Tuesday, March 15, 2011

2011 ஹஜ் பயண விண்ணப்பங்கள் நாளை முதல் கிடைக்கும்!


"2011 ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்படும்" என்று தமிழ் நாடு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.


"தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ் 2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.

ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை(நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர்,  மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011(நாளை) முதல் பெற்றுக் கொள்ளலாம். அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில்,
* ஒரு குழு/உறையில் விண்ணப்பங்கள், ரத்த-உறவு முறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும்.  இவ்வுறையி/குழுவில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது.

* விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ, அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

* பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், கடவுச் சீட்டின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவங்களை 30 ஏப்ரல் 2011-ற்குள் மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தங்கள் வசம் பாஸ்போர்ட் இல்லாதவர்கள், முதலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திடமிருந்து பெற்ற ரசீதின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்: 31634038682-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் பன்னாட்டு பாஸ்போர்ட் இருப்பின் அதன் நகலை அல்லது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தால் மண்டல  பாஸ்போர்ட் அலுவலக ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 ஆகும். ஹஜ் 2008, 2009 மற்றும் 2010-ல், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தெரிவு செய்யும் திட்டத்தைத் தொடர்வது என மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.

ஹஜ் 2011-ல் இச்சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சக பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக விண்ணப்பித்த உறை எண் விபரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். (இவ்வாறு வைக்கப்படும் விண்ணப்ப உறைகளில் புதிய விண்ணப்பதாரர்கள் எவரையும் சேர்க்கக்கூடாது). இவ்விண்ணப்பதாரர்கள் குலுக்கல் இன்றி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற தகுதியைப் பெறுவார்கள். இவ்வாறு சிறப்பு வகையில் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் மற்றும் ஹஜ் 2011-ற்கு விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பங்களை பெறும் கடைசி நாள் வரையில், சிறப்பு வகை விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள இருக்கைகள் பொதுவகையில் அளிக்கப்பட்டு, அவ்விருக்கைகளுக்கு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்தி தேர்வு செய்யும்.

மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக சிறப்பு வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் மாநில ஹஜ் குழு, சிறப்பு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குலுக்கலை நடத்தும்; பொது வகையில் புதியதாக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  மத்திய ஹஜ் குழுவால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில், கணினி மூலமாக குலுக்கலை நடத்தி தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகளுக்குத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவிக்கும். குலுக்கல் மூலமாக பயணிகள் தேர்வு செய்யப்படுவது முற்றிலும் தற்காலிகமானது.

குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட ஹஜ் பயணிகள், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் புகைப்படத்தை இணைத்து, அந்த பாஸ்போர்ட்டுடன் ரூ.31,000/- செலுத்தியதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து 15.6.2011-க்குள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்"
என்று தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : http://www.inneram.com/2011031514565/2011-haj-applications-will-get-from-tommorow

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails