Tuesday, December 13, 2016

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருகையினால் வைய்யகம் பெற்ற பயன்

மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி

ஆசிரியர் - அல் அஸ்ரார் மாத இதழ்

அகில உலகத்தின் அருட்கொடையாய், முழு உலக முன்மாதிரியாய், பாருலக பேரொளியாய், ஈருலக இரட்சகராய், பாவிகளுக்கும் பரிந்து பேசும் பரிந்துரையாளராய், அகில உலகில் அவதரித்தவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவர்களின் வருகையால் இவ்வுலகம் இருள் நீங்கி விடிவு கண்டது, அறியாமை அகன்றது, மடமைகள் மறைந்தன. கல்லாமை இல்லாமல் ஆனது, கண்மூடித்தனங்கள் மண்மூடிப் போயின.

நிறவெறிகள் நிர்மூலமாயின, மொழி வெறிக்கு குழி தோண்டப்பட்டது. பெண்கள் பிறப்புரிமைப் பெற்றார்கள். சத்தியம் நிலைநாட்டப்பட்டது, அசத்தியம் அகன்றது. ஆணவமும், அகம்பாவமும் அடங்கியது, விக்ரகங்கள் வீழ்ந்தன. அல்லாஹ் ஒருவனே என்னும் தாரக கலிமா தாரணியில் தலைதூக்கியது, முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்னும் மோன மந்திரம் விண்ணளவு ஒலித்தது. ஓதிட குர்ஆன் உலகம் வந்தது. வாழ்வு நெறிகள் வகுத்தளிக்கப்பட்டன.
ஏழைகள் வயிற்றில் இரணம் இறங்கியது, வறுமை மரணத்திற்கு முடிவு கட்டப்பட்டது, திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டன. நாகரீக வாழ்விற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அநாகரீகம் தன் முகவரியை மறந்தது. கொடுக்கல் வாங்கல் முறைபடுத்தப்பட்டது. வியாபாரம் ஒழுங்குபடுத்தப்பட்டது, பிள்ளைகள் பேணி வளர்க்கப்பட்டனர். சகோதரத்துவம் சமாதானம் சமத்துவம் சமைக்கப்பட்டது.
மனித வாழ்வின் வெற்றிக்கு வித்திடப்பட்டது, மனித நேயங்கள் மலர்ந்தன. மாற்றாருடனும் இணங்கி நடக்கும் இங்கிதம் பிறந்தது, பிணக்கங்கள் களைந்தன, இணக்கங்கள் இறவா வரம் பெற்றன. மனித உயிர்கள் மதிப்பளிக்கப்பட்டன. உடமைகளுக்கும், உதிரங்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஜீவகாருண்யம் வலியுறுத்தப்பட்டது. மிருகங்கள் மதிக்கப்பட்டன. மிருக குணங்கள் அகற்றப்பட்டன.
கோபம், கொலை, களவு, சூது, காமம் இன்னபிற இழி குணங்கள் இடித்துரைக்கப்பட்டன. உண்மை, வாய்மை, நேர்மை, பொறுமை, நிலைநிறுத்தப்பட்டன.
பொறாமை பொசுக்கப்பட்டது. தீண்டாமை தீய்க்கப்பட்டது, தீவினைகள் தீயிலிடப்பட்டன. தீதும் நன்றும் திறம்பட தெரிவிக்கப்பட்டன. பெற்றோர்கள் பெருமதிப்புடன் பேணப்பட்டனர். உடன் பிறந்தோர்களிடையே உள்ளன்பு பிணையப்பட்டது. வாரிசுரிமை வரையறுக்கப்பட்டது, பகிர்ந்துண்ணும் பண்பு பாதுகாக்கப்பட்டது. உரியவர்களிடம் உரிமைகள் ஒப்படைக்கப்பட்டன.
விட்டுக்கொடுத்தல், கட்டுப்படுதல் விதைக்கப்பட்டன. அன்பு பாச நேசங்கள் பரிமாறப்பட்டன. மென்மை மேன்மைப்பெற்றது. இல்லாதோர் இயலாதோர் தேவைகள் நிறைவேற்றப்பட்டனர்.
இப்படியாக, இன்னும் மேலும் என எழுதிக்கொண்டே செல்லத்தக்க வகையில் நற்குணங்கள் அனைத்திற்கும் நாயகமான அண்ணல் பிறந்த அன்று அல்லல் அகன்றது நல்லவை நிலைத்தது அல்லவை அகன்றது.
அந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெருமாண்பின் பிறப்பைப் போற்றுவோம். அதன் சிறப்பை சாற்றுவோம். வள்ளல் பிறந்தார்கள் வைய்யகம் தளைத்தது, மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது.
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails