Tuesday, March 1, 2011

அளவற்ற அருளாளன் .. நிகரற்ற அன்பாளன்.

  by டாக்டர் ஹிமானா சையத்
"அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்"
என்கிறோம். என்றாலும் மனித மனம் அந்த அளவு என்ன? என்று அளந்து
பார்க்க முயல்வது இயல்புதானே? அந்த வகையில் உங்கள் விளக்கம் என்ன? " என்று கேட்டார் நண்பர்.

   "எந்த அளவுகோலைக் கொண்டு அளந்து பார்க்க நினைக்கிறீர்கள்?
மனிதன் படைத்த  ஸ்கேல், தராசு இவற்றாலா? அல்லது பிற அளவுகோல் கருவிகளின் துணையுடனா? " என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன்.

அவர் பதில் சொல்லாமல் புன்முருவலுடன் என்னையே கூர்ந்து நோக்கினார்.

  பதில்பெறத்துடிக்கும் மாணவனின் துடிப்பையும்,ற்றுத் தர முனையும் ஆசிரியர் ஒருவரின் முனைப்பையும் ஒரு சேர அவரது கண்கள் என்னுள் பாய்ச்சின.என் கிளினிக்கில் சில வாரங்களுக்கமுன் நிகழ்ந்த ஒரு உரையாடல் சம்பவம் என் நினைவுக்கு உடனே வந்தது.
  வெளிநாட்டில் தொழில் புரியும் என் நண்பர் அவர். அவரது மனைவியின்
உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தாயகம் வந்திருந்தார். என் பரிந்துரையில் மதுரை, சென்னை நகரங்களுக்கு விரிவான மருத்துவ ஆய்வுகளுக்கும் சிகிச்சைக்கும் சென்றுவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கொடுத்த இரண்டு பெரிய கோப்புகளைச் சுமந்து கொண்டு அவர் வந்திருந்தார். அவரது மனைவிக்கு சிறுநீரகக் கோளாறு. ரத்தத்திலிருந்து உடலுக்குத் தேவையற்ற -அப்படித் தங்கினால், தீமை விளைவிக்கும் நச்சுப் பொருட்களை அப்புறப்படுத்தும் தனது
தலையாய பணியிலிருந்து இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாகத்
தவறிவிட்டன. நோயாளி உயிர்வாழ வேண்டுமானால், அந்த நச்சுப்
பொருட்களை செயற்கையாக வெளியேற்றியாக வேண்டும். வாரம்
இருமுறை அல்லது மும்முறை!
  "ஒரு முறை அப்படி நச்சுப் பொருட்களை வெளியேற்றும் சிகிச்சை செய்து கொள்வதற்கு கிராமத்திலிருந்து அருகிலுள்ள மதுரை நகருக்குச் சென்று வர எவ்வளவு செலவு பிடிக்க்லாம்? " நண்பர் கேட்டார்.

  "டாக்ஸிக்கு போக வர 1300 -1500 ஆகலாம். சிகிச்சை மற்றும்
மருந்துக்கு சுமார் 5000 ... இதர செலவுகள் தேவைக்கேற்ப .... "
 "ஆக வாரத்துக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய் வச்சிருக்கனும்னு சொல்லுங்க" என்றார் நண்பர்.
"ஆம்!ஷ்டம்தான்...! உங்கள் துணைவியாரின் ஹார்ட் நல்லபடியாக இருக்கிறது. சர்க்கரை கூட கட்டுக்குள் இருக்கிறது. உங்களோட உறவு வட்டத்தில் யாராவது ஒருவர் ஒரு கிட்னியை தானமாகக் கொடுத்தால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைசெய்துவிடலாம். ... கொஞ்சம் அதிகம் செலவாகும்... ஆனால், இது ஒரே செலவு! ஆயுள் முழுக்க செயற்கைச் சிறுநீகரம் மூலம் அழுக்கை அகற்றும் செலவோடு கணக்கிட்டு ஒப்பிட்டால், இது குறைந்த செலவு...அதே நேரத்தில் சிறப்பான சிகிச்சை!யோசியுங்கள்" என்றேன்.
அவர் பதில் சொல்லாமல், எதையோ வெறித்தார்.மனப் போராட்டத்தை முகம் பிரதி பலித்தது!
இறுக்கமான -தர்ம சங்கடமான நொடிகள் நகர்ந்தன.
எப்படி அவருக்கு ஆறுதல் சொல்வது?
எங்கிருந்து அதைத் தொடங்குவது?
என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது
"கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொள்ளவா? " என்று கேட்டுக் கொண்டே, மேஜை மீது இருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார். குடிக்கும்
போது தன் வாய்க்குள் 'பிஸ்மி" சொல்வதை நான் கவனித்து விட்டேன்.
அவர் தண்ணீர் குடித்து முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு, "பாய்! என்ன சொல்லி இப்போது தண்ணீர் குடித்தீர்கள்? " என்றேன்.
"பிஸ்மி சொல்லி "
"அதன் பொருள்? "
"அளவற்றஅருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகியஅல்லாஹ்வின் திருப்பெயரால்..."
"ரொம்ப மகிழ்ச்சி ... அதை சற்றே திரும்பத் திரும்ப மனதில் கொண்டு வந்து யோசியுங்கள்.... உங்கள் குழப்பத்துக்குத் தெளிவு கிடைக்கும்.... குழப்பம் மறையும்" என்றேன்.
அவர் புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தார்!
"பாய்! உங்கள் மனைவிக்கு அவரது கிட்னி பழுதுபடும் வரை 45 வருடங்களாக
ஒழுங்காகவே செயல்பட்டுக் கொண்டிருந்து பயன்பட்டிருக்கிறது, இல்லையா? அப்பணிக்காக அது ஒரு பைசா கூட உங்களிடமிருந்து வசூல் செய்யவில்லை, இல்லையா? இந்தப் பின்னணியில் கொஞ்சம் சிந்தியுங்கள்...
இறைவன் நமக்குத் தந்திருக்கிற ஒவ்வொரு உறுப்பின் அருமையும்பெருமையும் அவ்வுறுப்பு தன் செயல்திறனை இழக்கும் போதுதான் நமக்குப் புரிகிறது, இல்லையா? "
அவர் கண்ணிமைக்காமல் நான் சொல்வதையே
பார்த்துக் கொண்டிருந்தார்.
"சும்மா ஒரு கணக்குப் போடுவோம்... வாராவாரம் 5000 .... மாதம்
20,000 ... ஆண்டுக்கு சுமார் இரண்டரை லட்சம் ... ஆ45 வருடங்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு இந்தக் கிட்னிஇலவசமாக
உழைத்துவிட்டுத்தான் இப்போது ஓய்ந்திருக்கிறது... ஓய்வு பெற்றிருக்கிறது, இல்லையா?" நண்பர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

 அந்த நேரத்தில் நான் அவரிடம் இப்படி ஒரு நீண்ட உரையாடலை வளர்ப்பதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அவர் நல்லவர்; இனிய பண்பாளர்...என்றாலும் வணக்க வழிபாடுகளில்... மார்க்க அனுஷ்டானங்களில் எல்லாம் அவ்வளவு கவனம் செலுத்துபவர் அல்ல...நினைத்தால் தொழுவார்...

இஸ்லாத்தின் அனைத்து அடிப்படைக் கடமைகள் விஷயத்திலும் கூட பொடுபோக்கானவர்தான்.மனைவி, குழந்தைகளும் கூட அவர் மாதிரியேதான்!
நான் பேசப் பேச ... நான் என்ன சொல்லவருகிறேன் என்பதை
முற்றிலுமாக உள்வாங்கிக் கொண்ட உணர்வை அவரது கண்கள் எனக்கு
உணர்த்தி, மேலும் விளக்கமளிக்கும் தேவையைக்  குறைத்தன.
பெரு பெருமூச்சை உதிர்த்துவிட்டு பேசத்தொடங்கினார்.
"யெஸ் டாக்டர்.... யூ ஆர் ரைட்... ரொம்பச் சரியான நேரத்துல
எனக்குப் பல உண்மைகளை உணர்த்திட்டீங்க ... "
"நோ... நோ... அல்லாஹ் உணர்த்திட்டான்னு சொல்லுங்க .." என்று
நான் அவசரமாகத் திருத்தினேன்.
 அவரே சொன்னார்...
"என் மனைவியோட கிட்னி செத்துப் போச்சுங்கறது வாஸ்தவம்தான்...ஆனா...
அவங்களுக்குச் சிகிச்சையளிக்க எனக்குப் பொருளாதார வசதியை அல்லாஹ்
கொடுத்திருக்கான்.... அவங்க ஹார்ட் இப்ப ஆரோக்கியத்துடன் இருக்கு...
உறவினர்கள் யாரும் கிடைக்காவிட்டாலும்,¡ காசு கொடுத்து கிட்னி வாங்கி
செயற்கையா பொருத்திக்க அவகாசத்தையும் அல்லாஹ் தந்திருக்கான்.. அதைத்தானே சொல்ல வர்ரீங்க? "

  "ரொம்ப சரியாச் சொன்னீங்க...இந்தப் பின்னது ரொம்ப முக்கியமான விசயம்...
எனக்குத் தெரிய இப்படிப்பட்ட எத்தனையோ பேருக்கு காசு பணம் இருந்தாலும்... உடல்நிலை ஒத்துப் போகாததாலயோ அல்லது உடல்நிலை நல்லா இருந்தாலும் பணவசதி இல்லாமலோ சர்ஜரி செஞ்சுக்க முடியாமப்
போயிருக்கு..."
"ஆமா, டாக்டர்... அல்லாஹ் எங்க மேல ரொம்பவே தன்னோட அருள்
மழையப் பொழிஞ்சிருக்கான்...பாசத்தைக் காட்டியிருக்கான்...
அன்பால போஷிச்சிருக்கான்னுதான் சொல்லனும்"

அல்ஹம்துலில்லாஹ்!(புகழனைத்தும் இறைவனுக்கே).

இனிமேல் அவருக்கு உணர்த்த வேண்டியதில் என்ன பாக்கி..?

  அல்லாஹ்வின் அன்பை - அருளை அளவிடுவது எப்படி என்று
என்னிடம் கேள்வி தொடுத்த என் நண்பருக்கு அந்த உரையாடலை
விளக்கினேன்.
  அவர் இஸ்லாத்தின்பால் ஈர்ப்புக்கொண்ட கிறித்தவ அன்பர்.
முஸ்லிம்களோடு ஓர் அணுக்கத்தை ஏற்படுத்திக்கொண்டவர்.

 அந்த என் பதிலில் அவர் எந்த அளவுக்கு திருப்தி கண்டார் என்பதை
வெளிப்படையாகச் சொல்ல வில்லைதான்.என்றாலும் பாண்டிச்சேரியிலிருந்து தஞ்சாவூர் வரைக்குமான எங்கள் கார்ப்பயணத்தில் தொடர்ந்த எங்களது உரையாடல் அவர் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டார்
என்பதையே எனக்கு உணர்த்தியது.
.
ஹிமானா சையத்About HimanaA medical doctor, author, publisher(40 BOOKS TODATE), orator, educational field worker, community based social activities, counseling, photography,etc

Hony. editor, NARGIS Tamil monthly


நம்பிக்கையை மட்டும் இழக்காதே. ஏனெனில் உன் அருகாமையில் அல்லாஹ் இருக்கின்றான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails