென்று தெரிந்து விடும். “மா அன் தும் பிகாயீலீன பிஸய்யின் பீஹி இல்லா உரிப அன்னஹூ பாதில்)

ஒரு உத்தமரை வார்த்தையால் ஊனப்படுத்தும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அல்ல. தங்கத்தை உரசிப் பார்த்த பொற்கொல்லனின் தீர்ப்பாக – முஹம்மது நபியின் யோக்கியதாம்சத்தை நிறுவும் சான்றாக அமைந்தது.

தங்களது ஊர்கார்ரும் மரியாதையான குடும்பத்தவரும் நாணயமிக்கவருமான முஹம்மது (ஸல்) அவர்களை ஒன்று சேர்ந்து கொன்று விடலாம் என்று தீர்மாணித்தவர்கள் கூட முஹம்மது (ஸல்) வை பழிச் சொல்லுக்கு ஆளாக்கவில்லை.

ரோமப் பேரரசர்சர் ஹிர்கல் பாரசீகத்திடம் பெற்ற வெற்றிக்கு பரிகாரமாக பாலஸ்தீனத்திற்கு நடை பயணம் வந்திருந்த போது, அங்கு முஹம்மது நபியின் கடிதம் அவருக்கு கிடைத்தது. முஹம்மது நபியை பற்றி விசாரிப்பதற்காக அவர் மக்காவிலிருந்து வந்திருக்கும் வியாபாரக் குழுவை அழைத்தார். மக்கத்து எதிர்களுக்கு நபிகள் நாயகத்தை பழி தீர்க்கும் ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் கூட அவர்கள் முஹம்மது ஸல் அவர்கள் மீது அவர்கள் பழி கூறி ஒரு வார்த்தை கூறவில்லை.

முஹம்மது என்றால் புகழுக்குரியவர் என்று பொருள், அந்த பொருளுக்கேற்பவே முஹம்மது (ஸல்) வாழ்ந்தார்.

ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றின் மீதும் களங்கத்தை பூசும் முயற்சியை ஐரோப்பிய கிருத்துவர்களே முதன் முதலாக ஆரம்பித்தனர். சிலுவை யுத்தங்களின் போது இந்த வகையான தூற்றுதல் பெருந்தூரலாக இருந்தது. தம் மனம் போனபடிக்கு நாயகத்தை பழித்துப் பேசினர். அவரைப் போர் வெறியர் என்றனர்- பெண்ணாசை கொண்டவர், மோசடியாளர், என்றனர் சகிப்துத்தன்மை அற்றவர் என்றனர்.

அன்றிலிருந்து இன்றுவரை இந்த குற்ற இயல்புகளை அனைத்திற்கும் ஐரோப்பியர்களே பிறப்பிடமாக இருந்தனர். கீழ்த்தரமான, ஒழுக்கக்கேடு நிறைந்த குரூரமான செயல்களுக்கு இன்று வரை ஐரோப்பிய கிருத்துவ மேற்குலகை தவிர வேறு உதாரணம் இல்லை. இன்னும் சொல்வதானால் உலகிற்கு கொடுப்பதற்கு அவர்களிடம் இவற்றை தவிர வேறு எதுவும் இல்லை. ஐரோப்பிய கிருத்துவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிப் பேசிய கருத்துக்கள் பலவும் அவர்களுடைய மன விகாரத்தின் வெளிப்பாடாக அமைந்ததே தவிர, அதில் ஆத்திரமும் பொறாமையும் பொங்கி வழிந்ததே தவிர அதில உண்மை துளியும் இருக்கவில்லை. இஸ்லாமிற்கு எதிராக கிருத்துவர்களை திருப்புவதற்காக பெரும்பாலும் பாதிரிகளே இக்குற்றச் சாட்டுகளை கூறினார். அதனால் தான் அவர்கள் கூறிய குற்றச் சாட்டுக்கள் எதுவும் காலத்தின் காதுகளில் பதியவே இல்லை.

முஹம்மது நபியின் வரலாற்றின் வழக்கப்படி, அவருக்கு எதிரான குற்றச் சாற்றுகளுக்கு எதிர் தரப்பிலிருந்தே மறுப்புச் சொல்லப்பட்டது. முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்களை கருத்து ரீதியில் சந்தித்து நறுக்கான பதில்களை முஸ்லிம் சமூகம் முன்வைக்கத் தவறவில்லை. ஆனாலும் முஸ்லிம் அல்லாத பிற சிந்தனையாளர்களின் தளத்திலிருந்து தரப்பட்ட பதில்கள் முஹம்மது நபியின் வாழ்வில் சத்திய வெளிச்சத்திற்கு சான்றாக அமைந்தன.

முஹம்மது நபிக்காக வாதிட்டு முஸ்லிம்கள் கூறும் பதில்களில் சமய ரீதியான அணுகுமுறை மிகைத்து இருந்தது என்றால் பிற சிதனையாளர்களின் பதில்கள் முஸ்லிம்கள் சிந்திக்காத மற்றொரு கோணத்தில் வாழ்வியல் ரிதியான எதார்த்தமான பதில்களாக அமைந்தன. “இதைக் கூடவா நீங்கள் கவனிக்கவில்லை” என எதிர்ப்பாளர்களை நோக்கி கேள்வி கேட்கிற தொனியில் அவை அமைந்திருந்தன.

மக்காவில் வலீது நட்த்திய கூட்டம் எப்படி நபிகள் நாயகத்தின் வரலாற்றுக்கு எதிர்திசையிலான புதிய பரிமாணத்தை தந்ததோ அதே போல ஐரோப்பியர்களின் குற்றச் சாட்டுகளும் முஹம்மது நபியின் வாழ்வில எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐரோப்பிய யூத காழ்ப்புணர்வின் குரூரத்தை அம்பலப்படுத்தினவே அன்றி முஹம்மது நபி புகழ் வாழ்வில் ஒரு தூசு அளவுக்கு கூட மாசுபடுத்திடவில்லை.

19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய உலகில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எதிராக புயல் வீசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வீச்சு மிகுந்த சிந்தனையாளரும் அற்புதமான பேச்சாளருமான தாமஸ் Heroes and Hero-Worship என்ற தலைப்பில் உலகின் கதாநாயகர்களைப் பற்றி தொடர் உரைகள் நிகழ்த்தினார். எடின்பரா பல்கலையில் சட்டம் பயின்ற அவரது உரைகளை மக்கள் கட்டணம் செலுத்திக் கேட்டனர். அவர் எழுதிய The Heroes என்ற நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. கார்லைல் தனது உரைகளுக்கு கவிதை கதாநாயகர்க்களாக தாந்தே, ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரையும், கதாநாயக பாதிரியாராக மார்டின் லூதரையும், கதாநாயக இலக்கிய எழுத்தாளராக ஜான்ஸனையும் ரூஸோவையும், ஆட்சியாளராக நெப்போலியனையும் தேர்வு செய்து அவர்கள் குறித்து ஆழமான கருத்துரைகளை வழங்கினார். 1840 ம் மே 8ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கதாநாயகர் – ஒரு தீர்க்க தரிசியாக என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது இந்த தலைப்பிற்கு தீர்க்க தரிசிகளின் பட்டியலிலிருந்து மோஸேவையோ இயேசுவையோ தேர்ந்தெடுக்காமல் யாரும் எதிர்பாரத விதமாக முஹம்மது (ஸல்) அவர்களை தேர்வு செய்தார்.

வெளையர்கள் கருப்பின மக்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைபோல் அந்த கிருத்துவ சமுதாயம் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது வெறுப்புக் கொண்டிருந்தது. தலைப்பே அவர்களை திடுக்கிட வைத்தது என்றால் தொடர்ந்து அவர் பேசிய தகவல்களில் ஐரோப்பிய மக்களுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் காத்திருந்தன.

“முஹம்மதுவுக்கு எந்த வேதச் செய்தியும் வரவில்லை என்று நையாண்டி பேசிய 17 ம் நூற்றாண்டைச் சார்ந்த Hugo Grotius என்ற டச்சு கவிஞனின் கருத்தை மறுத்து தன்னுடைய உரையை தொடங்கிய கார்லைல், “It is a great shame for anyone to listen to the accusation that Islam is a lie and that Mohammad was a fabricator and a deceiver என்று தொடர்ந்தார்.

இஸ்லாம் பொய்யான ஒரு சமயம்; முஹம்மது ஒரு ஏமாற்றுக்காரர் என்று குற்றச் சாட்டை ஏற்பது எந்த நாகரீகமான பிரஜைக்கும் வெட்கரமானது. என்ற அவரது தொடக்கம் நேயர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது,

Hugo Grotius கற்பனையாகவும் கிறுக்குத்தனமாகவும் சொன்ன கதைகளில் கிருத்துவ உலகம் அகமகிழ்ந்து கொண்டிருந்த்து. முஹம்மது சில புறாக்களை வளர்த்தார், அந்தப் புறாக்களுக்கு அவர் நல்ல பயிற்சி கொடுத்தார். அவை அவரது தோளில் வந்து உட்கார்ந்து அவரது காதோரம் வைக்கபடுகிற தானியங்களை சாப்பிடும், அதைதான் தனக்கு வஹி இறைச் செய்தி வருவதாக அவர் என முட்டாள்தனமாக கதை கட்டி விட்டிருந்தான். Hugo Grotius. இவன் மட்டுமல்ல கிருத்துவ உலகத்தைச் சார்ந்த புத்திசாலிகள்(?) பலரும் இப்படித்தான் உண்மைக்கு சற்றும் தொடர்பில்லாத அறிவீனமான கற்பனைகளை முஹம்மது (ஸல்) அவர்கள் விசயத்தில் நம்பியிம் பேசியும் வருகிறார்கள். இஸ்லாம் தொடர்பாக தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்ட அறிவீனமான கருத்துக்களை நம்பி, பேசி, அதையே விவாதம் செய்து பரப்புவதன் மூலம் அற்பமாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த கிருத்துவர்கள் நிறைந்திருந்த அந்த திரளான சபையில் கார்லைல் உரத்துக் கூறினார்.

“இந்த மனிதர் விசயத்தில் இனவெறியோடு திட்டமிட்டு நாம் உருவாக்கிய இந்தப் பொய்களால் நமக்குத்தான் இழிவே தவிர ஒருபோதும் அவருக்கல்ல.”

தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல் அவர்களின் நாணயம், உள்ளத்தூயமை ஆகியவற்றை கிலாகித்துப் பேசிய கார்லைல், நபிகள் நாயகத்தின் ஒரு செயலை மிக உவப்போடு குறிப்பிட்டார்.

முஹம்மது (ஸல்) ஒரு முறை மக்காவின் தலைவர்க்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஏழை கண் தெரியாதவரான அப்துல்லாஹ் பின் உம்மி மக்தி இடைமறித்து பேசினார். நபிகள் நாயகம் முகம் சுளித்தார். அப்போது அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற கருத்தில் “ பார்வையற்றவர் தேடி வந்த போது முகம் கடுகடுத்தார் என்ற கருத்தில் இறைவசன் அருளப்பெற்றது.

அதற்கு பிறகு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) தன்னிடம் வருகிறபோது அவரை “நான் கண்டிக்கப்பட காரணமாக இருந்தவரே வருக என பாசத்தோடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைப்பார்கள். வெளியூர்களுக்குச் சென்ற நேரங்களில் இரண்டு முறை அவரை மதீனா நகரின் பொறுப்பாளராக நியமித்தார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளை எடுத்துக் காட்டிய கார்லைல் “கதாநாயக தீர்க்கதரிசியின் உளத்தூய்மையும் நேர்மையும் இந்த அளவுக்கு இருந்தன என்று கூறினார்.

நபிகள் நாயகத்தின் சத்தியத்தன்மையை எடுத்துக்காட்ட கார்லை அற்புதமான – உலக அனுபவத்தின் சத்தாக அமைந்த ஒரு நியதியை எடுத்துவைத்தார்.

“முஹம்மது ஒரு ஏமாற்றுக்கார்ராக இருந்திருந்தால் 12 நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கிற – 18 கோடி மக்கள் நிழல் பெறுகிற ஒரு சமயத்தை அவரால நிறுவி இருக்க முடியாது. சரியான அடித்தளமில்லாத ஒரு கட்டிடம் சீக்கிரம் விழுந்து விடும். மோசடியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. பொய் சீக்கிரமே வெளுத்து விடும்.”

ஐரோப்பிய சமுதாயம் மட்டுமே இன்று வரை நபி (ஸல்) அவர்களது திருமணங்களை கொச்சைப் படுத்தி வருகிறது. அவரை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்க முயல்கிறது. வெட்கங்கெட்ட வாழ்கையுடையோர் உயரிய ஒழுக்கம் சார்ந்த திருமண வாழ்வை குறைகூறுவது ஏற்புடையதல்ல.

இருப்பினும், தாமஸ் கார்லை ஐரோப்பியர்களுக்கு அன்றைய பாரசீக மன்னரான கிஸ்ராவின் ஆடம்பர வாழ்வையும் ரோமச் சக்ரவர்த்தியான கைஸைரின் டாம்பீகத்தையும் நினைவு படுத்திக் காட்டுகிறார். வானத்தோடு தொடர்பு கொண்டிருந்த முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பூமியின் மன்னர்கள் சூடிக்கொள்ளும் மகுடங்களில் அக்கறையிருக்கவில்லை என்பதை விவரிக்கிறார். சிற்றின்ப ஆசை அவரது திருமணங்களுக்கு காரணமல்ல என்பதை முஸ்லிம் அறிஞர்கள் பலவகையிலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

முதல் மனைவி கதீஜா (ரலி) இறந்த பிறகே நபி (ஸல்) 10 திருமணங்களைச் செய்தார். அன்றைய அரபகத்தில் பல பெண்களை திருமணம் செய்வது சர்வசாதாரண வழக்கமாக, குறை காணப்படாததாக இருந்தது. அப்படி இருந்தபோதும் அதுவரை ஒரு மனைவியுடனேயே வாழ்ந்தார்.

நபிகள் நாயகத்தின் 50 வயதுக்குப் பின்னரே இரண்டாவது திருமணம் நடைபெற்றது. மற்ற அதிகமான திருமணங்கள் ஹிஜ்ரி 5 க்குப்பின் நடைபெற்றன. அப்போது பெருமானார் 58 வயதை கடந்து விட்டிருந்தார். இத்தனை திருமணங்களுக்குப் பிறகும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த பல பெண்களை பெருமானார் நபி (ஸல்) ஏற்க மறுத்ததை வரலாறு காட்டுகிறது.

நபி(ஸல்) கடைசி மனைவி மைமூனா (ரலி). அவரை திருமணம் செய்து கொண்டது முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக பல நனமைகளை தந்தது. பிற்காலத்தில் இஸ்லாத்திற்கு மாபெரிய வெற்றிகளை வாரிக்குவித்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அத்திருமணத்திற்கு பின்னரே இஸ்லாமை தழுவினார். அவருடன் மற்றொரு பிரபலமான அம்ரு பின் ஆஸ் (ரலி) இஸ்லாமைத் தழுவினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) தன்னுடைய தோழர்களிடம் மக்கா தன்னுடைய ஈரல்துண்டுகளை நம்மிடம் வீசி விட்டது என்று கூறினார். இதற்கு ஒருவகையில் காரணமாக இருந்த மைமூனா அம்மையார் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சித்தியாவார்.

தாமஸ் கார்லைல் மற்றவர்கள் யோசிக்காத புது வகையில் நபி(ஸல்) அவர்களின் புனித்ததை நிரூபிக்கிறார்.

“முஹம்மது, அவர் மீது அக்கிரம்மாகவும் வரம்பு மீறியும் சொல்லப்படுவது போல சிற்றிண்ப ஆசை கொண்டவரல்ல. எளிய உணவு எளிய இருப்பிடம் மற்ற அனைத்திலும் எளியதை கொண்டு திருப்தி கொள்ளும் ஒரு துறவியாக அவர் இருந்தார். பல மாதங்கள் பசியால வாடிய வாழ்க்கை அவருடையது”

சத்தான உணவு, கவர்ச்சியான ஆடைகள், வசதியான தங்குமிடம், வளமான பொருளாதாரம், கவலையற்ற வாழ்க்கை ஆகியவை சிற்றின்ப உல்லாச வாழ்க்கைகு மனிதனை தூண்டுபவை. இவை எதுவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் கிடைக்கவில்லை என்பது எதார்த்தம்.

முஹம்மது (ஸல்) தனது எதிரிகளை முழு வீரத்தோடு எதிர்த்துப் போராடி வெற்றி கண்டார் என்பதை ஐரோப்பிய கிருத்துவர்களால தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் முஹம்மது (ஸல்) பல யுத்தங்களுக்கு காரணமாக இருந்தார். வாள் முனையில் சமயத்தை பரப்பினார் எனப் புகார் கிளப்பினர். அவர் கற்றுக் கொடுத்த ஜிஹாத் என்ற சொல் மனித சமூகத்தின் நிம்மதியை குலைத்து விட்டதாக இப்போதும் சிலர் புலம்புகின்றனர்.

உயிர்ப்பலியை முஹம்மது (ஸல்) எவ்வளவு வெறுத்தார், அதை தடுப்பதற்க்கு அவர் மேற்கொண்ட முயற்சி என்ன? அவரது வரலாற்றை படித்தால் குறைந்த பட்சம் அவரது பொன்மொழித் தொகுப்பில் இருக்கிற ஜிஹாத் பற்றிய அத்தியாயத்தைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் திறந்த புத்தகமாக எங்கும் கிடைக்கிறது.

ஒரு அரசியல் தலைவரின் முழு வாழ்வும் அப்பட்டமாக திறந்து காட்டப்படும் அதிசயம் முஹம்மது (ஸல்) அவர்களது வரலாறில் கிடைப்பது போல வேறு எங்கும் காணக்கிடைக்காது. அந்தப் புனித வாழ்வில் மர்மத் திட்டங்கள் இல்லை, இரகசிய உத்தரவுகள் இல்லை. பொறி பறக்கும் விஷம் தோய்ந்த வார்த்தைகள் இல்லை.

யுத்தம் என்பது ஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாதது. சில சந்தர்ப்பங்களில் அது அவசியமானதும் கூட. அத்தகைய நிர்பந்த சந்தர்ப்பங்களிலேயே முஹம்மது (ஸல்) அவர்கள் யுத்தம் செய்தார்.

போர்க்களத்தில் அகிம்சையை வலுயுறுத்தி முதல் வரலாற்றுத் தலைவர் முஹம்மது (ஸல்) ஒருவராகத்தான் இருக்க முடியும். ஹிஜ்ரி 5ல் நடைபெற்ற முரைசிஃ களத்தில் தோழர்களுக்கு அவர் சொன்னார். எதிரிகளை சந்திக்க ஆசைப்படாதீர்கள்! இறைவனிடம் அமைதியை பிரார்த்தியுங்கள். எதிரிகளை சந்தித்தால் முந்திக் கொண்டு வாளை உயர்த்தாதீர்கள். ஒருவேளை நீங்கள் தாமதிக்க அவர்கள் உங்கள் மீது வாள் வீசி விட்டால். அறிந்துகொள்ளுங்கள்! அந்த வாட்களின் நிழ்லில் உங்களது சொர்க்க காத்திருக்கிறது.

இன்றைய முன்னேறிய உலகில் கூட போர் மரபுகள் கடை பிடிக்கப்படுவதில்லை. இராக்கில் நூற்றுக் கணக்கான பெணகளும் குழந்தைகளும் தங்கியிருந்த பதுங்கு குழியின் வாசலை குறி பார்த்து அமெரிக்கா ஏவுகணையை வீசியது. மற்றொரு தடவை ஈரான் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்றை ஏவுகணை வீசி அழித்தது.

முஹம்மது நபி உலகில் முதன் முறையாக போர் மரபுகளை சட்டமாக்கி அமுல் படுத்தியவர் ஆவார். பெண்கள், சிறுவர், முதியோர், சண்டைக்கு வராது ஆலயங்களிலிம், பதுங்கு குழுகளிலும் அடைக்கலம் தேடியிருப்பவர்களை கொல்லக் கூடாது. யாரிடமும் சண்டையிடுவதற்கு முன் அவர்களிடம் நியாயம் பேச வேண்டும் என்பது மட்டுமல்ல. மரங்களை வெட்டக் கூடாது. விலை நிலங்களுக்கு தீ வைக்க கூடாது என்பதும் முஹம்மது (ஸல்) வரைந்து கொடுத்த போர் நியதிகளாகும்.

முஹம்மது (ஸல்) தன் வாழ்வில் 9 சண்டைகளை சந்தித்தார் என்பதை படிக்கிற நியாயவான்கள். அந்த சண்டைகளின் போது அவர் போட்ட உத்தரவுகளையும் அது கடைபிடிக்கப் பட்ட ஒழுங்கையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

முஹம்மது (ஸல்) ஆயுதங்களின் வழியே சமயத்தை பரப்பினார் என்று புலம்புவோரைப் பார்த்து திலாஸி ஒலேரி கூறுகிறார். “ஆயுத பலத்தால் மக்களை இஸ்லாமை ஏற்க முஹம்மது நிர்பந்தித்தர் என்பது சுத்தமான கற்பனையாகும். சிரிப்பை வரவழைக்க கூடியது. அது உணமையிலிருந்து வெகு தூரம் விலகிய ஆரோக்கியமற்ற வாதமாகும்.” (islam at the cross road By De Lacy O’Leary- london – 1923 )

முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றை நியாயமாக எடை போடுகிற யாரும், ஓளிவு மறைவோ, சூதுவாதோ அற்ற அந்த மகத்தான வாழ்வை மதிப்பாகவே கருதுவர். அதில் பிரமிக்கவே செய்வர். இது போல தூய வாழ்வு இன்னொன்று இல்லை என்று தாமாகவே கூறுவர். – ஜி.ஜி. கெல்லட் – கூறுவதை கேளுங்கள்!

“ இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.”

முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றை அவர் யார் என்ற எதார்த்தமான கேள்வியோடு வாசிக்கும் எவருக்கும் இந்த அனுபவச் சிலிர்ப்பு ஏற்படவே செய்யும். ஏனென்றால்
அந்த வாழ்வில்

· கருணைக்கு எதிரான ஒரு பார்வையில்லை
· நீதிக்கு எதிரான் ஒரு செயல் இல்லை
· ஒழுக்கத்திற்கு எதிரான் ஒரு அசைவில்லை
· பெண்களுக்கு எதிரான ஒரு ஒரு வசை இல்லை
· சிறுவர்களுக்கு எதிரான் ஒரு கடுப்பில்லை
· நேர்மைக்கு எதிரான ஒரு சூது இல்லை
· பொது நன்மைக்கு எதிரான ஒரு சிந்தனை இல்லை
· சமத்துவத்திற்கு எதிரான ஒரு சமிக்ஞை இல்லை
· சகிப்புத்தன்மைக்கு எதிரான ஒரு உத்தரவில்லை
· சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு சூழ்ச்சி இல்லை
· மொத்தமாக சொல்வதானால்
· சத்தியத்திற்கு எதிரான ஒரு சொல் இல்லை.

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். என்றார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் புகழ்பெற்ற நூலாசிரியரான – எஸ். எச். லீடர் (-S.H. Leeder – Modern Sons of the Pharaohs)

கோவை அப்துல் அஜீஸ் பாகவி
http://www.readislam.net/portal/archives/4901

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails