அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
சகோதர, சகோதரிகள் சென்ற தொடரை படித்துவிட்டு பட்ஜெட் போட துவங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முயற்சி செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ் வெற்றி நமதாகும். 13வது தொடரில் சிக்கனத்தை பற்றி பார்த்தோம். மேலும் சேமிப்பு, சிக்கனம் இவைகளை தொடர்வோம்.
பிள்ளைகளின் சேமிப்பு :
தாய்மார்களுக்கு : வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு தனித்தனியாக ஒரு உண்டியல் வாங்கி கொடுத்து விடுங்கள். மண் உண்டியல் உடைந்து விடும். தகரம், இரும்பில் உண்டியல்கள் கடையில் கிடைக்கிறது. இதில் காசு நிறைய சேர்த்து விட்டால் உனக்கு தேவைப்பட்ட பொருட்களை வாங்கி கொடுப்பேன் என்று சொல்லுங்கள். மேலும் தங்களிடம் காசு கேட்டால் நீ சேர்த்து வைத்துள்ள காசில் எடுத்து வாங்கிக் கொள் என்று சொல்லுங்கள். பிள்ளைகளுக்கு ஒரு பொறுப்பு வருவதை உணர்வீர்கள்.
வாங்கும் பொருட்களில் சிக்கனம் :
ஒரு கிரைண்டர் வாங்கினால் ஒரு கிரைண்டர் இலவசம். ஒரு மிக்ஸி வாங்கினால் ஒரு மிக்ஸி இலவசம். ஒரு ஸ்டவ்விற்கு ஒரு ஸ்டவ் இலவசம். இது போன்ற பொருட்களை வாங்காதீர்கள். ஒரு பொருள் குறைந்த பட்சம் 5 வருடத்திற்காவது உழைக்க வேண்டும் என்றால் நல்ல தரமான கம்பெனிகள் தயாரிக்கும் பொருட்களை வாங்குங்கள்.
விலை குறைவாக இருக்கிறது என்று இலவசத்துடன் வரும் பொருட்களை வாங்காதீர்கள். பாதி விலையில் கிடைக்கிறதே என்று பயன்படுத்திய பொருட்களையும் வாங்காதீர்கள். எந்த மின் சாதனங்கள் (உதாரணத்திற்கு பிரிட்ஜ், வாஷிங் மெஷின்) வாங்கினாலும் தரமான கம்பெனியின் பொருட்களையே வாங்குங்கள். பொருட்கள் வாங்கும்பொழுது ஒரே கடையில் வாங்கி விடாமல் இரண்டு மூன்று கடைகளில் சென்று விலைகளை பார்த்து எங்கு குறைவாக கிடைக்கிறதோ அந்த கடையில் வாங்குங்கள்.
துணிமணிகள்:
நம் சமுதாய பெண்மணிகள் கண்ணை மூடிக்கொண்டு 4 ஆயிரம் 5 ஆயிரத்திற்கு சேலைகள் வாங்குகிறார்கள். இதற்கு மேலும் விலை அதிகமாக எடுப்பவர்களும் இருக்கிறார்கள். (ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால் இவள் மாதிரி சேலை வாங்க முடியுமா? இவள் சேலை எடுத்தாலே விலை உயர்ந்ததுதான் என்று மற்ற தோழிகள் பெருமையாக பேச வேண்டுமாம்). (பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு கிடக்கிறது என்று நினைப்பது போல்).
வீண் விரயம்:
எனது அலுவலகத்தில் வேலை செய்த ஆபீஸ் பாய் சொன்னது: (கும்பகோணத்திற்கு பக்கத்து ஊர்) இவரின் தந்தை முனிஸிபாலிட்டியில் வேலை செய்கிறார். இவர்கள் ஊருக்கு பணம் அனுப்பி அவர்கள் தாயார் கையில் கிடைத்தவுடன் அவர்கள் செய்யும் முதல் வேலை வாடகை ஆட்டோவில் கும்பகோணம் சென்று (வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக இல்லை) தொலைக்காட்சியில் செய்து காட்டிய உணவு வகைகளை குறிப்பெடுத்து அந்த பொருட்களை தேடி அலைந்து வாங்கி வந்து செய்து பார்ப்பார்களாம். எவ்வளவு பணம் அனுப்பினாலும் தாயார் பணம் பற்றவில்லை என்ற புலம்பல்தானாம். பொழுது போக்கு சமையல் செய்வதற்காக மாதா மாதம் வீண் விரயமாக ஒரு தொகை போய்க்கொண்டு இருக்கிறது. சமுதாய பெண்களுக்கு மார்க்கம் சரியான வழியில் சென்றடையவில்லை. வீண் விரயத்தை வல்ல அல்லாஹ் கண்டிக்கிறான் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.(அல்குர்ஆன்: 7:31)
ஆகவே சகோதர, சகோதரிகளே: வீடு கட்டுவது, துணிமனிகள் வாங்குவது, வீட்டிற்கு மின்சாதன பொருட்கள் வாங்குவது, வீட்டில் சமைத்து சாப்பிடும் உணவு பொருட்களுக்கு செலவழிப்பது இப்படி எந்த காரியத்திலும், ஆடம்பரம் கலக்காமல், பிறர் பாராட்ட வேண்டும் என்று நினைக்காமல், அவசியமா? அவசியமில்லையா? என்பதை சரிகண்டு பிறகு நாம் செய்யும் காரியத்தில் வீண் விரயம் இருக்கிறதா? நம்முடைய காரியத்தில் வல்ல அல்லாஹ்வின் திருப்தி கிடைக்குமா? நம் மனதிற்கு திருப்தியாக இருக்கிறதா? என்று மட்டும்தான் பார்க்க வேண்டும். ஊருக்காக, ஆடம்பரத்திற்காக எந்த ஒரு காரியமும் இருக்காமல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
தள்ளுபடி:
ஆடித்தள்ளுபடி வருடா வருடம் போடுவார்கள். காரணம் அவர்களின் மூட நம்பிக்கையின்படி இந்த மாதம் நல்லமாதம் கிடையாது. அதிகம் பேர் கையில் பணமும் இருக்காது, (ஏன் பணம் இருக்காது என்று தெரியவில்லை) கேள்விப்பட்டேன். அதனால் நிறைய துணிக்கடைகள் காற்று வாங்கிக் கொண்டு இருக்கும். இந்த கடைகள் கண்டுபிடித்ததுதான் ஆடித்தள்ளுபடி.
இந்த நேரத்தில் தங்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் தேவைப்பட்ட துணிமணிகளை சாதாரணமாக பயன்படுத்தவும், நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள் வரைக்கும் சேலை, சுடிதார், பிள்ளைகள் துணிகள் என்று அனைத்தையும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். (எந்தந்த ஊர்களில் தள்ளுபடியில் தரமான துணிகள் கிடைக்கிறது என்று தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது).
இதனால் அடையும் பலன்கள் குறைவான விலையில் துணிகள் வாங்குவதோடு நாம் மீதப்படுத்தும் பணத்தில் அக்கம் பக்கம் உள்ள ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் துணிகள் எடுத்துக் கொடுக்கலாம்.(தருமம் செய்த நன்மை கிடைக்கும்) நோன்பு மாதத்தில் 20வது நோன்பு முதல் பெருநாள் முதல் நாள்வரை துணிகள் வாங்க அலைந்து புனித மாதமான நோன்பில் அமல்கள் செய்யாமல் புறக்கணிப்பது பாதுகாக்கப்படும். புனித மாதத்தின் நன்மைகள் முழுவதுமாக கிடைத்து நிம்மதியாக அமல்கள் செய்யலாம்.
சில பெண்களிடம் தள்ளுபடி விலையில் துணிகள் வாங்கலாம் என்றால் தள்ளுபடி துணிகளை உடுத்தும் அளவுக்கு தரம் தாழ்ந்தா போய்விட்டோம் என்று கூறுகிறார்கள். சேமிப்பின் அவசியம் அவர்களுக்கு புரியவில்லை. விலை உயர்ந்த துணிகள்தான் உடுத்துவார்களாம். இனி வரும் காலங்களில் தள்ளுபடி போடாமல் எந்த வியாபாரமும் நடக்காது என்று சொல்லும் அளவுக்கு வருடம் முழுவதும் தள்ளுபடி திருவிழாவை காணலாம் (தரமான துணிகளும் தள்ளுபடியில் கிடைக்கும்). நமக்கு தேவை குறைந்த விலையில் மனநிறைவான துணிகள் இது போதாதா?
வளைகுடா சகோதரர்களின் சிக்கனம்:
லூயி பிலிப் (Louis Philipe Shirts ) வேன் ஹிஉசேன் (Van heusen shirts ) ஏஎல்எம் (ALM shirts) (என்ன கடனைப்பற்றி எழுதி விட்டு, சட்டை துணிமணிகள் விற்பதற்கு ஏஜெண்டாகி விட்டீர்களா? என்று நினைக்க வேண்டாம்) நிறைய சகோதரர்கள் பிராண்டடு (Branded) என்ற வார்த்தையை அதிகம் உபயோகப் படுத்துவதை காணமுடிகிறது. நல்ல கம்பெனிகளில் தரமான அழகான பேண்ட், ஷர்ட்களும் வெளிவருகிறது. அதேநேரத்தில் கிச்சனில் பயன்படுத்தும் துணிகள் போன்றதையும் 100திர்ஹம் (ரூபாய் 1000) த்திற்கு மேல், 160திர்ஹம் (கிட்டத்தட்ட 2ஆயிரம் ரூபாய்) இந்த விலையில் கடைகளில் பார்க்க முடிகிறது.
சில நேரங்களில் (கிச்சனில் பயன்படுத்தும்) விலை உயர்ந்த சட்டைகளை கவலையே படாமல் கையில் இருக்கும் பிளாஸ்டிக் மணியை கொடுத்து நம் சகோதரர்கள் வாங்கிச் செல்கிறார்கள். பக்கத்தில் பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்கு மனதிற்கு சங்கடமாக இருக்கும். சம்பாரிக்கிறோம் என்ற நினைப்பில் இப்படி பொறுப்பற்று இருக்கிறார்கள் என்று. இப்பொழுதும் இந்த கம்பெனி துணிகளை எல்லா இடங்களிலும் தள்ளுபடி போட்டிருக்கிறார்கள். எப்படி இரண்டு சட்டை எடுத்தால் ஒரு சட்டை இலவசமாம். மேலும் குறிப்பிட்ட துணிமணிகள் (Half is Back – Half Priced Items) பாதி விலை தள்ளுபடி என்ற புதுவித தள்ளுபடி ஆரம்பமாகியுள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம்: வளைகுடா நாடுகள் என்று இல்லாமல் எல்லாநாடுகளிலும் மெகா தள்ளுபடி போட ஆரம்பித்து விட்டார்கள். அதன் பெயர்களை தாங்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது. கோடைகால தள்ளுபடி, குளிர்கால தள்ளுபடி, ரமலான் தள்ளுபடி, வாரத்தள்ளுபடி, ஸ்பெஷல் தள்ளுபடி, ஸ்டாக் கிளியரென்ஸ் தள்ளுபடி இது போக 50 சதவீத , 70 சதவீத தள்ளுபடியும் சில நேரங்களில் இருக்கும். சாதாரண நாட்களில் விருப்பட்டதை எடுங்கள். இந்த தள்ளுபடி காலங்களில் ஒரு வருடத்திற்கு தேவைப்படும் துணிகளை எடுத்து வைத்துக்கொள்ளலாம். நிறைய சேமிப்பு கிடைக்கும்.
பிராண்டடு உள்ள துணிகள் அதிக விலைக்குத்தான் எடுக்க முடியும் என்று நினைக்கலாம். எடுக்க வேண்டாம் என்று கூறவில்லை. தள்ளுபடியே இல்லை என்றால் எடுக்கலாம். தள்ளுபடி காலங்களில் எடுத்து வைத்துக்கொண்டால் ஒரு வருடத்திற்கு உபயோகப்படும். மேலும் நமக்கு பணம் மீதப்படும். இந்தப்பணத்தில் ஏழை உறவினர்களுக்கு உதவி செய்யப்பயன்படுத்தலாம். நமக்கு சேமிப்பாகவும் இருக்கும்.
சிக்கனமா? கஞ்சத்தனமா?
சகோதர, சகோதரிகளே! நான் சிக்கனத்தைப் பற்றித்தான் சொல்லி வருகிறேன். சிக்கனமாக இருக்க சொல்கிறார்கள். நாம் சிக்கனமாக செலவு செய்து யாருக்கும் கொடுக்காமல் நமக்கு மட்டும் சேர்த்து வைத்துக் கொள்வோம் என்று நினைக்காதீர்கள். சிக்கனம் என்பது வேறு கஞ்சத்தனம் என்பது வேறு. சிக்கனத்தால் வாழ்வு சீரடையும். கஞ்சத்தனம் நம்மை நரகில் கொண்டு போய் சேர்த்து விடும்.
கஞ்சத்தனம் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (தர்மம் செய்யாது) கருமித்தனம் செய்பவர் மற்றும் தர்மம் செய்பவருக்கு உதாரணம் அவ்விருவரின் மீதும் இரும்பினால் ஆன கேடயம் (முழுக்க அவ்விருவரையும் மூடிக் கொண்டவாறு) உள்ளது. (அந்நிலையிலிருக்கும்) தர்மம் செய்து கொண்டிருந்தவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரானால் அது அவருக்கு விஸ்தீரணமாகிக் கொடுக்கும். முடிவாக அவரிலிருந்து ஏற்பட்ட தவறுகளின் அடிச்சுவடுகளை அது அழித்து விடும். கருமித்தனத்தை உடையவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரனால் (அவர் மீது இருக்கும்) கவசமானது அவரை நெருக்கும். அவருடைய இரு கைகளும் அவரது கழுத்தின்பால் இணைந்து கொள்ளும் (அதிலுள்ள) ஒவ்வொரு வளையமும் அவரை இருக்கிக் கொள்ளும். அதை அவர் விசாலமாக்கிக் கொள்ள அவர் பெரிதும் முயல்வார் ஆனால் அதற்கு சக்தி பெறமாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
- அலாவுதீன். S.
No comments:
Post a Comment