இங்கிலாந்து நாட்டவரான சகோதரர் இத்ரிஸ் தவ்ஃபிக் கிருஸ்துவ (ரோமன் கத்தோலிக்கர்) பாதிரியாராக இருந்து, சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர். அவர் தற்சமயம் சிங்கப்பூரில் தொடர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். முதல்நாள் சொற்பொழிவின் கேள்வி-பதில் நேரத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் சிறு கட்டுரை வடிவில்....
இரண்டே வார்த்தைகளில் தஃவா! இலாபம் பெருகும் பங்கு வணிகம்!!
இரண்டே வார்த்தைகளில் தஃவா செய்ய முடியுமா?
முடியும் என்கிறார் சகோதரர் இத்ரிஸ் தவ்ஃபிக். அவருடைய மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்தது ஒரு சிறுவனின் வார்த்தைகள்.
"ஒரு சிறுவனின் மூலமாகத்தான் எனக்கு இஸ்லாம் அறிமுகமானது. கெய்ரோ நகர வீதி ஒன்றில் ஷூ பாலிஷ் செய்பவன் அவன். விடுமுறைக்காக எகிப்து வந்திருந்த நான், ஒருநாள் வீதியில் அவனைச் சந்தித்தபோது, வெள்ளைக்காரனாகிய என்னைப் பார்த்து முகமலர்ச்சியுடன், 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்றான் அவன். 'உங்கள் மீது சாந்தி நிலவட்டும்' என்ற இந்த வார்த்தைகள் அவனுடைய உள்ளத்திலிருந்து வந்தது என்பதை நான் உணர்ந்தேன்"
"முதன் முதலாக எகிப்திற்குச் சென்றிருந்த நான், சில அரபிச் சொற்களை கற்று வைத்திருந்தேன். அடுத்த நாள் அந்தச் சிறுவன் இருக்கும் வீதியில் சென்றபோது, 'எப்படி இருக்கிறாய் நண்பனே?' என்று அரபியில் கேட்டேன். அவன் அதே முகமலர்ச்சியுடன் 'அல்ஹம்து லில்லாஹ்' என்றான். எல்லாப் புகழும் இறைவனுக்கே!"
"அதற்குமுன் நான் பல முஸ்லிம்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் யாரும் என்னிடம் பேசியதில்லை. என் உள்ளத்தைத் தொடும் வகையில் என்னிடம் பேசிய முதல் முஸ்லிம் அந்தச் சிறுவன்தான். முஸ்லிம்கள் என்றால் குண்டு வைப்பவர்கள், கையை வெட்டுபவர்கள், பெண்களைக் கொடுமைப் படுத்துபவர்கள் என்றெல்லாம் ஊடகங்கள் என் மனதில் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை அச்சிறுவனின் வார்த்தைகள் உடைத்துப் போட்டு விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
சகோதரர் இத்ரிஸுக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் தோன்ற இந்த நிகழ்வே காரணமாக இருந்தது என்கிறார் அவர். ஒரு வாரம் கழித்து இங்கிலாந்து திரும்பிய அவர் இஸ்லாம் பற்றி மேலும் அறிந்து கொள்வதில் நேரம் செலவிட்டார். சுமார் ஓராண்டிற்குப் பிறகு சகோதரர் யூசுப் இஸ்லாம் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவர் முன்னிலையில் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் சகோதரர் இத்ரிஸ்.
"அப்போது அந்தச் சிறுவனுக்கு 14 அல்லது 15 வயதிருக்கும். இப்போது அவன் ஒரு இளைஞனாக இருப்பான். அவனுக்குத் திருமணமாகி குழந்தைகள்கூட இருக்கலாம். அன்று அவன் சொன்ன அந்த எளிய வார்த்தைகள் என் வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை அவன் அறிய மாட்டான். கணக்குகள் சரிபார்க்கப்படும் அந்த மறுமை நாளில் அவனுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அவனுடைய நன்மை-தீமைகளின் பட்டியல் படிக்கப்படும்போது அவன் நினைப்பான், 'அவ்வளவுதான்.. நான் செய்த நன்மைகள் எல்லாமே பட்டியலிடப்பட்டு விட்டன'. அப்போது வானவர்கள் மேலும் பட்டியலைத் தொடர்வார்கள். அவனுடைய வார்த்தைகளின் தாக்கத்தினால் சொல்லப்பட்ட ஷஹாதத் கலிமாக்கள், எழுதப்பட்ட புத்தகங்கள், கட்டுரைகள், மேடைப்பேச்சுகள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள்.. இவை அனைத்தின் நன்மைகளிலும் நிச்சயம் அவனுக்குப் பங்கு இருக்கும்." என்று நெகிழ்ந்து கூறுகிறார் சகோதரர் இத்ரிஸ்.
அல்லாஹ் அந்த இளைஞனின் இம்மை, மறுமை வாழ்வை சிறக்கச் செய்வானாக!
- சலாஹுத்தீன்
Courtesy: www.satyamargam.com
Source : http://www.satyamargam.com/
No comments:
Post a Comment