Wednesday, June 15, 2016

என்னவோ தெரியவில்லை...

எனது நண்பர்கள் நல்லவர்கள்.
இது என் கதையல்ல.
யாரையோ சொல்வதற்கு பதில் என்னையே சொல்லி இருக்கிறேன்.
கதையின் கரு...
ஏழைகளை அவமதிக்கக் கூடாது என்பதுதான்.
-------Abu Haashima


என்னவோ தெரியவில்லை...
திடீரென்று ஒரு செலவு வந்து விட்டது.
அவசரமாக பத்தாயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்டது.
அவ்வளவு பணம் புரட்டும் நிலையில் நான் இல்லை.
பணம்தான் என்னிடம் இல்லையே தவிர நிறைய நண்பர்கள் உறவினர்கள் இருந்தார்கள்.
ரொம்ப அன்னியோன்யமாகப் பழகும் சில நண்பர்கள் எப்போதும் என் மனக் கஷ்டங்களை கேட்டு ஆறுதலும் சொல்வார்கள்.
தைரியமான வார்த்தைகளைக் கூறி நம்பிக்கையூட்டுவார்கள்.
அவர்களில் சிலர் வசதிமிக்கவர்கள்.
உறவினர்களிடம் கேட்பதைவிட நண்பர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்தேன்.
நிச்சயமாக உதவுவார்கள் என்று நம்பிக்கையோடு சாலமதிடம் கேட்கலாமா என்று யோசித்தேன் .
பத்தாயிரம் கேட்டால் அவன் மனது சங்கடப்படுமோ என நினைத்து
சாலமதிடம் ஐயாயிரமும் இஸ்மாயிலிடம் ஐயாயிரமும் கேட்பது என்று தீர்மானித்தேன்.
வழக்கம்போல் அன்னைக்கு காலையில் வாக்கிங் முடிச்சுட்டு சாயாக்கடை பக்கம் வந்தான் சாலமது.
என்னிடம் எப்போதும்போல் உற்சாகமாக பேசினான். அவன் வீட்டுக்கு கிளம்பும்போது ...

" சாலமது ... கொஞ்சம் அவசரமா பணம் தேவைப்படுது. ஒரு மாசத்தில திருப்பித் தந்துடுறேன் .கிடைக்குமா ?" என்று கேட்டேன்.
அவன் முகம் கொஞ்சம் வாடியது. அதைக் காட்டிக் கொள்ளாமல் " எவ்வளவு ?" என்றான்.
" ஐயாயிரம் " என்றேன்.
" ஐயாயிரமா ? அவ்வளவு இருக்காதே. நேத்துதான் பையன் புது போனு கேட்டான்னு முப்பதாயிரம்
கொடுத்தேன். எனக்குவேறே துபாய் விசிட் போக வேண்டி இருக்கா.,. பார்ப்போம்...
எதுக்கும் நாளைக்கு காலையிலே வீட்டுக்கு வந்து பாரு " என்றான்.
மனசுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் வேறு வழியில்லை.வாங்கித்தான் ஆகணும்.
மறுநாள் சாயாக்கடையில் எப்போதும்போல் காத்திருந்தேன். சாலமது வாக்கிங் போய் விட்டு வரும் நேரம் கடந்து போய்விட்டது. சாலமது வரவில்லை.
சரி... வீட்டில் போய் பார்ப்போம் என்று போனேன்.
பங்களா கேட்டின் முன்னால் காலிங் பெல் இருந்தது. அதை அழுத்திவிட்டு காத்திருந்தேன். பதிலில்லை.
மீண்டும் அடித்தேன்.
அப்போதும் கதவு திறக்கவில்லை.
ரொம்ப யோசித்து இன்னும் ஒருமுறை அடித்துப் பார்ப்போம் என்று அடித்தேன்.
இரண்டு நிமிஷத்திற்கு பிறகு கதவு திறந்தது.
சாலமதுதான் திறந்தான்.
" என்ன வீட்டுக்கே வந்துட்டியா " என்று ஒருவித எரிச்சலோடு கேட்டான்.
ரொம்ப வித்தியாசமான சாலமதாக அவன் என் கண்ணுக்குத் தெரிந்தான்.
" அவசரமா ஆடிட்டரை பார்க்கப் போறேன். ஒரு ரெண்டு நாள் கழிச்சு பார்ப்போம் ..."
என்று சொல்லி விட்டு என் பதிலைக் கூட எதிர்பாராமல் உள்ளே சென்று விட்டான்.
எனக்கு ரொம்ப அவமானமா போச்சு.
அடுத்தநாளும் வழக்கம் போல் சாயாக்கடையில் உக்காந்திருந்தேன்.
அன்றைக்கும் சாலமது வரவில்லை.
என் நெருங்கின தோஸ்த் காதர் அங்க வந்தான்.
" என்ன மாப்ளே ... உன் கூட்டாளி வாக்கிங் ரூட்டை மாத்திட்டானோ...பெரிய தெரு வழியா போறதைப் பார்த்தேனே ..."என்றான்.
" யாரையாவது பார்க்க போயிருப்பான் மாப்ளே ... " என்றேன்.அதற்குப் பிறகும் அங்கே இருக்கப் பிடிக்காமல் வீட்டிற்கு வந்து விட்டேன்.
வீட்டுக்கு வந்த எனக்கு மனம் சமாதானமாகவில்லை.
பணம் கிடைக்காதது கூட வருத்தமாகத் தெரியவில்லை.
சாலமது ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்பதுதான் அதிக வேதனையைத் தந்தது.
மனக் குழப்பத்துடனேயே அந்த நாள் கழிந்தது...
இரவில் படுக்கும்போதுகூட தூக்கம் வராமல் மனது எது எதையெல்லாமோ நினைத்தது.
.....

நோன்புக்கு சகர் செய்துவிட்டு சுப்ஹும் தொழுதுவிட்டு படுத்தேன். பத்து மணிவரை ஒரு தூக்கம் போட்டால்தான் சுறுசுறுப்பாக வியாபார வேலைகளை பார்க்க முடியும்.

எட்டுமணி இருக்கும் .
காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு எரிச்சலோடு போய் கதவைத் திறந்தால்
இரண்டு வெளியூர் பெண்கள் ஜக்காத்து கேட்டு வந்து நின்றார்கள்.
என் வீட்டுக்காரி ஏதோ பணம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
என்னைக் கண்டதும் ஒரு கிழவி ...
" வாப்பா ... குமர் இருக்கு. கல்யாணம் செஞ்சு கொடுக்கணும் . ஏதாவது தாங்க வாப்பா .."என்று சொல்ல ஆரம்பித்தாள்.

எனக்கு தூக்கம் கலைந்த கோபம்.
" காலையிலேயே பொறப்பட்டு வந்துருங்க . மனுஷனை தூங்க விடாம ..ச்சே...
போங்க ... வேறே எங்கேயாவது போயி கேளுங்க " ன்னு சொல்லிட்டு கதவை
வேகமாகச் சாத்தினேன்.
" நாயை வெரட்டுற மாதிரில்லா வெரட்டுராறு. சே என்ன மனுஷன் ?" ன்னு
அந்த பொம்பளைங்க பொலம்பிட்டு போனாங்க.
வீட்டுக்காரி ... " இப்படியெல்லாம் பண்ணாதிங்க . ரொம்ப தப்பு. அல்லாஹ்வை பயந்துக்குங்க "ன்னு சொன்னா.
" இன்னா பாரு.. இந்த மிசாபர் கூட்டத்துக்கு ஏதாவது கொடுத்தே எனக்கு கெட்ட கோபம் வரும்" னு வீட்டுக்காரியை அதட்டி வைத்தேன்.
மதியம் இரண்டிலிருந்து நாலுவரை என் சுக நித்திரை நேரம்.வேலைகளை முடித்துவிட்டு வந்து ஹாலில் படுத்தேன்.
கண்களை தூக்கம் தழுவ ஆனந்த உறக்கம்.
மூணு மணி இருக்கும். காலையில் வந்ததைப்போல இன்னொரு கும்பல்.
ஜக்காத்து வாங்கவந்த இவர்களின் தொல்லை ஓவராப்போச்சேன்னு எனக்கு கோபம். கோபம்னா அப்படி ஒரு கோபம் .
அவங்களயும் சத்தம் போட்டு விரட்டி விட்டேன். அப்போதும் என் மனைவி என்னை கண்டித்தாள்.
நான் கண்டு கொள்ளவில்லை.
எலக்ட்ரீசியன் காஜாவை போன் பண்ணிக் கூப்பிட்டு காலிங் பெல் கனெக்சனை கட் பண்ணிவிட்டேன்.
மறுநாள் கேட்டின் உள்ளே ஒரு பூட்டு .
யாரும் பெல்லும் அடிக்க முடியாது. கேட்டைத் திறந்து உள்ளேயும் வரமுடியாது.
நோன்பு சுகமாகக் கழிந்தது.
......

காலையில் எழுந்ததும் சுபுஹு தொழுதுவிட்டு பள்ளியில் ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தேன்.
மோதியார் வந்து " பாய் ... கதவை சாத்தானும் . நீங்க இன்னும் கிளம்பலையா"ன்னு கேட்டாரு.

" நான் சாத்திகிட்டு போறேன் பாய். நீங்க புறப்படுங்க "ன்னு சொல்லிட்டு அப்படியே இருந்தேன்.
மனசுக்குள் மானசீகமாய் நான் விரட்டியடித்த முசாபர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
இறைவன் என் மன்னிப்பை ஏற்றுக் கொண்டானோ என நினைக்கும் வகையில்
கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மனசு லேசாக பள்ளியை விட்டு வெளியே வரும்போது
பணப்பிரச்சினை காணாமல் போய்விடும் என்ற நம்பிக்கை பிறந்திருந்தது...
சூரிய உதயத்தைப்போல !
 Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails