Friday, March 25, 2011

இஸ்லாம் பற்றி அறிஞர் அண்ணா


என்னுடைய பொதுவாழ்வில் மதங்களின் ஆராய்ச்சியிலும் அவற்றிலுள்ள குறை நிறைகளை ஒரளவு ஆராய்ச்சியில் கவனம் காட்ட முனைந்ததே சந்தர்ப்பத்தின் சந்திப்புக்களால் சமைந்ததுதான். என்னுடைய பொதுவாழ்வின் துவக்கக் காலத்தில் நான் மேடையைத் தேடிப் பிடிக்க வேண்டியவனாயிருந்தேன். வலிய வரும் அழைப்பெல்லாம் பொதுவாக மதாச்சார மேடைகளாகவே இருந்தது. சில சமயம் அம்மாதிரி மேடைகளில் நிர்ப்பந்தத்துக்காக்கூட ஏறுவதுண்டு. சில நேரம் அதிலுள்ள குறைநிறைகளைக் கூறவும் ஏறுவதுண்டு. இந்த சந்தர்ப்பம், என்னை மத ஆராய்ச்சியில் வலியவே தள்ளிவிட்டது. ஒன்றினை அறிய, அதில் எழும் ஐயங்களுக்காக – மற்றொன்றை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு – படிப்படியாக அம்மதங்களின் முக்கிய நூல்களைப் படித்து முடித்து விடும் நிலைக்கே கொண்டு வந்து விட்டது.

எனக்கும் இஸ்லாத்துக்கும் ஏற்பட்ட பிணைப்பு இந்த வகையில் ஏற்பட்ட பிணைப்பல்ல! நான் வசிக்கும் காஞ்சீபுரம் ஒலி முஹம்மது பேட்டை இஸ்லாமிய நண்பர்களுடனும், மார்க்க பேரறிஞர்களான ஆலிம்களுடனும் என் இளமை முதல் உற்ற நண்பர்கள் என்கிற போழ்து, குடும்பத்தோடு குடும்பமாய்க் கலந்து சகோதர வாழ்க்கை நடத்தியவன் நான். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான, இறைமறை திருக்குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்து கொள்ளும்வாய்ப்பு என் இளமைக்காலத்திலேயே என் இதயத்தில் இடம்பிடித்து விட்டது. திருக்குறளை நான் தெரிந்து கொண்ட காலத்திலேயே திருக்குர்ஆனையும் நான் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
நன்றி : vapuchi.wordpress.com/அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails